International Nurses Day 2021 : கொரோனா வார்டில் செவிலியர்கள் பணி மகத்தானது

Youtube Video

அன்பு, சேவை, பொறுமை, தியாகம் இந்த நான்கு குணங்களுக்கும் சொந்தமானவர்கள் செவிலியர்கள். தாயின் மறு உருவமாக பார்க்கப்படும் இவர்கள், கொரோனா தொற்றால் பாதித்தவர்களுக்கு செய்யும் சேவை ஈடு இணையற்றது. இன்று சர்வதேச செவிலியர் தினம் என்பதை கூட அறியாமல், இரவு, பகலாக மருத்துவ சேவையில் தங்களை அர்ப்பணித்துள்ளனர்.

  • Share this:
உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா இரண்டாவது அலை, இந்தியாவில் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. தமிழகத்தில் ஒருநாள் பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில, உயிரிழப்பு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு 300-ஐ கடக்கும் அபாயம் உள்ளது. தொற்று பாதித்தவர்களிடம் உறவுகளே நெருங்க முடியாத சூழலில், மருத்துவமனைகளில் தாய் உள்ளத்துடன் அவர்களை அரவணைப்பது செவிலியர்களின் கரங்களே.

கொரோனா பரிசோதனை முதல், நோயாளிகளை மருத்துவமனையில் தொடர்ந்து கவனித்து, அவர்கள் குணமடைந்து வீடு திரும்புவது வரை தொண்டு செய்பவர்கள் செவிலியர்கள். ஊசி போடுவது, மாத்திரைகளைக் கொடுப்பது, வென்டிலேட்டரை இயக்குவது என அனைத்து பணிவிடைகளையும் இரவு பகல் பாராமல் செய்து வருகின்றனர்.

குறிப்பாக, PPE கிட் எனப்படும் முழு கவச உடையில், மணிக்கணக்கில் தண்ணீர் கூட குடிக்க முடியாத கடும் இன்னல்களுக்கு இடையே, பணியாற்றி வருவதாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் கூறுகின்றனர். மேலும், தனது, குழந்தைகள், குடும்பத்தினரை மறந்து கொரோனா நோயாளிகள் குணமடையை அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவதாகவும் தெரிவிக்கின்றனர்.



செவிலியர்கள் பலர் தங்களது குழந்தைகளை வீட்டில் உள்ளவர்களிடம் ஒப்படைத்து விட்டு தான் மருத்துவமனை வருகின்றனர். ஆனால், கொரோனா வார்டில் பணியாற்றிய பின், இரண்டு வாரங்களுக்குப் பின்பு தான் குழந்தைகளை பார்க்கும் நிலை உள்ளது. குடும்ப சுமை உட்பட பல்வேறு இன்னல்களுக்கு இடையே மருத்துவமனைக்கு வந்தால், நோயாளி பூரண குணமடைய வேண்டும் என்ற ஒரே நோக்கில் சேவையாற்றுவதாக செவிலியர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க...ஒரே நாளில் 26 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு... ஆக்ஜிசன் பற்றாக்குறையால் தொடரும் அவலம்

இரவு, பகல் பாராமல், உணவு, தூக்கம் இன்றி கொரோனா போர்களத்தில் களப்பணியாற்றும் செவிலியர்களின் சேவையை, சர்வதேச செவிலியர் தினத்தில் மனதார போற்றுவோம்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: