Home /News /tamil-nadu /

தாலியை விற்று விவசாயம் பண்ணியிருக்கோம்.. விலை போகாததால் வெங்காய விவசாயிகள் கண்ணீர்

தாலியை விற்று விவசாயம் பண்ணியிருக்கோம்.. விலை போகாததால் வெங்காய விவசாயிகள் கண்ணீர்

வெங்காயம்

வெங்காயம்

  தொடர் மழையினால் வெங்காயம் நண்டுகால், அழுகல் நோய் தாக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டு, தரையோடு தரையாக போய் விளைச்சல் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விளாத்திகுளம், புதூர் பகுதியில் சுமார் 1லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த வெங்காய அறுவடை பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விளாத்திகுளம், புதூர், நாகலாபுரம், எட்டயபுரம், சூரங்குடி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில் உள்ள வெங்காயம் தரம் மற்றும் நல்ல சுவை இருக்கும் என்பதால் தமிழகம் மட்டுமின்றி இலங்கைக்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். இதனால் இப்பகுதி விவசாயிகள் ஆர்வமுடன் வெங்காயம் பயிர் செய்து வருகின்றனர். தனியாகவும், உளுந்து, மிளகாய், உள்ளிட்டவைகளிலும் ஊடு பயிராகவும் வெங்காயம் பயிர் செய்து வருகின்றனர்.

வெங்காயம்


ஒவ்வொரு ஆண்டும் மார்கழி, தை மாதங்களில் அறுவடை செய்து விற்பனை கொண்டு செல்வதை இப்பகுதி விவசாயிகள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்தாண்டு சுமார் 1லட்சம் ஏக்கர் மானவாரி நிலங்களில் விவசாயிகள் வெங்காயம் பயிரிட்டுள்ளனர். தொடக்கத்தில் பெய்த மழையின் காரணமாக கடந்த ஆண்டுவிட இந்தாண்டு அதிகளவில் விவசாயிகள் வெங்காயத்தினை பயிரிட்டது மட்டுமின்றி, மிளகாய், உளுந்து செடிகளுக்கு இடையே ஊடு பயிராகவும் விவசாயிகள் வெங்காயத்தினை பயிர் செய்து இருந்தனர்.

இடையில் வெங்காயத்திற்கு ஏற்பட்ட தட்டுப்பாடு, விலையேற்றம் ஆகியவை காரணமாக தங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்று நம்பி இருந்த விவசாயிகளுக்கு நண்டுகால் நோய் மற்றும் அழுகல் நோய் தாக்கத்தின் காரணமாக வெங்காயம் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்த மழையினால் செடிகளில் நீர் தேங்கி அழுகல் நோய் ஏற்பட்டதாகவும், காற்றில் அதிகளவு ஈரப்பதம் இருந்த காரணத்தினால் வெங்காயத்தின் தண்டுகள் நண்டுகால் நோயினால் பாதிக்கப்பட்டு வளர்ச்சியடையவில்லை என்கின்றனர் விவசாயிகள்.

வெங்காயம்


50ரூபாய் முதல் 65 ரூபாய் வரை விதை வெங்காயம் வாங்கி பயிரிட்டு, 4 முறை மருந்து தெளிந்து,களை எடுத்தல் என சுமார் ஒரு ஏக்கருக்கு 35 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை செலவு செய்த நிலையில், நோய் தாக்கம் காரணமாக விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் வெங்காய அறுவடை பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். கடந்த 10 தினங்களாக வெங்காய அறுவடை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விளைச்சல் குறைச்சல் ஒருபுறம் என்றால் விலையும் விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றித்தினை தந்துள்ளது. கடந்த காலங்களில் ஒரு கிலோ வெங்காயம் விதைப்பு செய்தால் 10 கிலோ கிடைப்பது வழக்கம். ஆனால் தற்பொழுது நோய் தாக்கத்தினால் ஒரு கிலோ வெங்காயம் கிடைப்பது கூட அரிதாகி விட்டதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோ வெங்காயம் தரத்திற்கு ஏற்ப ரூ 25 முதல் 45 ரூபாய் வரை கொள்முதல் செய்யபடுகிறது. வெங்காயத்தில் அழுகல் தாக்கம் இருப்பதை காரணம் காட்டி மொத்த வியாபாரிகள் குறைவாக விலை கேட்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

வெங்காயம்


உழவு செய்தல், விதை வெங்காயம், களை எடுத்தல், மருந்து தெளித்தல், அறுவடை என ஒரு ஏக்கருக்கு 50 ஆயிரம் செலவு செய்த நிலையில் போதிய விலை இல்லை என்பதால் தற்பொழுது அறுவடை செய்யும் தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுப்பதற்கும் மட்டும் தான் வருவாய் கிடைக்கிறது, தங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்று கண்ணீர் மல்க கூறுகின்றனர் வெங்காயம் விவசாயம் செய்த விவசாயிகள். வெங்காயத்தினை சேமித்தும் வீட்டில் வைக்க முடியாது என்பதால் வேறு வழி இல்லமால் வியாபாரிகள் கேட்கும் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

ஏற்கனவே வீட்டில் இருந்த தங்க நகைகளை அடகு வைத்தும், கடன் வாங்கியும் வெங்காயம் பயிரிட்ட நிலையில், விளைச்சலும், விலையும் இல்லை என்பதால் எப்படி கடன்களை அடைக்கபோகிறோம் என்று தெரியவில்லை என விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர். கடந்த ஆண்டு மழையினால் பாதிக்கப்பட்ட அரசு நிவாரண தொகை அறிவித்த போதிலும் தங்களுக்கு தற்பொழுது வரை அது கிடைக்கவில்லை, கடந்தாண்டுக்கான பயிர்காப்பீட்டு தொகையும் அனைத்து விவசாயிகளுக்கும் தற்பொழுது வரை இல்லை என்கின்றனர்.

வெங்காயம் விவசாயிகள்


தொடர் மழை, நோய் தாக்கத்தினால் வெங்காயம் தங்களுக்கு கை கொடுக்கவில்லை என்கின்றனர் வேதனையுடன் விவசாயிகள். விதை வெங்காயம் 60 ரூபாய் வாங்கிய நிலையில் விளைவித்த வெங்காயம் 45 ரூபாய்க்கு கூட விற்பனை செய்ய சிரமப்பட்டு வரும் நிலை உள்ளதாகவும், அரசு உதவிக்கரம் நீட்டவில்லை என்றால் இனி வரும் ஆண்டுகளில் வெங்காய சாகுபடி செய்வது குறைய தொடங்கும் என்று விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளாக தொடர் மழையினால் அழுகல் நோய் தாக்கம் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு பை விதை வெங்காயம் பயிரிட்டால் 10 பை வெங்காயம் விளைச்சல் முன்பு இருந்தது. ஆனால் தற்பொழுது அது இல்லை என்றும், தங்களுக்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டு வருவதாகவும், தொழிலாளர்கள் கூலியும் உயர்ந்துள்ளது. நிலத்தினை தரிசு போடக்கூடாது என்பதற்காக வேறு வழியில்லமால் கடன் வாங்கி விவசாயம் செய்து வருகின்றோம், ஆண்டுதோறும் விவசாயத்திற்கு ஒரு லட்சம் முதல் 2லட்சம் வரை செலவு செய்து வருமானம் இல்லமால் கடனாளியாகி வருகிறோம் என்கிறார் விவசாயி மோசை.

ரூ 45க்கு தான் தற்பொழுது விவசாயிகள் வெங்காயத்தினை கொள்முதல் செய்வதாகவும், அது அறுவடை பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு கூலி கொடுப்பதற்கு மட்டும் தான் பயன்படுகிறது. வெங்காயம் சாகுபடி செய்த தங்களுக்கு டீ,காபி குடிக்கும் அளவிற்கு கூட வருமானம் கிடைப்பதில்லை, அழுகல் இருப்பதாக கூறி குறைந்த விலைக்கு கேட்பதாகவும், வீட்டில் இருந்த நகைகள், தாலி முதல் கொண்டு விற்பனை செய்து தான் விவசாயம் செய்தோம். ஆனால் எதிர்பார்த்த அளவு விளைச்சலும் இல்லை, விலையும் இல்லை என்கிறார் கண்ணீருடன் பெண் விவசாயி ரூக்குமணி.

வெங்காயம் விவசாயம்


தொடர் மழையினால் வெங்காயம் நண்டுகால், அழுகல் நோய் தாக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டு, தரையோடு தரையாக போய் விளைச்சல் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மழைக்கு நிவாரணத் தொகை அறிவித்து இருந்த போதிலும் இப்பகுதியில் உள்ள 10,500க்கு விவசாயிகளுக்கு அந்த தொகை கிடைக்கவில்லை, பயிர்காப்பீட்டு தொகையும் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை, அரசு உதவி செய்தால் மட்டுமே தொடர்ந்து வெங்காயம் சாகுபடி செய்ய முடியும் இல்லை என்றால் இனி வரும் காலங்களில் வெங்காய சாகுபடி குறைய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டுள்ள வெங்காயம் குறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் முறையாக செய்து, தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்கு வேண்டும், நிலுவையில் இருக்கும் மழைக்கால நிவாரண தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும், மேலும் நெல்லுக்கு கொள்முதல் நிலையங்கள் இருப்பது போல தமிழக அரசு வெங்காயத்திற்கு கொள்முதல் நிலையம் அமைத்து நேரிடையாக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தாலியை கூட விற்பனை செய்து விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு அரசு உதவ வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக உள்ளது.
Published by:Ramprasath H
First published:

Tags: Agriculture, Farmers, Onion, Onion Price, Thoothukudi, White onion

அடுத்த செய்தி