“வேறு தொழில் செய்து பணத்தினை கொடுங்கள்”: பெண்களை வீட்டு சிறை வைத்து மிரட்டும் நிதிநிறுவன முகவர்கள்!

சிறை வைக்கப்பட்டதாக குற்றம்சாட்டும் பெண்கள்

நிதி நிறுவனங்களை சேர்ந்த முகவர்கள் சமீபத்தில் அரசு வழங்கிய ரூ 2000 நிவாரண தொகையை கூட பறித்து சென்றுள்ள அவல நிலையும் நடந்தேறியுள்ளது.

  • Share this:
    கோவில்பட்டியில் பெண்களை வீட்டு சிறை வைத்து கடன் தவணை தொகையை கேட்கும் தனியார் நுண் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களின் முகவர்கள் - அரசு கொடுத்த கொரோனா நிவாரண நிதியையும் பறிந்து கொண்டதால் பெண்கள் பரிதவிப்பு...

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வழங்கப்பட்ட கடன் தவணைத் தொகையை திருப்பிச் செலுத்தும்படி, நுண்கடன் வழங்கு நிதி நிறுவனங்கள் முகவர்கள் வீட்டின் நடுவில் அமர்ந்து கொண்டு கடன் தவணை தொகையை செலுத்த நெருக்கடி கொடுப்பது மட்டுமின்றி, அவதூறாக பேசுவதாகவும், கந்து வட்டி வாங்கி பணம் செலுத்துங்கள் அல்லது வேறு தொழில் செய்து பணத்தினை கொடுங்கள் என்று நெருக்கடி தருவதால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று பெண்கள் மனவேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

    மகளிர் முன்னேற்றத்தினை கருத்தில் கொண்டும், தனிநபர் வருமானத்தை பெருக்கும் வகையில் தமிழகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. இந்த குழுக்கள் மூலமாக சேமிப்பு, நலத்திட்டப் பணிகள் ஆகியவை மகளிர் சுய உதவிக் குழுக்களின் முக்கிய அம்சங்களாக இருந்தன. இக்குழுக்களின் சேமிப்புகளை கருத்தில் கொண்டு வங்கிகள் அவர்களுக்கு கடன் கொடுக்க தொடங்கின. இக்கடன்கள் முறையாக திருப்பிச் செலுத்துவதை அறிந்த வங்கிகள், மகளிர் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்களை அதிகரித்தன.

    இது தவிர தனியார் நுண் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களும் கடன்களை வழங்கத் தொடங்கின. தினசரி, வாரம், மாதம் என கடன் வசூலிப்பில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள், கடன்தொகை முழுவதும் செலுத்தப்பட்டவுடன் மீண்டும் அடுத்தக் கடனை கொடுக்கத் தொடங்கின.இதையடுத்து கடன் வாங்குவதற்காக பெண்கள் குழுக்களாக இணையத் தொடங்கினர். அதாவது 10 அல்லது 15 பெண்கள் இணைந்து கடன் கேட்டால், அவர்களை குழுவாக அங்கீகரித்து கடன் வழங்கப்படுகிறது.

    Also Read:   11 ஆண்டுகளுக்கு முன் மாயமான பெண்: தனது வீட்டருகே காதலன் வீட்டில் ரகசியமாக குடும்பம் நடத்தியது அம்பலம்!

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மட்டும் 20க்கும் மேற்பட்ட தனியார் நுண் கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் தீப்பெட்டி தொழில் மற்றும் விவசாய பணிகளுக்கு செல்லும் பெண்கள் கடன் பெற்று தங்களது தவணை தொகைகளை செலுத்தி வந்த நிலையில் கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக கொரோனா முழு ஊரடங்கு காரணமாக தீப்பெட்டி ஆலைகள் இயங்கவில்லை என்பதால் பெண்களால் கடன் தவணை தொகை கட்ட முடியமால் தவித்து வருகின்றனர். ஆனால் பெண்களில் சூழ்நிலையை புரிந்து கொள்ளமால் தனியார் நுண் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களின் முகவர்கள் தினமும் கடன் தவணைத்தொகையை கேட்டு நெருக்கடி கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஊரடங்கு காரணமாக தொழிற்சாலைகள் செயல்படமால் தங்களது வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடன் தவணைத்தொகையை கேட்டு நெருக்கடி தரப்படுவதால் பெண்கள் செய்வதறியமால் பரிதவித்து வருகின்றனர். சில தனியார் நுண் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களை சேர்ந்த முகவர்கள் சமீபத்தில் அரசு வழங்கிய ரூ 2000 நிவாரண தொகையை கூட பறித்து சென்றுள்ள அவல நிலையும் நடந்தேறியுள்ளது. பணம் பறிபோனாலும் பரவா இல்லை, வசூல் செய்ய வரும் முகவர்கள் பேசும் பேச்சுகள் காது கொடுத்து கேட்க முடியவில்லை என்றும், அவதூறாக பேசுவது மட்டுமின்றி கந்து வட்டிக்கு பணம் வங்கி கொடுங்கள் என்று நெருக்கடி தருவதாக பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சில இடங்களில் கடன் பெற்ற பெண்களின் வீட்டிற்கே சென்று அமர்ந்து கொண்டு பணம் கொடுத்தால் தான் வெளியே செல்வோம் என்று கூறுவதால் பெண்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி அவதிப்பட்டு வருகின்றனர்

    காலை 6மணிக்கு வசூலுக்கு வரும் முகவர்கள் மாலை 5 மணி வரை நடு வீட்டில் உட்கார்ந்து கொண்டு பணம் கொடுத்தால் தான் வெளியே போவோம் என்று இருப்பதாகவும், தற்பொழுது வேலை இல்லை, பணம் வந்ததும் கொடுக்கிறோம் என்று சொன்னால் கூட பேவதில்லை, தகாத வர்த்தைகளால் பேசுவது மட்டுமின்றி கந்து வட்டிக்கு வாங்கி பணத்தினை கொடுக்க சொல்வதாகவும், நாங்கள் தற்கொலை செய்து கொள்ளும் வகையில் அவதூறாக பேசுவதாகவும், தவணைத் தொகை செலுத்தவில்லை என்றால் வட்டிக்கு வட்டி போடுவோம் என்று மிரட்டுவதாகவும், ஊரடங்கு காரணமாக தீப்பெட்டி தொழிலும் இல்லை, ஆட்டோ ஓட்டும் கணவருக்கும் வேலை இல்லை எப்படி பணம் கட்டுவது என்று தெரியவில்லை, தவறான தொழில் செய்து பணத்தினை கொடுங்கள் என கூறுவதாகவும், கடன் தவணை தொகை கட்டுவதற்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும், முதல்வர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் மனவேதனையுடன் கூறுகிறார் சித்ரா.

    Also Read:   நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது என்.ஐ.ஏ விசாரணை நடத்த வேண்டும்: விளாசும் பாஜகவின் நிர்மல் குமார்!

    தீப்பெட்டி ஆலையில் கிடைக்கும் வருமானம் மூலமாக தான் குடும்பத்தினை நடத்தி வருகிறோம், கடந்த ஒரு மாதம் தீப்பெட்டி ஆலைகள் செயல்படவில்லை என்பதால் கடன்தவணைத்தொகை செலுத்த முடியவில்லை, 4 நாளைக்கு முன்பு தான் தீப்பெட்டி ஆலைகள் திறக்கப்பட்டுள்ளது. இனி வேலை நடந்து சம்பளம் கொடுக்க இன்னும் ஒரு மாதம் ஆகும், ஆனால் அதனை புரிந்து கொள்ளாமல், தனியார் நுண் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களை சேர்ந்த முகவர்கள் கடன் தொகையை கேட்டு கடும் நெருக்கடி கொடுப்பதாகவும், கந்து வட்டிக்கு வாங்கி பணத்தினை கொடுக்க சொல்வதகாவும் அவதூறாக பேசுவது மட்டுமின்றி; மற்றவர்கள் முன்பு தங்களை அசிங்கப்படுத்தி வருவதாக கூறுகிறார் மோகனா

    முழு ஊரடங்கு காரணமாக பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு பல தொழிலாளர்கள் வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர்;. தீப்பெட்டி ஆலைகள் 7 ந்தேதி திறக்கப்பட்டாலும் 50 சதவீத ஊழியர்களை கொண்டு தான் பணிகள் நடைபெறுகிறது. இதனால் அனைத்து தொழிலாளர்களுக்கு முழுமையாக பணிகள் கிடைக்காத சூழ்நிலை இருக்கும் நிலையில் தனியார் நுண் கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் தவணைத்தொகை செலுத்த நெருக்கடி கொடுப்பதால் பல குடும்பங்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். எனவே தமிழக அரசு கடன் தவணை தொகையை செலுத்த கால அவகாசம் பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் பெண்களை அவதூறாக பேசும் தனியார் நுண் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களின் முகவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பெண்களின் கோரிக்கையாக உள்ளது.

    கோவில்பட்டி மகேஷ்வரன் 
    Published by:Arun
    First published: