கல்வி கண் தந்த காமராஜர் பெயரில் அரங்கேறிய அவலம்... நிற்கதியாக நிற்கும் மாணவர்கள்

தனியார் சிபிஎஸ்இ பள்ளி, அரசின் உரிய அனுமதி பெறமால் செயல்பட்டு வந்தது மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் ஆய்வில் வெட்டவெளிச்சமாகி உள்ளது.

  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள பாண்டவர்மங்கலம் ஊராட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த காமராஜ் இன்டர்நேஷனல் அகடாமி சிபிஎஸ்இ பள்ளி, அரசின் உரிய அனுமதி பெறமால் செயல்பட்டு வந்தது மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் ஆய்வில் வெட்டவெளிச்சமாகி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள பாண்டவர்மங்கலம் ஊராட்சியில் காமராஜ் இன்டர்நேஷனல் அகடாமி என்ற தனியார் சிபிஎஸ்இ பள்ளி கடந்த 2017ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 200-க்கும் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த சூழ்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களை அழைத்த பள்ளி நிர்வாகம் இந்தாண்டு சிபிஎஸ்இ தேர்வு எழுதவதில் சிரமம் இருப்பதாகவும். அதற்கான அனுமதி வாங்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளனர்.

இதையெடுத்து தான் அப்பள்ளி அங்கீகாரம் இல்லமால் செயல்பட்டு வருவதும், தற்பொழுது தான் அங்கீகாரத்திற்கு முயற்சி செய்து கொண்டு இருக்கும் தகவல் தெரியவந்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் பள்ளியில் அங்கீகாரம் இல்லை என்பது தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட தகவலும் பெற்றோர்களுக்கும் தெரியவந்துள்ளது.

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு மாணவர்கள் எழுத வேண்டும் என்றால் 9-ம் வகுப்பு படிக்கும் போதே ஆன்லைனில் விண்ணப்பம் செய்து, அதற்கான மாணவர்களுக்கு அனுமதி எண் (இஎம்ஐஎஸ்) வாங்க வேண்டும் என்ற விதிமுறைகள் இருக்கும் போது கடந்த ஆண்டு பள்ளி நிர்வாகம் வாங்கமால் இருந்தது ஏன் என்று பெற்றோர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பள்ளிநிர்வாகம் சரியான காரணங்களையும், மாற்று ஏற்பாடுகள் குறித்தும் எவ்வித பதில் கூறவில்லை. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களில் சிலர் கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலங்களில் தங்களது குழந்தைகளின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு தேர்வு எழுத சிறப்பு அனுமதி பெற்று தர வலியுறுத்தி நடையாக நடந்து கொண்டு இருக்கின்றனர்.

Also Read : நான் போராட வரவில்லை என்ன நடக்கிறது என்று பார்க்க வந்தேன் -  முன்னாள் அமைச்சர்  வளர்மதி

30 ஆயிர ரூபாய்க்கு மேலாக கல்வி கட்டணம் செலுத்தி தங்களது குழந்தைகளை தேர்வுக்கு தயார்படுத்திய நிலையில் தற்பொழுது தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் என்ன செய்வது என்று தெரியமால் தவியாய் தவித்து வருகின்றனர் மாணவர்களின் பெற்றோர்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக  இந்த பள்ளி தமிழக அரசின் அங்கீகாரம் கூட பெறமால் செயல்பட்டு வந்தது மட்டுமின்றி கடந்த மாதம் தான் அங்கீகாரம் பெற மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் அனுமதி பெற விண்ணப்பம் செய்துள்ளது. இதையெடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி பள்ளியை ஆய்வு செய்த போது, அரசு விதிமுறைகளின் படி கட்டிட வசதி இல்லை, அதனை செய்யதால் மட்மே பள்ளிக்கு அங்கீகாரம் வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

அப்போது தான் பள்ளியில் 10-ம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கை செய்யப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தமிழக அரசு அங்கீகாரம் இருந்தால் மட்டும் தான் சிபிஎஸ்இ பிரிவில் 9 மற்றும் 10 வகுப்பு மாணவர் சேர்க்கை செய்ய முடியும் என்ற விதிமுறை இருக்கும் போது, எவ்வாறு மாணவர் சேர்க்கை நடைபெற்றது என்று கேள்வி எழுப்ப அனுமதி வாங்கிவிடுவோம் என்று நம்பிக்கையில் தான் என்று பள்ளி முதல்வர் கூலாக கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read : தனியார் மருத்துவமனையில் சிகிச்சை - வீடு திரும்பினார் விஜயகாந்த்

