ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதங்கள் மட்டும் அனுமதிக்கலாம் - தமிழக முதல்வர்

ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதங்கள் மட்டும் அனுமதிக்கலாம் - தமிழக முதல்வர்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஆக்சிஜன் உற்பத்திகாக ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதங்களுக்கு மட்டும் அனுமதிக்கலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

  • Share this:
    இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை அசுரவேகமெடுத்திருக்கும் நிலையில் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று அதிகரிப்பால் சுவாசக் கோளாறு ஏற்பட்டு பலர் உயிரிழந்து வருகின்றனர்.

    செயற்கை சுவாசத்துக்காக ஆக்சிஜன் கிடைப்பதில் சிக்கல் நாடு முழுவதும் சிக்கல் உருவாகியுள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்தி செய்யத் தயாராக இருப்பதாக தெரிவித்தது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில், ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக அனைத்து கட்சிக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட்கட்சிகள், பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அத்துடன், உயர் அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பேசிய முதல்வர், ஸ்டெர்லைட்டை திறக்கவேண்டும் என்பது அரசின் நோக்கம் அல்ல. மூடியதே தமிழக அரசு தான். கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தேவையும் தற்போது அதிகரித்துள்ளது. ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதங்களுக்கு மட்டும் அனுமதிக்கலாம். ஆக்சிஜன் உற்பத்தியை உள்ளூர் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய குழு அமைத்து கண்காணிக்கப்படும் என்றார். அதேவேளை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பெரும்பாலான கட்சிகள் ஆக்சிஜன் உற்பத்திக்கு ஸ்டெர்லைட்டை அனுமதிக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளன.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்வது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட மக்களின் கருத்துகளை மாவட்ட ஆட்சியர் கேட்டபோது, ஆக்சிஜன் உற்பத்திக்கோ அல்லது வேறு எந்தச் செயல்பாட்டுக்கோ ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
    Published by:Sheik Hanifah
    First published: