கொரோனா நிவாரண நிதி ரூ.2000 டோக்கன் பெற ஊரடங்கை மீறி குவிந்த மக்கள்!

கோவில்பட்டியில் கொரோனா நிவாரண நிதி டோக்கன் வாங்க  முழு ஊரடங்கையும் மீறி  ரேஷன் கடைகளில்  பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர்

கோவில்பட்டியில் கொரோனா நிவாரண நிதி டோக்கன் வாங்க  முழு ஊரடங்கையும் மீறி  ரேஷன் கடைகளில்  பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர்

  • Share this:
தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 4000 வழங்கப்படும் என்றும், முதற்கட்டமாக இந்த மாதமே ரூ .2000 வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.    ஊரடங்கு அமலில் உள்ளதால் இந்த மாதத்திற்கான நிவாரண தொகையை பெற இன்று முதல் வீடுகளுக்கே  வந்து டோக்கன் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் டோக்கன் விநியோகம் செய்யும் பணியில் நியாயவிலை கடை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பல இடங்களில் ரேஷன் கடை ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று டோக்கன் விநியோகம் செய்து வந்தாலும் சில இடங்களில் பொது மக்களை கடையில் வந்து பெற்று கொள்ளுங்கள் என்று ஊழியர்கள் கூறியுள்ளனர்.

இதனால், சில ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. கோவில்பட்டி லெட்சுமி மில் மேம்பாலம் அருகேயுள்ள ரேஷன் கடையில் டோக்கன் வழங்கப்படும் என்று அங்குள்ள ஊழியர் கூறியதால் ஏரளமான பொது மக்கள்  சமூக இடைவெளியை பின்பற்றாமல்  ரேஷன்  கடையில் குவிந்தனர்.

சுமார் ஒரு மணி நேரம் கழித்து தான் டோக்கன் வழங்க ஊழியர் வந்தார். சிலருக்கு டோக்கன் கொடுக்க தொடங்கிய நிலையில் செய்தியாளர்கள் வீடியோ எடுப்பதை பார்த்தும் டோக்கன் கொடுப்பதை நிறுத்திய ஊழியர், மக்களுக்கு வீட்டு செல்லும்படி கூறினார். வீட்டுக்கே வந்து தான் டோக்கனை விநியோகிப்பதாகவும் அவர்களிடம் ரேஷன் ஊழியர் தெரிவித்தார்.

இதனால் ,  சிலர் ரேஷன் கடை ஊழியர்களிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். தேவையில்லமால் தங்களை ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வைத்தது ஏன் ? என்று பொதுமக்கள்  கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதை போன்று நடராஜபுரம் பகுதியில் ரேஷன் கடையிலும் பொது மக்கள் டோக்கன் வாங்க நீண்ட நேரம் காத்திருந்தனர். பின்னர் வீட்டிற்கு வந்து டோக்கன் வழங்குவதாக  ஊழியர் கூறிய பின்னர் ஏமாற்றத்துடன் பொது மக்கள் திரும்பி சென்றனர்.

வீடுகளில் வந்து டோக்கனை தராமல், ரேஷன் ஊழியர்களின் அலட்சிய போக்கால் ஊரடங்கு காலத்தில் தங்களுக்கு  வீண் அலைச்சல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புலம்பியபடி சென்றனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Murugesh M
First published: