கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள் இல்லாத காரணத்தால் கர்ப்பிணிகள் மருத்துவமனை வளாகத்தில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லை என்பதால் பிரசவத்திற்கு வரும் கர்ப்பிணி பெண்கள் வெளியில் உள்ள பாதுகாப்பு இல்லாத செட்களில் காத்து இருக்கும் நிலை உள்ளது. பிரசவ வலி வந்தால் மட்டுமே படுக்கை வசதி தரப்படும் அவல நிலை உள்ளது. மேலும் அப்பகுதியில் கழிவுகள் தீயிட்டு எரிக்கப்படுவதால் நச்சு புகைகளை சுவாசித்து கொண்டு கர்ப்பிணி பெண்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கோவில்பட்டி நகரம் மாவட்டத்தில் மிகப்பெரிய நகரம், தீப்பெட்டி, விவசாயம், நூற்பாலை மற்றும் கடலைமிட்டாய் தயாரிப்பு என பல்வேறு தொழில்களை கொண்டுள்ளதால் ஏரளமான தொழிலாளர்கள் கொண்ட நகரமாக உள்ளது. மேலும் சுற்றுவட்டார மக்களின் அனைத்து தேவைகளுக்கு மிக முக்கிய நகரம் கோவில்பட்டி தான். அதிலும் குறிப்பாக மருத்துவ சேவைக்கு கோவில்பட்டி நகரினை நம்பியுள்ளனர். ஆகையால் தான் கோவில்பட்டி நகரில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
கோவில்பட்டி சுற்றுவட்டார மக்கள் மட்டுமின்றி, மாவட்டத்தின் எல்லையில் இருக்கும் நெல்லை, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த மக்களும் கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையை பயன்படுத்தி வருகின்றனர். தினமும் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்நோயாளிகள் பிரிவிலும் 500க்கு மேற்பட்ட மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிலும் குறிப்பாக பிரசவத்திற்கு அதிக மக்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனையை நாடிவருகின்றனர். இங்கு பிரசவத்திற்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் நாளுக்கு நாள் பிரசவத்திற்கு கர்ப்பிணி பெண்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் அதற்கு ஏற்ப படுக்கைகள் இல்லை.
Also Read: Exclusive:ரகசியம்.. பரம ரகசியம்: சட்டப்பேரவையில் பாடிய பாடல் குறித்து ஓபிஎஸ் தகவல்!
தினமும் 300க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்கு வரும் நிலையில் வெறும் 196 படுக்கைகள் மட்டுமே பிரசவ வார்டில் உள்ளதால் மற்றவர்களுக்கு கொடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது. இவர்களுக்கு மாற்று வசதி எதுவும் செய்யவில்லை என்பதால் பிரசவ வார்டு அருகே சிகிச்சை பெறுபவர்கள் உடன் தங்கி இருப்பவர்கள் மற்றும் பார்வையாளர்களுக்காக அமைக்கப்பட்ட செட்டில் கர்பிணி பெண்கள் இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் இரவும், பகலும் செட்டில் தங்கி உள்ளனர். பிரசவ வலி வந்தால் மட்டுமே அவர்களுக்கு பெட் வழங்கப்படும் சூழ்நிலை உள்ளது. அது மட்டுமின்றி நகராட்சி நிர்வாகம் குப்பைகளை வாங்க மறுப்பதால் பிரச வார்டு பகுதியில் குப்பைகளை எரிப்பதால் அதில் இருந்து வெளியேறும் புகையினாலும் கர்ப்பிணிகள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது.
அது மட்டுமின்றி கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவில் நோயாளிகளுடன் தங்குபவர்கள், வெளியில் அரசு மருத்துவமனை வளாகங்களில் தூங்க கூடாது என்பதற்காக அவர்கள் தங்குவதற்காக சுமார் 40 லட்ச ரூபாய் மத்தியரசு நிதி உதவியுடன் தனியாக கட்டடம் அமைக்கப்பட்டு கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. மேலும் அந்த கட்டித்தில் ஜீவ அனுக்கிராக என்ற தனியார் அறக்கட்டளை மூலமாக படுக்கைகள், மின்வசதி, குடிநீர் வசதி, கண்காணிப்பு கேமரா என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு அந்த கண்காணிப்பில் விடப்பட்டு இருந்தது. இதனால் நோயாளிகளுடன் தங்குபவர்கள் அதனை பயன்படுத்தி வந்தனர்.
வெளியூரில் இருந்து சிகிச்சை பெறுபவர்கள் உடன் இருப்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது. சிறப்பாக செயல்பட்டு வந்த கட்டடம் கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டது மட்டுமின்றி, கொரோனா சிறப்பு வார்டாகவும் செயல்பட்டது. ஆனால் தற்பொழுது கொரோனா தொற்று குறைந்துள்ளதால், அந்த கட்டடம் எவ்வித பயன்பாட்டிற்கும் இல்லாமல் மூடப்பட்டுள்ளது. அந்த அறை மூடப்பட்டுள்ளதால் சிகிச்சை பெறுபவர்களின் உடன் வந்தவர்கள் மருத்துவமனை வளாகத்தில் தங்கி இருக்கும் நிலை உள்ளது.
மழை, வெயில் என பல்வேறு இன்னல்களுக்கு இடையே அதில் கூட்டம் கூட்டமாக தங்கியுள்ளனர். எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை என்பதால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அந்த கட்டடத்தினை திறக்க பலரும் கோரிக்கை வைத்தும் திறக்கப்படவில்லை, மருத்துவனை நிர்வாகம் நகராட்சியும், நகராட்சி நிர்வாகம் மருத்துவமனை நிர்வாகத்தினை காரணம் காட்டி வருவதால் அந்த கட்டடம் திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
அந்த கட்டடம் அரசு மருத்துவனை வளாகத்தில் இருந்தாலும், அது நகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ளதால் அதனை திறப்பது குறித்து நகராட்சி நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. போதிய படுக்கைகள் இல்லாமல் கர்ப்பிணி பெண்கள் பரிதவித்து வர, மற்றொருபுறம் 40லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டடம் அமைக்கப்பட்டு அது செயல்படவில்லை என்பதால் சிகிச்சை பெறுபவர்களுடன் உடனிருப்பவர்கள் தங்கும் இடம் இல்லாமல் பரிதவிக்கும் நிலை உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் சங்கரலிங்கம் கூறுகையில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு அளிக்கப்படும் சிகிச்சை சிறப்பாக இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்கு வருவது அதிகரித்துள்ளது. ஆனால் அவர்களுக்கு போதிய கட்டடம் மற்றும் படுக்கை வசதிகள் இல்லை என்பதால் வெளியில் இருக்கும் நிலை உள்ளது. பிரசவ வலி வந்தால் மட்டுமே படுக்கை வழங்கப்படும் நிலை உள்ளது.அவர்களுடன் வருபவர்களுக்கு தங்குவதற்காக அமைக்கப்பட்ட கட்டிடம் திறக்கப்படமால் உள்ளது.இதனால் மழை, வெயில் என பல்வேறு சிரமங்களுக்கு இடையே பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதால் மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
பிரசவ வார்டில் சிகிச்சை பெற்று வரும் உறவினர் உதவிக்காக வந்த தமிழ்செல்வன் கூறுகையில், “ பிரசவார்டு பகுதியில் தினமும் குப்பைகளை எரிப்பதால் அதிகமான புகை வெளியேறி கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக கூறுகிறார்.
உறைவிட கட்டடத்தினை நிர்வகித்து வந்த ஜீவ அனுக்கிரஹா அறக்கட்டளை நிர்வாகி ராஜேந்திரன் கூறுகையில், “40 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கட்டடம் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதும், மினரல்வாட்டர், படுக்கைகள், கண்காணிப்பு கேமரா என ஒரு வீட்டில் இருப்பது போன்ற அனைத்து வசதிகளும் செய்ததாகவும், இதனால் சிகிச்சை பெறுபவர்களுடன் உடன் இருப்பர்களுக்கு வசதியாக இருந்தது. கொரோனா தொற்று காரணத்தினை காரணம் காட்டி கட்டடம் மூடப்பட்டதாகவும், தற்பொழுது கட்டட வசதி இல்லாமல் பலரும் மருத்துவமனை வளாகத்தில் தங்கி வரும் நிலை இருப்பதால் அதனை திறக்க மருத்துவனை நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் என இரு தரப்பினரையும் அணுகி தெரிவித்த போதும் எவ்வித நடவடிக்கை இல்லை என்கிறார்.
இதுகுறித்து அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கமலவாசனிடம் கேட்ட போது,பிரசவத்திற்கு கர்ப்பிணி பெண்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், குறைவான படுக்கைகள் தான் இருப்பதாகவும், புதிய கட்டடம் கட்டப்பட்டு வருவதாகவும், அதன் பணிகள் முடிந்தால் அதிகமான படுக்கைகள் கிடைக்கும் என்றும், கர்ப்பிணி பெண்கள் வெளியில் இருப்பதை தடுக்க மாற்று நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உறைவிட கட்டடம் திறப்பது கூறித்து நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்ட போது, மருத்துவமனை நிர்வாகம் தவறு காரணமாக காலதாமதம் ஏற்பட்டதாகவும், அதனை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
போதிய படுக்கை வசதி இல்லமால் கர்ப்பிணிகள், மருத்துவ கழிவு புகையினை சுவாசித்து கொண்டு இருக்கும் நிலை உள்ளதால் இதனை தடுக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், 40 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டுப்பட்டு அனைத்து வசதிகளுடன் உள்ள உறைவிட கட்டடத்தை திறக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Govt hospitals, Kovilpatti, Tuticorin