நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முறைகேட்டை தட்டிக்கேட்ட
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை பொய் வழக்கின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்த
திமுக அரசை கண்டித்து
தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக தெற்கு மாவட்டச் செயலாளர் சண்முகநாதன், வடக்கு மாவட்ட செயலாளர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ஆகியோர் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்தும் திமுக ஆட்சியை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் குறித்து கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறுகையில், நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்ற திமுக நபரை பிடித்துக் கொடுத்ததற்காக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
உள்ளாட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்ற அந்த நபர், போலீசார் தடுத்தும் கேட்காமல் போலீசாரை மிரட்டும் வகையில் கல் கொண்டு எறிந்து விரட்டி அடித்துள்ளார். அப்படிப்பட்டவரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜனநாயகத்தை பாதுகாக்கும் முயற்சியின் பேரில் தொண்டர்கள் உதவியுடன் பிடித்து போலீசில் ஒப்படைத்ததற்கு அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்து இன்று சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நேரத்திலும் கூட, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது கொடுக்கப்பட்ட பழைய புகார்களை தூசி தட்டி எடுத்து மீண்டும் மீண்டும் அவரை வெவ்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்துள்ளது ஜனநாயகத்திற்கு விரோதமான போக்கு. முதல்வர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கை பார்க்கும்போது தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்ற நபரை பாதுகாக்கும் முயற்சியை அவர் முன்னெடுக்கிறாரா? எண்ணத் தோன்றுகிறது.
Read More : நெருப்புடா... நெருங்குடா பார்ப்போம்.. மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கோவையில் பரபரக்கும் போஸ்டர்
எனவே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்ததுமே அதிமுகவை முடக்கும் நினைப்பில் கேலிக்கூத்தான விஷயங்களை செய்து வருகிறனர். இந்த நடவடிக்கைகளின் மூலம் அதிமுகவை முடக்க முடியாது.
Must Read : ஓட்டு மெஷினில் தில்லுமுல்லு.. எந்த பட்டன் தட்டினாலும் திமுகவுக்கு போகும்படி புரோகிராம் செய்திருக்கிறார்கள்.... எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு
தற்போது உள்ள இரட்டை தலைமைக்கு கட்டுப்பட்டு அதிமுக தொண்டர்கள் கழகப் பணிகளை செய்து வருகின்றனர். கட்சி தலைமை முடிவெடுத்தால் அதிமுக ஒற்றை தலைமையின் கீழ் இயங்குவதை தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள். தற்போது இருக்கும் இரட்டை தலைமையால் கட்சிக்குள்ளும், தொண்டர்களுக்கும் எந்த மனக் குழப்பமும் இல்லை. பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றார்.
செய்தியாளர் : முரளி கணேஷ், தூத்துக்குடி.இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.