தூத்துக்குடி மாவட்டத்தில் தலித் சமூகத்தினை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் போஸ் என்பவரை தாக்கியதாக அதே கிராமத்தை சேர்ந்த கருங்கதுரை என்பவரை போலீசார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள சுந்தரேஸ்வரபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் போஸ். தலித் சமூகத்தினை சேர்ந்தவர். சுந்தரேஸ்வரபுரம் கிராமத்தில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக அங்குள்ள சிமெண்ட் சாலைகளில் மண் அதிகமாக இருந்த காரணத்தினால் வாகன ஓட்டிகள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் சாலையில் தேங்கியுள்ள மழைநீர் மற்றும் மண்ணை அகற்றும் பணி நடைபெற்றது.
ஜேசிபி இயந்திரம் கொண்டு இந்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த கிராமத்தின் வடக்கு தெருவில் உள்ள சிமெண்ட் சாலையில் மண் அகற்றும் பணி நடந்து கொண்டு இருக்கும் போது, அந்த கிராமத்தினை சேர்ந்த சக்திவேல் என்பவரது மகன்கள் கருங்கதுரை, செந்தில்குமார் இருவரும், சாலையின் அருகே உள்ள தங்கள் இடத்தில் அகற்றும் மண்ணை ஒதுக்ககூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்த ஊராட்சி மன்ற தலைவர் போஸ்சினை கருங்கதுரை சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து, அவதூறாக பேசியது மட்டுமின்றி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த ஊராட்சி மன்ற தலைவர் போஸ் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில் போஸ் தாக்கப்பட்டது குறித்து தெரிந்ததும் அவரது மகன் கார்த்திக்ராஜ் , கருங்கதுரை தம்பி செந்தில்குமாரிடம் வந்து தனது தந்தையை எப்படி தாக்கலாம் என்று வாக்குவாதம் செய்துள்ளார். மேலும் செந்தில்குமாரை அவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த செந்தில்குமார் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஊராட்சிமன்ற தலைவர் போஸை தாக்கியதாக கருங்கதுரையை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அதே போன்று செந்தில்குமாரை தாக்கியதாக ஊராட்சி மன்ற தலைவர் மகன் கார்த்திக்ராஜினை போலீசார் கைது செய்துள்ளனர்.
Also Read: தாம்பரத்தில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்து - புதுமாப்பிள்ளை உட்பட 3 பேர் உயிரிழப்பு
மழையினால் சாலையில் தேங்கி கிடந்த மண்ணை அகற்ற நடவடிக்கை எடுத்த ஊராட்சி மன்ற தலைவருக்கு அடி உதை என்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இரு தரப்பினரும் வெவ்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் என்பதால் பிரச்சினை ஏற்படமால் இருக்கும் வகையில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Fight, Police, Police arrested