தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பகல் நேரத்தில் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யவும், மாலை நேரத்தில் மட்டும் மின் உற்பத்தி செய்யவும் மத்திய அரசு நிர்பந்திப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மொத்தமுள்ள ஐந்து யூனிட்களில் தலா 210 மெகாவாட் வீதம் மொத்தம் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இன்று தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 4 யூனிட்களில் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டது. இதன் காரணமாக மொத்தம் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது
இதுகுறித்து தூத்துக்குடி அனல்மின் நிலைய தலைமை பொறியாளர் கிருஷ்ணகுமாாிடம் கேட்டதற்கு, தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 யூனிட்களிலும் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. அனல் மின் நிலையத்தில் 80 ஆயிரம் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளது. சூரியமின் சக்தி உற்பத்தி அதிகரிப்பின் காரணமாக பகல் நேரங்களில் குறைந்த அளவு மின் உற்பத்தியும், மாலை நேரங்களில் முழுவீச்சில் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
இன்று பகல் நேரத்தில் 5 யூனிட்களிலும் சேர்த்து மொத்தம் 500 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணிக்கு 5 யூனிட்களிலும் சேர்த்து மொத்தம் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறும் என்றாா்.
இதனை தொடர்ந்து மாலை 4 மணிக்கு தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 5 யூனிட்களிலும் மின் உற்பத்தி துவங்கியது. (துவங்கியதிலிருந்து சுமார் இரண்டு மணி நேரத்தில் முழு உற்பத்தியான 1050 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்)
உண்மை நிலவரம் என்ன என்பது குறித்து அனல் மின் நிலைய ஊழியர்களிடம் விசாரித்தோம்.
இதையும் படியுங்கள் | திமுக வந்தாலே மின்வெட்டுதான்.. தலைமை மாறினாலும் நிலைமை மாறவில்லை - டிடிவி தினகரன் விமர்சனம்
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பகல் நேரத்தில் மின் உற்பத்தி செய்யும் பொழுது ஒரு யூனிட்டிற்கு சுமாா் 4 ரூபாய் முதல் 4.50 ரூபாய் வரை செலவாகும். ஆனால், பகல் நேரத்தில் மட்டும் தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கினால் 3 ரூபாய் முதல் 3.50 ரூபாய் வரை மட்டுமே செலவாகும்.
அதே சமயம், பீக் ஹவர் என்று சொல்லக்கூடிய மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை ஒரு யூனிட் மின்சாரம் தனியாரிடம் வாங்கினால் 11 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை ஆகிறது. இதுவும் தங்கம் விலை போன்று தேவையை பொறுத்து கூடிக் குறையும். நிரந்தரமான விலை கிடையாது.
எனவே மத்திய அரசு வலுக்கட்டாயமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தை பகல் நேரத்தில் இயக்க வேண்டாம் என்று நிர்பந்திக்கிறது. அதே சமயத்தில் பீக்ஹவர்ஸில் மட்டுமே அனல் மின் நிலையத்தை இயக்க வலியுறுத்தி உள்ளது. இதனால் தான் பகல் நேரங்களில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின்உற்பத்தி நிறுத்தம் செய்யப்படுகிறது. மாலை நேரத்தில் மட்டும் மின் உற்பத்தி நடைபெறுகிறது.
மற்றபடி மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது. தற்போது ஒரு கப்பலிலும் நிலக்கரி தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது என்றனர்.
செய்தியாளர் - பி. முரளி கணேஷ், தூத்துக்குடி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Thermal power plants, Tuticorin