திருசெந்தூர் - பாளையங்கோட்டை இடையே சாலை விரிவாக்கத்துக்காக வெட்டப்படும் மரங்கள்- திட்டத்தை நிறுத்த மக்கள் கோரிக்கை

மாதிரிப் படம்

திருச்செந்தூர் - பாளைங்கோட்டை இடையே தொழில் வழிச்சாலை பணிக்காக ஏராளமான மரங்கள் வெட்டப்படுவதை நிறுத்தவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவைக்கின்றனர்.

 • Share this:
  திருச்செந்தூர் - பாளைங்கோட்டை இடையே தொழில் வழிச்சாலை பணிக்காக ஏராளமான மரங்கள் வெட்டப்படுவதாகவும், இதனால் பறவைகள் வேறிடங்களுக்கு இடம்பெயரும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

  சென்னை - கன்னியாகுமரி இடையே தொழில் வழிச்சாலை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் திருச்செந்தூரில் இருந்து வி.எம்.சத்திரம் வழியாக பாளையங்கோட்டை வரை 50.5 கிலோ மீட்டர் தூரம், தொழில் வழிச்சாலை அமைக்கும் பணி கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. இப்பணிக்காக 435 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  இத்திட்டத்தின்படி 7 மீட்டர் அகலமுள்ள சாலையானது, 10 மீட்டர் அகலம் கொண்டதாக மாற்றப்படுகிறது. பாளையங்கோட்டை முதல் திருச்செந்தூர் வரை 2.5 மீட்டர் அகலகத்தில் நடைபாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பாத யாத்திரையாக செல்லும் பக்தர்கள் வசதிக்காக 2 இடங்களில் ஓய்வு விடுதிகள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

  தொழில் வழிச்சாலை பணிக்காக சாலையின் இருபுறங்களில் உள்ள மரங்களும் வெட்டப்படுகின்றன. மரங்கள் வெட்டப்படும் முன், அதற்கேற்ப மரக்கன்றுகளை நட்ட பிறகே பணிகளை தொடங்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியும், அதை நெடுஞ்சாலைத்துறையினர் பின்பற்றவில்லை என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

  மரங்கள் அழிக்கப்படுவதால் பழந்தின்னி வவ்வால்கள் உள்ளிட்ட பல்வேறு பறவை இனங்கள் இடம்பெயரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஸ்ரீவைகுண்டம், ஏரல் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் வசிக்கும் பழந்தின்னி வவ்வால்கள், விதைப் பரவலாக்கத்துக்கு பெருமளவில் உதவி செய்யும் எனவும் கூறுகின்றனர்.

  இந்நிலையில், திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு நிழல் தரும் மரங்களை வெட்டக்கூடாது எனவும், இப்பணிகளை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படாத வகையில், தொழில் வழிச்சாலையை மேற்கொள்ள வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தூத்துக்குடி மாவட்ட மக்களின் கோரிக்கையாகும்.
  Published by:Karthick S
  First published: