• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வயிற்றுக்கு உணவு, வாழ்வாதாரத்திற்கு நிவாரண உதவி.. கொரோனா தொற்று காலத்தில் நம்பிக்கை கொடுக்கும் தன்னார்வலர்கள்!

வயிற்றுக்கு உணவு, வாழ்வாதாரத்திற்கு நிவாரண உதவி.. கொரோனா தொற்று காலத்தில் நம்பிக்கை கொடுக்கும் தன்னார்வலர்கள்!

நம்பிக்கை கொடுக்கும் தன்னார்வலர்கள்

நம்பிக்கை கொடுக்கும் தன்னார்வலர்கள்

வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களின் நிலையைக் கருத்தில் கொண்டு, மத்திய மாநில அரசுகள் பல திட்டங்கள், சலுகைகள், நிவாரண உதவிகள் அறிவித்தாலும் அவை போதுமா என்றால் கேள்விக்குறிதான்.

  • Share this:
கொரோனா என்ற பெருந்தொற்றினால் மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி உள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வயிற்றுக்கு உணவு, வாழ்வாதாரத்திற்கு நிவாரண உதவி, நம்பிக்கைக்கு யோகா பயிற்சி என பல தன்னார்வலர்கள் முன் வந்து செய்வதால் கொரோனா என்ற அரக்கனை வெற்றெடுக்கும் நம்பிக்கையுடன் பயணித்து வருகின்றனர் கோவில்பட்டி நகர மக்கள்.. உதவிக்கரத்தினால் மக்கள் மனதில் நம்பிக்கை விதைத்து வருகின்றனர் மனிதநேயமிக்க நல்ல உள்ளங்கள்.

கொரோனா என்ற ஒற்றை சொல் பல உலக நாடுகளை திணற வைத்தது மட்டுமின்றி பலரின் வாழ்வாதாரம் மற்றும் வாழ்வினை மாற்றி அமைத்துள்ளது. தமிழகத்திலும் கொரோனா தொற்றின் பரவலை தடுக்க கடந்த ஆண்டு முதல் மாதக்கணக்கில் நீண்டுகொண்டிருக்கும் ஊரடங்கின் காரணமாக, சாமான்ய மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. தினந்தோறும் உழைத்து தங்களது வாழ்வினை நடத்தியவர்கள் செய்வதறியமால் திகைத்து வருகின்றனர். ஒரு நாள் பொழுதினை கழிப்பதை கூட ஒரு யுகமாக மாற்றிவிட்ட கொரோனா ஊரடங்கில் அனைவரின் மனதிலும் இருந்த மனிதாபிமானம் துளித்துள்ளது என்பது மறுக்க முடியாத விஷயமாக உள்ளது.

வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களின் நிலையைக் கருத்தில் கொண்டு, மத்திய மாநில அரசுகள் பல திட்டங்கள், சலுகைகள், நிவாரண உதவிகள் அறிவித்தாலும் அவை போதுமா என்றால் கேள்விக்குறிதான். பல இயற்கைப் பேரிடர்களின்போதும் இதுபோல வாழ்வாதார சிக்கல் தலைவிரித்தாடியது. அப்போது, அரசு மட்டுமின்றி பல தன்னார்வலர்களும் களத்தில் இறங்கி மக்கள் துயர் துடைத்தனர். கொரோனா காலத்திலும் இப்படியான தன்னார்வலர்கள் பலர் மக்களுக்கு உதவ முன்வந்தது செம்மையாக செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் பல மனித நேயம் கொண்ட உள்ளங்கள், தன்னார்வலர்கள் அற பணி காரணமாக வாழ்வாதரம் இழந்தவர்கள், ஆதரவற்றவர்கள், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகள் கிடைக்கப்பட்டு பெற்று வருகிறது

கோவில்பட்டியை சேர்ந்த பிரபல ரெடிமேட் ஆடை உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான ரிஜெண்ட் குரூப் கம்பெனி சார்பில் அதன் உரிமையாளர் ஹரிபாலகன் தனது நிறுவனம் சார்பில் அரசுக்கு ரூ.10லட்சம் நிதி உதவி அளித்தது மட்டுமின்றி கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வரும் 250 பேருக்கு தினமும் காலை உணவினை அளித்து வருகிறார். தனது சொந்த இடத்தில் உணவு தயாரித்து நற்பணியை செய்து வருகிறார். தினமும் தக்காளி சாதம், சம்பார் சாதம், பொங்கல் இவற்றில் ஒரு சாதம் மற்றும் ஒரு முட்டையும் வழங்கி வருகிறார்.



எங்களது நிர்வாகம் சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.10லட்சம் வழங்கியுள்ளோம். வேறு எந்தவகையிலாவது உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கும் போது, தனக்கு தெரிந்த மருத்துவ நண்பர்களிடம் கேட்கும் போது, அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு  உணவு வழங்கலாம் என்றனர். இதையெடுத்து தினமும் காலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 250 நபர்களுக்கு முட்டையுடன் கூடிய உணவு தினமும் வழங்கி வருவதாகவும், இனி வேறு எந்த வகையிலும் உதவ வாய்ப்பு இருந்தால் அதனை செய்யும் தயராக இருப்பதாக கூறுகிறார் ரிஜெண்ட் குரூப் கம்பெனி உரிமையாளர் ஹரிபாலகன்.

