SI Gangainatha Pandian Resigns: மன உளைச்சலுடன் இருப்பதால் தொடர்ந்து பணியாற்ற முடியாது என்பதால் பதவியை ராஜினாமா செய்கிறேன் - உதவி காவல் ஆய்வாளர் கங்கைநாதபாண்டியன்
குண்டாசில் போடாமல் இருக்க ஆடு திருடும் கும்பலிடம் லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரில் குற்றம் சாட்டப்பட்ட விளாத்திகுளம் உதவி ஆய்வாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல் உதவி ஆய்வாளராக இருந்த கங்கைநாதபாண்டியன், ஆடும் திருடும் கும்பலை சேர்ந்தவர்களை குண்டர் தடுப்பு காவலில் வைக்காமல் இருக்க லஞ்சம் கேட்டதாக சில ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தன் மீது அவதூறு பரப்ப வேண்டும் என்றே திட்டமிட்டு இதுபோன்ற ஆடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளை பிடிக்கவே அவர்களுக்கு துணை போவது போன்று பேசியதாகவும், அதில் முழுமையான ஆடியோவை வெளியிடாமல் சித்தரித்து வெளியிடப்பட்டுள்ளதாக உதவி ஆய்வாளர் கங்கைநாதபாண்டியன் தெரிவித்து இருந்தார்.
மேலும் தான் நிலுவையில் இருந்த பல வழக்குகளை திறம்பட முடித்துள்ளேன், அதற்காக உயர் அதிகாரிகளிடம் பாராட்டும் பெற்றுள்ளதாகவும், குற்றவாளிகள் வழக்கில் இருந்த தப்பிக்க இது போன்ற ஆடியோக்களை வெளியிட்டுள்ளதாக விளக்கம் கொடுத்து இருந்தார். இந்த ஆடியோ விவகாரத்தினை தொடர்ந்து அவர் ஆயுத படைக்கு மாற்றப்பட்டு இருந்த நிலையில் நேற்று மாலையில் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நெல்லை சரக டிஐஜிக்கு அவர் அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில் நெல்லை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி என பல்வேறு மாவட்டங்களில் உதவி ஆய்வாளராக சிறப்பாக பணியாற்றி வந்துள்ளதாகவும், தன்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சிலர் ஆடியோ வெளியிட்டுள்ளனர்.
தன்னிடம் விசாரணை நடத்தாமல் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டேன். தனக்கு மனவளர்ச்சிக்குன்றிய ஒரு பெண் இருக்கிறார். இது ஒருபுறம் இருக்க தற்பொழுது பணியிலும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். மன உளைச்சலுடன் இருப்பதால் தொடர்ந்து பணியாற்ற முடியாது என்பதால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தினை விளாத்திகுளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இந்த சம்பவம் காவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.