Home /News /tamil-nadu /

தேசிய அளவில் சாதனை படைக்கத் தயாராகும் தமிழக மகளிர் ஹாக்கி அணி

தேசிய அளவில் சாதனை படைக்கத் தயாராகும் தமிழக மகளிர் ஹாக்கி அணி

கோவில்பட்டி  மகளிர் ஹாக்கி அணி

கோவில்பட்டி மகளிர் ஹாக்கி அணி

Indian Hockey Team | தேசிய அளவிலான போட்டியில் மட்டுமல்ல, இந்திய அணிக்கும் தேர்வாகி சாதனை படைக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கையுடன் 12வது தேசிய சப் ஜூனியர் ஹாக்கி சாம்பியன் ஷீப் போட்டிக்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் தயராகி வருகின்றனர் தமிழ்நாடு சப் ஜூனியர் மகளிர் ஹாக்கி அணி வீராங்கனைகள்.

மேலும் படிக்கவும் ...
ஹாக்கிபட்டி என்று அழைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சர்வதேச தரத்தில் செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானம், மாணவர் விடுதியுடன் அமைக்கப்பட்ட பின்னர் மீண்டும் கோவில்பட்டியில் ஹாக்கி களைகட்டியுள்ளது.

தேசிய அளவிலான போட்டிகள், தமிழ்நாடு அணிக்கான அணி வீரர்கள் தேர்வு, விளையாட்டு விடுதிக்கு வீரர்கள் தேர்வு என அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி ஹாக்கி பயணம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அந்த பயணத்தின் அடுத்த கட்ட நகர்வாக தற்பொழுது தமிழக சப் - ஜூனியர் மகளிர் ஹாக்கி அணி வீராங்கனைகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.

அடுத்த மாதம் (மே) 11ந்தேதி முதல் 22ந்தேதி வரை மணிப்பூர் மாநிலம் இம்பாலில் 12 வது தேசிய அளவிலான சப் - ஜூனியர் மகளிர் ஹாக்கி சாம்பியன் ஷீப் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த போட்டியில் தமிழகம் சார்பில் கலந்து கொள்ள கடந்த 9ந் தேதி சென்னையில் வீராங்கனைகள் தேர்வு நடைபெற்றது. இதில் 116 பேர் கலந்து கொண்ட நிலையில் 23 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட வீராங்கனைகளுக்கு கோவில்பட்டியில் உள்ள செயற்கை புல்வெளி மைதானத்தில் கடந்த 17ந்தேதி முதல் பயிற்சி முகாம் தொடங்கியுள்ளது. வரும் 5ந்தேதி வரை பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதில் இருந்து 18 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு இம்பாலில் நடைபெறும் தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் தமிழக அணி சார்பில் விளையாட உள்ளனர்.

இந்த 23பேர் கொண்ட பயிற்சி முகாம் குழுவில் கோவில்பட்டியை சேர்ந்த முன்மண்ஜா, மகாலெட்சுமி, மனிஷா என 3 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு அன்பு மற்றும் ரஸ்னா ஆகியோர் பயிற்சியாளராக செயல்பட்டு பயிற்சி அளித்து வருகின்றனர். காலை, மாலை என இருவேளையும் வீராங்கனைகளுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் வேல்ஸ் வித்யாலயா சார்பில் வீராங்கனைகள் பயிற்சிக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.



கடந்த சில தினங்களுக்கு முன்பு தேசிய அளவிலான சீனியர் ஹாக்கி அணி போட்டியில் தமிழகம் அணி 22 ஆண்டுகளுக்கு பின்னர் வெள்ளி பதக்கம் வென்ற நிலையில் அடுத்து வரும் சப் -ஜூனியர் போட்டியில் மகளிர் ஹாக்கி அணி வீராங்கனைகள் சாதனை நிகழ்த்துவர்கள் அனைவரும் எதிர்பார்க்க வைத்துள்ளனர்.



இதனால் வீராங்கனைகள் உத்வேகத்துடன் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை நடைபெற்றுள்ள தேசிய அளவிலான போட்டியில் ஒரே ஒரு முறை தான் சப் -ஜூனியர் போட்டியில் மகளிர் ஹாக்கி அணி 3வது இடத்தினை பிடித்துள்ளது. ஆனால் இம்முறை சாதிக்க வேண்டும், இறுதி போட்டி வரை சென்று வென்று சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இளம் வீராங்கனைகள் தங்களது பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்

இதுவரை மண் தரையில் தான் பயிற்சி மேற்கொண்டு வந்தோம், தற்பொழுது செயற்கை புல்வெளி மைதானத்தில் பயிற்சி எடுத்து வருகிறோம். நல்ல பயனுள்ளதாக இருக்கிறது. பயிற்சியாளர்கள் ஹாக்கி தொழில்நுட்பங்களையும், வெற்றிக்கான வழிமுறைகளை சிறப்பாக பயிற்சி கொடுத்து வருகின்றனர். பயிற்சி முகாமில் சிறப்பான வசதி செய்து கொடுத்துள்ளனர். வரும் போட்டியில் வெற்றி பெற்று சிறப்பான இடத்தினை பெறுவோம் என்கிறார் பயிற்சி முகாமில் பயிற்சி பெறும் ஹாக்கி வீராங்கனை யாழினி.



அணி தேர்வில் கலந்து கொண்டு தான் உள்பட 3 வீராங்கனைகள் கோவில்பட்டியிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த தேசிய ஜீனியர் ஆண்கள் போட்டியில் சிறப்பாக விளையாடி கோவில்பட்டியைச் சேர்ந்த 5 வீரர்கள் இந்திய அணி பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது போல, தாங்களும் இந்த போட்டியை வாய்ப்பாக பயன்படுத்தி சிறப்பாக விளையாடி திறமையை வெளிப்படுத்துவோம் என்கிறார் கோவில்பட்டியை சேர்ந்த வீராங்கனை முன்மண்ஜா



இவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர் ரஸ்ணா கூறுகையில், மண் தரையில் விளையாடி வந்த வீராங்கனைகளுக்கு இந்த பயிற்சி முகாம் ஒரு புது அனுபவமாக இருக்கும். இதில் சிறப்பாக விளையாடி அவர்கள் சாதிக்க வேண்டும் என்ற வகையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக கூறுகிறார்.



கோவில்பட்டியில் ஹாக்கி என்றால் ஆண்கள் என்ற நிலையில் தற்பொழுது தமிழக சப்-ஜீனியர் அணியில் கோவில்பட்டி வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் அடுத்த மாதம் கோவில்பட்டியில் தேசிய அளவிலான ஜீனியர் ஆண்களுக்கான ஹாக்கி போட்டி நடைபெறவுள்ளது. தொடர்ந்து தேசிய அளவிலான போட்டி, பயிற்சி முகாம் இங்கு நடைபெறுவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறுகிறார் தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி கழக செயலாளர் குருசித்ராசண்முகபாரதி.

ஆண்கள் அணிக்கு இணையாக தங்களாலும் சாதனை படைக்க முடியும் என்பதனை நிருபிக்க வாய்ப்பு தங்களுக்கு கிடைத்துள்ளது என்ற நம்பிக்கையுடன் பயிற்சினை தொடர்ந்து வருகின்றனர் வீராங்கனைகள்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Hockey, Kovilpatti

அடுத்த செய்தி