ஒரு பள்ளி நடைபெறுகிறது என்று ஒரு தகவல் கூட கொடுக்கமால் 5 ஆண்டுகள் கழித்து அரசு அங்கீகாரம் பெற காமராஜ் இன்டர்நேஷனல் அகடாமி நிர்வாகம் விண்ணப்பம் செய்யததது தற்பொழுது அம்பலமாகி உள்ளது. இதையெடுத்து அப்பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் 21 மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர். மனுவினை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் சங்கரநாரயணன், இப்பிரச்சினை தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் பேசி உள்ளதாகவும், குழந்தைகள் தேர்வு எழுத மாற்று ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பள்ளி கட்டிடம் ஆக்கிரமிப்பில் உள்ளதா என்பதனை கண்டறிய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கீகாரம் இல்லாத இந்த பள்ளியில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என்று ஊடகங்கள் மூலமாக கூறப்படும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வாக்குறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார். இதையெடுத்து பெற்றோர்கள் கலைந்து சொன்றனர்.

இப்பிரச்சினை தொடர்பாக அப்பள்ளியில் முதல்வர் ஜெயக்குமார் 10வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஆடியோ ஒன்றினை அனுப்பியுள்ளார். அந்த ஆடியோவில் வியாழக்கிழமைக்குள் நல்ல முடிவு எடுக்கப்படும், அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.  இந்த பிரச்சினை குறித்து செய்தியாளர்கள் பள்ளி முதல்வர் ஜெயக்குமாரிடம் கேட்ட போது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது, பெற்றோர்கள் அச்சப்பட வேண்டியதில்லை என்றார்.

இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரியிடம் கேட்ட போது கடந்த மாதம் காமராஜ் இன்டர்நேஷனல் அகடாமி பள்ளியில் இருந்து கடந்த மாதம் அங்கீகாரம் பெறுவது தொடர்பாக தனக்கு கடந்த மாதம் 15ந்தேதி விண்ணப்பம் வந்தது. இதையெடுத்து 27ந்தேதி பள்ளிக்கு ஆய்வு செய்த போது போதிய கட்டுமான வசதி இல்லை. மேலும் சிபிஎஸ்இ பள்ளி என்று தெரிவித்துள்ளனர். சிபிஎஸ்இ பள்ளிக்கான எந்த விதிமுறைகளும் பின்பற்றபடவில்லை என்பது தெரியவந்தது. 9,10 வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்றால் சிபிஎஸ்இயில் விண்ப்பம் செய்து மாணவர்களுக்கான அனுமதி எண் (இஎம்ஐஎஸ்) வாங்கி இருக்க வேண்டும்.

ஆனால் அவ்வாறு செய்யமால் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது தெரியவந்ததாகவும், விண்ணப்பத்தினை நிரகரிப்பு செய்ததது மட்டுமின்றி, இது குறித்து பள்ளி நிர்வாகத்திற்கு நோட்டிஸ் வழங்கியுள்ளதாகவும், மேலும் 10 வகுப்பில் இருப்பவர்களை அங்கீகாரம் செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் தேர்வு எழுத ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறிய பின்னர் தான் அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு இப்பள்ளியில் அங்கீகாரம் பெறவில்லை என்று தெரியவந்துள்ளது.

அவர்களும் குழந்தைகள் தேர்வு எழுத மாற்று ஏற்பாடு செய்ய மனு அளித்துள்ளதாகவும், இதற்கிடையில் பள்ளி நிர்வாகம் தரப்பில் பதில் அளித்துள்ளது மட்டுமின்றி, மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய கோரிக்கை வந்துள்ளதாகவும், தற்பொழுது 10 வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டு வருவது மட்டுமின்றி, 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அங்கீகாரம் உள்ள பள்ளிகளில் படிப்பதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாகவும், உரிய அங்கீகாரம் இல்லமால் மாணவர் சேர்க்கை நடத்தியது தொடர்பாக விசாரணை நடத்தி பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கல்வி வட்டாரங்களில் விசாரித்த போது 10 வகுப்பு மாணவர்கள் சிபிஎஸ்இ தேர்வு எழுதுவது சிரமம் என்றும், ஆனால் மெட்ரிக்குலேசன் அல்லது மாநில பாடத்திட்டத்தில் உள்ள தேர்வு எழுத முடியும் என்றும், அவ்வாறு என்றால் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் மாநில பாடத்திட்டத்தில் தேர்வு எழுத தயராகும் சூழ்நிலை உருவாகும் என்பதால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், எனவே அரசின் பள்ளிகல்வித்துறை தலையீட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக உள்ளது.

ஏழை,எளிய மக்களுக்கு எட்டக்கனியாக இருந்த கல்வி தமிழகத்தில் அனைவருக்கு கிடைக்க ஊர் தோறும் பள்ளியை திறந்து கல்வி கண் தந்த பெருந்தலைவர் காமராஜர் பெயரை வைத்து நடைபெற்ற இந்த அவலம் அனைவரையும் வேதனைபட வைத்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: