தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்திசெய்ய தயார் நிலையில் இருப்பதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது. பொதுமக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. நாடு தழுவிய அளவில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவும் நிலையில், ஆக்சிஜனை உற்பத்தி செய்து இலவசமாக வழங்கத் தயாராக இருப்பதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்தது. இதையடுத்து, 4 மாத காலத்துக்கு ஆக்சிஜனை மட்டும் உற்பத்தி செய்ய தமிழக அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில், வேதாந்தா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், செயல்பாட்டுக்கு முந்தைய அனைத்து சோதனைகளையும் மேற்கொண்டு, உற்பத்திக்கு தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலைக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டவுடன், உற்பத்தியைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் வேதாந்தா நிறுவனம் கூறியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஆலையை மூட தூத்துக்குடி மக்கள் எதிர்த்து போராட்டம் நடத்தினர். 100 நாட்கள் நடந்த போராட்டத்தின் முடிவில் மனு கொடுக்க கலெக்டர் அலுவலகம் நோக்கி நடந்த பேரணியில் கலவரம் வெடித்தது. போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதை அடுத்து ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.