எல்லையில் மட்டுமல்ல மக்களுக்கும் தங்களால் சேவைகளையும் அறப்பணிகளையும் செய்ய முடியும் என்றும் தங்களது விடுமுறை காலத்தில் கூட குடும்பத்தினருடன் நேரத்தை கழிக்கமால் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் மக்களுக்கு தேவையான உதவிகள், இரத்த தானம், நகரில் பசுமையை உருவாக்குதால், கல்வி, மருத்துவம், விளையாட்டில் உதவி தேவைப்படுவர்களுக்கு உதவிக்காரம் நீட்டி வருகின்றனர் இராணுவ மற்றும் துணை இராணுவத்தில் பணியாற்றி வரும் வீரர்கள்.
மழை,வெயில்,பனி என இயற்கை சீற்றங்கள் ஒருபுறம், எதிரி நாட்டு படைகள் மறுபுறம் என 24 மணிநேரம் பல்வேறு சிரமங்களுக்கு இடையே நாட்டையும், நாட்டின் மக்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக பாடுபட்டு வருகின்றனர் இந்திய இராணுவ மற்றும் துணை இராணுவ படைகளை சேர்ந்த வீரர்கள். இந்நிலையில் தங்களுக்கு கிடைக்கும் விடுமுறையில் கூட தங்களது குடும்பத்தினருடன் நேரத்தினை செழிவழிக்கமால் மக்களுக்கு அறப்பணிகளையும், உதவிகளை செய்து அசத்தி வருகின்றனர் கோவில்பட்டி பகுதியை சேர்ந்த இராணுவம் மற்றும் துணை இராணுவ படைகளை சேர்ந்த வீரர்கள்.’
Also Read: சில்லரை தராத நடத்துனர்.. கேள்விகேட்ட பயணியை 2 ஆண்டுகளாக அலைக்கழித்த மதுரை போக்குவரத்து கழகம்.. நடந்தது என்ன?
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இந்திய இராணுவம் மற்றும், துணை இராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த வீரர்கள் கோவில்பட்டி பகுதியில் தங்களால் முடிந்த வளர்ச்சி பணிகளை பொது மக்களுக்கு செய்ய வேண்டும் மற்றும் கஷ்டப்படுவர்களுக்கு உதவிக்கரம் நீண்ட வேண்டும் என்பதற்காக கோவில்பட்டி ஜவான்ஸ் ( கோவில்பட்டி இராணுவம், துணை இராணுவத்தினர் மக்கள் சேவை மையம்) என்ற குழுவினை உருவாக்கியுள்ளனர். இதில் இராணுவ மற்றும் துணை இராணுவத்தில் பணியாற்றி வரும் 150க்கும் மேற்பட்ட வீரர்கள் உறுப்பினராக உள்ளனர்.

கோவில்பட்டி ராணுவ வீரர்கள்
இவர்களுக்கு என்று ஒரு வாட்ஸ் அப் குழு உருவாக்கி அதன் மூலமாக என்ன பணிகள் செய்யலாம் என்று விவாதித்து முடிவு எடுத்து அதன் அடிப்படையில் பணிகளை செய்து வருகின்றனர். கோவில்பட்டி பகுதியில் முதியோர் இல்லம், மனநல காப்பகங்களுக்கு உணவு வழங்குதல், கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களுக்கு அரிசி மற்றும் சமையல்பொருள்கள் உள்ளிட்டவைகள் வழங்கும் பணிகளை இந்த குழுவினர் செய்துள்ளனர்.
Also Read: வரதட்சனை கொடுமை.. நான்கு மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை - சாவில் சந்தேகம் இருப்பதாக கண்ணீர்விடும் பெற்றோர்
மேலும் கோவில்பட்டி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் சின்ன,சின்ன மருத்துவ உபகரணங்கள் வாங்கி கொடுத்து வருகின்றனர். அது மட்டுமின்றி அரசு மருத்துவமனைகளில் இரத்தம் தேவைப்படுவர்களுக்கு இரத்த தானம் வழங்குவதை முன்னிறுத்தி செய்கின்றனர். இதுபோன்ற மக்கள் பணிகள் ஒருபுறம் இருக்க கோவில்பட்டி நகரை பசுமையாக மாற்ற வேண்டும், தங்கள் சிறுவயதில் பார்த்த பசுமையான மரங்கள் இல்லை என்பதால் அதனை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தற்பொழுது முதல் கட்டமாக 200 மரக்கன்றுகளை சாலையோர பகுதியில் வைத்துள்ளனர். மேலும் 1000ம் மரக்கன்றுகளை நடுவதற்கும் திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

மரக்கன்று நடும் பணியில் இராணுவ வீரர்கள்
மரக்கன்றுகளை நட்டால் மட்டும் போதாதது, அதனை பராமரிக்க வேண்டும் என்பதற்காக கோவில்பட்டி நகரில் செயல்பட்டு வரும் ஜீவ அனுக்கிரஹா பசுமை இயக்கத்துடன் இணைந்து தினமும் தண்ணீர் ஊற்றுவது போன்ற பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த குழுவில் உள்ளவர்களில் விடுமுறைக்கு வர கூடியவர்கள் தங்கள் முடிவு செய்த பணிகளை சுழற்சி முறையில் செய்து வருகின்றனர். அது மட்டுமல்லாது தங்களது ஊதியத்தில் ஒரு பகுதியை கோவில்பட்டி ஜவான்ஸ் அமைப்பிற்கு என்று ஒதுக்கி வைத்து அறப்பணிகளுக்கு உதவிக்காரம் நீட்டி வருகின்றனர்.
கோவில்பட்டி பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும், கல்வி, மருத்துவம், விளையாட்டு போன்றவற்றில் உதவி தேவைப்படுவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த அமைப்பினை செயல்படுத்தி வருகின்றனர். ஏராளமான இளைஞர்கள் ராணுவத்திற்கு வர வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமின்றி தங்களது சேவை நாட்டு எல்லையில் மட்டுமல்ல மக்களிடம் உண்டு என்பதனை மற்றவர்களுக்கு காட்டும் வகையில் முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை எடுத்துள்ளதாக இதில் உறுப்பினராக உள்ள இராணுவ மற்றும் துணை இராணுவ வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

இரத்த தானம் கொடுக்கும் ராணுவ வீரர்கள்
எல்லையில் மட்டுமல்ல மக்களுக்க ஏதாவது சேவை செய்ய வேண்டும் என்பதற்காக இந்த குழுவினை தொடங்கி மனநல காப்பகத்தில் உணவு வழங்கி உள்ளோம், வெள்ளாங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வீல்சேர் வழங்கி உள்ளோம், கொரோனா காலத்தில் வாழ்வாதரம் இழந்தவர்களுக்கு அரிசி உள்ளிட்ட பொருள்கள் வழங்கினோம், மேலும் அரசு மருத்துவமனையில் ரத்த தானம் வழங்கி வருகிறோம், அதுமட்டுமின்றி சாலைகளில் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி இருக்கிறோம், இது போன்று பல்வேறு பணிகளை கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் செய்வதற்கு முடிவு எடுத்துள்ளதாக கூறுகிறார் இந்த குழுவில் உள்ள இராணுவ வீரரான குருநாதன்.

வீல்சேர்
ராணுவ வீரர்கள் எல்லையில் மட்டுமல்ல மக்களுக்கு சேவை செய்வார்கள் என்பதற்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த குழுவினை தொடங்கி கல்வி, மருத்துவம், விளையாட்டு உள்ளிட்டவைகளில் தேவைப்படும் உதவிகளை செய்து வருகிறோம், வாட்ஸ் குழுவில் என்ன பணிகள் செய்யலாம் என்று விவாதம் செய்து, அதன் அடிப்படையில் எங்கள் ஊதியத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி செய்து வருகிறோம், நிறைய இளைஞர்கள் இராணுவத்திற்கு பணியாற்ற வருவதற்கு வழி தெரியாமல் உள்ளனர். அவர்களுக்கு இந்த அமைப்பு மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி இராணுவத்தில் பணியாற்ற பங்கேற்க வைப்பது தான் தங்களது நோக்கம் என்கிறார் இராணுவ வீரர் ஸ்டிபன்செல்வகணபதி.
நாட்டு எல்லையில் வருடம் முழுவதும் கஷ்டப்பட்டாலும், விடுமுறையில் வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று கோவில்பட்டி ஜவான்ஸ் அமைப்பினர் செயல்படுகின்றனர். அது பாராட்டுக்குரியது. அந்த அமைப்பினர் மரக்கன்றுகளை நடுகிறோம் பரமரிக்க வேண்டும் என்று கேட்டனர். மக்களுக்கு சேவை செய்யும் இராணுவ வீரர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் நடும் மரக்கன்றுகளை எங்கள் அமைப்பின் மூலமாக பரமரித்து வருவதாக கூறுகின்றார் ஜீவ அனுக்கிரஹா பசுமை இயக்கத்தின் நிர்வாகியும், சமூக ஆர்வலருமான ராஜேந்திரன்
எல்லையில் மட்டுமல்ல மக்களுக்கும் தங்களால் முடிந்த சேவைகளை செய்ய முடியும் என்று தங்களது விடுமுறையை கூட மக்களுக்காக பணியாற்றி வரும் கோவில்பட்டி ஜவான்ஸ் குழுவின் பணிகள் பாராட்டுக்குரியது மட்டுமின்றி போற்றுதலுக்குரியது என்றால் மிகையாகது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.