தூத்துக்குடியில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவிலில் இன்று சித்திரை திருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. தேரினை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் வடம்பிடித்து இழுத்தனர்.
திருமந்திர நகர் என்று அழைக்கப்படும் தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில். இக்கோவில் தூத்துக்குடி மக்களால் சிவன் கோவில் என்று அழைக்கப்பட்டு வருகிறது. சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பத்து நாள் நடைபெறும் இந்த திருவிழாவில், நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் உலா வந்தாா். விழாவின் முக்கிய நாளான இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக கோவிலில் இருந்து, சுவாமி, அம்மன் பெரிய தேரிலும், விநாயர், சுப்பிரமணியர் சிறிய தேரிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தாா்.

அமைச்சர் கீதாஜீவன்
பின்னா் தேரோட்டத்தை தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும், மத்திய இணை அமைச்சருமான எல். முருகன், திமுக பிரமுகரும் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவன் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.

மத்திய இணை அமைச்சர் எல். முருகன்
தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுக்க தேரானது 4 ரத வீதிகளையும் சுற்றி மீண்டும் நிலையை வந்தடைந்தது.
Must Read : மதுரையே அதிர வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்... பிரமிக்க வைக்கும் புகைப்படங்கள்...
தேருக்கு முன்பாக சிலம்பாட்டம், ஒயிலாட்டம், பொய்கால்குதிரையாட்டம் உள்ளிட்ட கிராமிய கலைநிகழ்ச்சிகளின் அணிவகுத்து சென்றன.
பாதுகாப்பு பணியில் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.
செய்தியாளர் - பி. முரளி கணேஷ், தூத்துக்குடி. இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.