• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மருத்துவ விடுமுறை எடுத்த நாளுக்கு ஊதியப் பிடிப்பு- மின்சார டவரில் ஏறி போராடிய அரசுப் பேருந்து நடத்துநர்

மருத்துவ விடுமுறை எடுத்த நாளுக்கு ஊதியப் பிடிப்பு- மின்சார டவரில் ஏறி போராடிய அரசுப் பேருந்து நடத்துநர்

டவரில் ஏறி போராட்டம்

டவரில் ஏறி போராட்டம்

கோவில்பட்டியில் மருத்துவ விடுப்பு எடுத்த நாள்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு பேருந்து நடத்துனர் மின்சார டவரில் ஏறி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.   

  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துகழக கிளையின் கீழ் இயங்கி வரும் அரசு பஸ்சில் மலையடிப்பட்டியை சேர்ந்த வீரசெல்வம்(37) என்பவர் நடத்துனராக பணியாற்றி வருகிறார். கண்ணில் ஏற்பட்ட பிரச்சினைக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக கடந்த 15ந்தேதி முதல் 21ந்தேதி வரை வீரசெல்வம் மருத்துவ விடுப்பு எடுத்துள்ளார்.

இதுதொடர்பாக விடுப்பு எடுத்த அன்று போக்குவரத்து கழக பணிமனையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு முறையாக தகவல் கொடுத்தது மட்டுமின்றி, 19ந்தேதி விடுப்பு விண்ணப்பம் மற்றும் சிகிச்சை பெற்று வருவதற்கான மருத்துவச் சான்றிதழும் வழங்கியுள்ளார். ஆனால் கட்டுப்பாட்டு அறையில் வாங்க மறுத்துள்ளனர். இதனால் பணிமனை முகப்பில் உள்ள வரவேற்பு அலுவலகத்தில் வழங்கியுள்ளார்.

சிகிச்சை முடிந்து 22ந்தேதி முதல் மீண்டும் பணிக்கு வந்து பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று ஊதியம் வந்த போது, மருத்துவ விடுப்பு எடுத்த 7நாள்களுக்கும் ஊதியம் பிடிக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அலுவலகத்திற்கு சென்று வீரசெல்வம் கேட்ட போது முறையான தகவல் தரவில்லை என்பதால் பணிமனை வளாகத்தில் உள்ள மின்சாரம் செல்லும் டவரில் திடீரென ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த உடன் பணியாற்றும் ஊழியர்கள், அலுவலர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதையெடுத்து வீரசெல்வம் கீழே இறங்கினர். மேலும் சம்பவ இடத்திற்கு மேற்கு காவல் நிலைய போலீசார் சென்று விசாரணை நடத்தினர். முறையாக தகவல் தெரிவித்து, விடுமுறைக்கான அனைத்து விண்ணப்பங்களும் கொடுத்த பிறகு தனது ஊதியத்தில் விடுமுறை நாள்களுக்கு ஊதியம் கழிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது வேதனை அளிப்பதாகவும், ஏற்கனவே மருத்துவ செலவிற்காக வட்டிக்கு கடன் வாங்கி செலவு செய்து வரும் நிலையில் ஊதிய பிடித்தம் தன்னை மேலும் சிரமப்படுத்தியுள்ளதாகவும், எனவே பிடித்த ஊதியத்தினை வழங்க வேண்டும் என்றும், போராட்டத்தில் ஈடுபட்டதால் வேறு பணிமைனைக்கு தன்னை மாற்றம் செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவ்வாறு நடந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்று போராட்டத்தில் ஈடுபட்ட வீரசெல்வம் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: