தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அயன்பொம்மையா புரத்தைச் சேர்ந்தவர் அந்தோணி மகன் ஜோதிமுத்து. லாரி டிரைவரான இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி உஷாராணி. இவருக்கு
சீமான் அல்போன்ஸ் மைக்கிள் (வயது 14) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். 2-வது மனைவி மகாலட்சுமி, உஷாராணியின் தங்கை ஆவார். இவருக்கு எட்வின் ஜோசப் என்ற 9 வயது மகன். சீமான் அல்போன்ஸ் மைக்கிள் விளாத்திகுளத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். எட்வின் ஜோசப் அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.
ஜோதிமுத்துவின் தம்பி ரத்தினராஜ் (37). இவரும் லாரி டிரைவர். இவர் கடந்த 22/03/20 அன்று சிறுவர்கள் 2 பேரையும் ஊருக்கு தெற்கு பகுதியில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக அழைத்து சென்றார். அதன்பின்னர் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது கிணற்றின் அருகே சிறுவர்களின் செருப்பு, சட்டைகள் இருந்தன. எனவே, அவர்கள் கிணற்றில் மூழ்கி இறந்ததாக சந்தேகமடைந்தனர்.
இது குறித்து விளாத்திகுளம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் குதித்து சிறுவர்களை தேடினர். இரவு 10 மணிக்கு கிணற்றில் இருந்து எட்வின் ஜோசப்பை இறந்த நிலையில் வெளியே கொண்டு வந்தனர். இரவு நேரம் என்பதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனையடுத்து முத்துக்குளி வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சீமான் அல்போன்ஸ் மைக்கிள் உடலை மீட்டனர்.
2 பேரின் உடல்களும் விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே, ரத்தினராஜ் அயன்பொம்மையாபுரம் கிராம நிர்வாக அலுவலர் பால்ராஜிடம் சரண் அடைந்து அளித்த வாக்குமூலத்தில், எனது அண்ணி உஷாராணியின் தங்கை மகாலட்சுமி எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவார். இதில் அவருக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டு அவரை நான் கோவைக்கு அழைத்து சென்றேன். இதனை அறிந்த எனது அண்ணன் கோவைக்கு வந்து எங்களை அழைத்து கொண்டு வீட்டுக்கு வந்தார்.
அப்போது அண்ணன் எங்களை கண்டித்தார். மேலும் மகாலட்சுமியை அவரே 2-வது திருமணம் செய்து கொண்டார். எனக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைத்தார். திருமணமான பின்னரும், நானும் மகாலட்சுமியும் பழகி வந்தோம். வீட்டில் யாரும் இல்லாதபோது நாங்கள் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்தோம்.
தற்போது பள்ளி விடுமுறை விட்டதால் பிள்ளைகள் வீட்டில் இருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நானும் மகாலட்சுமியும் தனிமையில் இருந்ததை சீமான் அல்போன்ஸ் மைக்கிள் பார்த்து என் அண்ணனிடமும், எனது தாயாரிடமும் சொல்லிவிட்டான். இதனால் என்னை அனைவரும் கண்டித்தனர்.
அதன்பின்னர் மகாலட்சுமி என்னிடம் பேசுவதை நிறுத்தினார். இதற்கிடையே, எனது மனைவி, என்னை பிரிந்து சென்று விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த நான், சீமான் அல்போன்ஸ் மைக்கிள் மற்றும் மகாலட்சுமியை கொலை செய்ய கடந்த ஒரு வாரமாக திட்டம் போட்டு காத்திருந்தேன்.
அப்போது, சீமான் அல்போன்ஸ் மைக்கிள், எட்வின் ஜோசப் ஆகிய 2 பேரும் கிணற்றில் குளிக்க அழைத்து செல்லுங்கள் என்று என்னை கேட்டனர். இதனை நான் பயன்படுத்திக்கொண்டேன். அந்த 2 பேரையும் கிணற்றில் குளிக்க அழைத்து சென்று அங்கு அவர்களை தண்ணீரில் தள்ளி கொலை செய்தேன். பின்னர் ஊருக்கு அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று பதுங்கினேன். பயத்தில் இருந்த நான் சரண் அடைந்து விட்டேன் என்று தொிவித்திருந்தாா்.
Must Read : மீண்டும் தலைதூக்கும் ரூட் தல பிரச்னை... கத்தியுடன் பொதுமக்களிடையே கெத்து காட்டிய கல்லூரி மாணவர்கள்- போலீஸ் விசாரணை
இது குறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரத்தினராஜை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை. 2வது கூடுதல் தூத்துக்குடி மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிலிப்ஸ் நிக்கோலஸ் அலெக்ஸ் ரத்தினராஜிற்கு வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
மேலும், இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து இந்த தண்டனையை ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்றும் 200 ரூபாய் அபராதம் விதித்தாா்.
செய்தியாளர் - பி. முரளி கணேஷ், தூத்துக்குடி. இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.