விளாத்திகுளத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்-ல் நள்ளிரவில் சாமி கும்பிட்டு விட்டு, பணத்தினை திருடி சென்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் எட்டயபுரம் சாலையில் ஹரிஹரன் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பங்கில் பணியாற்றும் ஊழியர்களான ராமசந்திரபுரத்தினை சேர்ந்த வேல்முருகன்(30), விளாத்திகுளம் காமராஜ் நகரைச் சேர்ந்த கிருஷ்ணன் (19) ஆகியோர் திங்கள்கிழமை இரவில் வேலையில் இருந்துள்ளனார். நள்ளிரவு 1.30 மணிக்கு மேல் பெட்ரோல், டீசல் போடுவதற்கு யாரும் வரவில்லை என்பதால் பெட்ரோல் பங்க் அறையில் வேல்முருகனும், வெளியில் உள்ள சேரில் கிருஷ்ணனும் தூங்கியுள்ளனர்.
Also Read: தாயின் காதலனால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. போக்சோ சட்டத்தில் இருவர் கைது
இந்நிலையில் அதிகாலையில் வேல்முருகன் எழுந்து பார்த்த போது பெட்ரோல், டீசல் பணம் வசூலிக்கும் பையில் இருந்த 8 ஆயிரம் பணம் திருடு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து வேல்முருகன், தனது உரிமையாளருக்கும் விளாத்திகுளம் காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்துள்ளார். போலீசார் விரைந்து வந்து பெட்ரோல் பல்க்கில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது, ஒரு வாலிபர் பெட்ரோல் பங்க் முன்பு பைக்கினை நிறுத்தி விட்டு, உள்ளே வந்து பங்க் அறையில் இருந்த சாமி படத்தினை பார்த்து கையெடுத்து கும்பிட்டு விட்டு, அறையில் படுத்து இருந்த வேல்முருகன் அருகில் ஆற அமர உக்கார்ந்து பணத்தினை எடுத்து எண்ணியது தெரியவந்தது.
Also Read: முகம் பார்க்காமல் மலர்ந்த காதல்.. இதயநோயால் காதலி இறந்ததால் காதலன் தற்கொலை
அந்த நபர் செல்போனில் மணியை பார்த்து விட்டு, ஹாயாக வெளியே செல்வது பதிவாகி இருந்தது. போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போது, அது குமரெட்டியபுரம் என்ற பட்டியூர் கிராமத்தினை சேர்ந்த கதிரேசன் மகன் ரமேஷ்குமார்(32) என்பது தெரியவந்தது. இதற்கிடையில் பெட்ரோல் பங்க்-ல் பணத்தினை திருடி செல்லும் வழியல் தனது விவசாய தோட்டத்திற்கு சென்ற விளாத்திகுளத்தினை சேர்ந்த முத்துராமலிங்கம் என்ற விவசாயியை வழிமறித்து, பணம் கேட்டுள்ளார். அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூற, அவரை அவதூறாக பேசி விட்டு, மிரட்டி விட்டு ரமேஷ்குமார் சென்றது தெரியவந்தது.
Also Read: செல்போன் பேச்சால் ஆத்திரம்.. திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் குத்திக்கொலை - கணவர் வெறிச்செயல்
இதனைதொடர்ந்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷ்குமாரை கைது செய்து, 6 ஆயிரம் பணம் மற்றும் பைக்கினை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள ரமேஷ்குமார் மீது விளாத்திகுளம் மற்றும் எட்டயபுரம் காவல் நிலையங்களில் திருட்டு,வழிப்பறி, மிரட்டல் என 9க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு அக்டோபர் 16ந்தேதி தனக்கு லிப்ட் கொடுத்த பரோட்டா மாஸ்டர் முருகன் என்பவரிடம் ரமேஷ்குமார் தனது கைவரிசையை காட்டி சிறை சென்றவர் என்பது குறிப்பிடதக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.