இவரைப்போன்று இயற்கை என்ற அறக்கட்டளையை சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞர் தினமும் கோவில்பட்டி நகரில் ஆதரவற்றவர்கள் 100 பேருக்கு உணவு மற்றும் குடிதண்ணீர் கேன் ஆகியவற்றை வழங்கி வருகிறார்.

உணவுக்கு நம்பிக்கை தரும் இவர்களை போன்று கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டர்களுக்கு மனதளவில் நம்பிக்கை தரும் முயற்சியை தனது யோகா பயிற்சி மூலமாக செய்து வருகிறார் கோவில்பட்டி யோகலாயா அமைப்பினை சேர்ந்த யோகா மாஸ்டர் குணா.

கோவில்பட்டியில் யோகா பயிற்சி தரும் தன்னார்வலர்


இன்றைக்கு வளர்ந்துள்ள நவீன உலத்தில் சொல்போன் இல்லாதவர்கள் யாரூம், அந்த நவீனத்தினை பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக கொரோனாவில் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு மூச்சு பயிற்சி மற்றும் யோகா பயிற்சிகளை தினமும் நடத்துகிறார். காலை மற்றும் மாலை வேளையில் 45 நிமிடங்கள் ஆன்லைன் மூலமாக நடத்துகிறார். கோவில்பட்டி நகர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் தொடர்பு கொள்ள கூடியவர்களுக்கு ஆன்லைனில் யோகா பயிற்சி அளிக்கிறார். தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களும் இவரது சேவையை பெறுகின்றனர். தினந்தேறும் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆன்லைனில் இலவசமாக யோகா பயிற்சி அளித்து நம்பிக்கை கொடுத்து வருகிறார்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் ஆன்லைன் மூலமாக தேவையான பயிற்சிகளை அளித்து வருவதாகவும், முகநூல் மூலமாக இலவசமாக பயிற்சி அளிக்கவுள்ளதாகம் தெரிவித்தவுடன் பலரும் தொடர்பு கொண்டு ஆன்லைன் மூலமாக பயிற்சி பெற்று வருவதாகவும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் உள்ளவர்களும் பயிற்சி பெறுவதாகவும், கொரோனா முதலில் தொடங்கியதாக கருதப்படும் சீனா உகான் பகுதியில் இருந்து கூட கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் யோகா பயிற்சி பெற்று வருவதாகவும், ஆக்சிஜன் சீராக வைக்க மூச்சு பயிற்சி முக்கியம் என்று கூறுகிறார்

இவரிடம் பயிற்சி பெற்றவர்கள் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் மூலமாக பெற்ற பயிற்சி பயனுள்ளதாக இருக்கிறது என்று கூறுகின்றனர்.

இன்றைய கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்காக 24 மணி நேரமும் பணியாற்றி வருபவர்கள் காவல்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள். அப்படிப்பட்ட காவல்துறை மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு 2 முட்டை மற்றும் குடிநீர் பாட்டில் ஆகியவற்றினை வழங்கி வருகிறார் கோவில்பட்டியை சேர்ந்த முட்டை வியாபாரியான பட்டாதரி இளைஞர் விக்னேஷ். வாரத்தில் சனி மற்றும் ஞாயிறு இரு நாள்கள் பணியில் இருக்கும் காவல்துறை மற்றும் தூய்மை பணியாளர்களை தேடி சென்று 2 முட்டை மற்றும் குடிநீர் பாட்டில்கள் வழங்கி வருகின்றார்.

கொரோனா  என்ற இக்கட்டான காலத்தில் மக்களுக்காக பணியாற்றி வருபவர்கள் காவல்துறை மற்றும் தூய்மை பணியாளர்கள். இவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று நினைத்த நேரத்தில், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முட்டை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளதால் முட்டை மற்றும் குடிநீர் பாட்டில் வழங்கி வருவதாகவும், இனி முட்டையுடன் சுண்டல் வழங்குவும் முயற்சி எடுத்து வருவதாக கூறுகிறார் இளைஞர் விக்னேஷ்.

இவ்வாறு தொழில் அதிபர்கள், இளைஞர்கள் ஒரு புறம் முயற்சி செய்து வரும் நிலையில் கோவில்பட்டியில் காவல்துறை சார்பிலும் ஊரடங்கினை வாழ்வாதரம் பாதிக்கப்பட்ட மக்கள், திருநங்கைகளுக்கு மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் அரிசி, மளிகை மற்றும் காய்கறி ஆகியவற்றை வழங்கினார்.

கொரோனா என்ற பெருந்தொற்றினால் ஒரு புறம் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி இருந்தாலும் இது போன்ற நம்பிக்கை அளிக்கும் மனித நேய உள்ளங்களினால் எவ்வித இடர்பாடுகளையும் எளிதில் வென்றிட முடியும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது என்றால் மறுக்க முடியாது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: