வெளியூர் நபர்கள் மின்கட்டணம் செலுத்தினால் ரசீது பேப்பர் அதிகமாக காலியாகி விடுவதாக கூறி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வெளியூர் நபர்கள் மின்கட்டணம் செலுத்த திடீரென தடை விதிக்கப்பட்டதால் கிராமங்களில் இருந்த வந்து நீண்ட நேரம் காத்திருந்து மின்கட்டணம் செலுத்த முடியமால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சிலர் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் மின்சார வாரிய அலுவலகத்தில் தான் மின்கட்டணம் செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில் மின் கட்டணத்தினை எந்த மின்சார வாரிய அலுவலகத்திலும் செலுத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் ஆன்லைன் மூலமாகவும் மின்கட்டணத்தினை செலுத்தவும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
மேலும் இதற்கு என்று தனி செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் மின்சாரவாரிய அலுவலகத்தில் கோவில்பட்டி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, வேறு மின்வாரிய அலுவலகத்திற்குட்டப்பட்டவர்களும் கோவில்பட்டி அருகில் இருப்பதால் இங்கு வந்து மின்கட்டணம் செலுத்தி வந்தனர். இந்நிலையில் இன்று திடீரென கோவில்பட்டி நகரில் உள்ளவர்களுக்கு மட்டும் தான் மின்கட்டணம் வசூல் செய்யப்படும் வெளியூர் நபர்கள் மின்கட்டணம் செலுத்த முடியாது என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் மின்கட்டணம் செலுத்த வந்த மக்கள் பலரும் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர். சிலர் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்களது உயர் அதிகாரி ஒருவர், வெளியூர் நபர்கள் மின்கட்டணம் செலுத்துவதால் மின்கட்டணம் செலுத்தியதற்கு தரப்படும் ரசீது பேப்பர் அதிகமாக காலியாகிறது என்றும், எனவே இன்று முதல் வெளியூர் நபர்களுக்கு மின்கட்டணம் வாங்க கூடாது என்று கூறியுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி மின்கட்டணம் கட்டுவதற்கு கடைசி நாள் என்பதால் மின்கட்டணம் செலுத்த வந்த கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர்.
இது குறித்து மின்கட்டணம் செலுத்த வந்த மந்திதோப்பு கிராமத்தை சேர்ந்த பாக்கியராஜ் தெரிவிக்கும் போது, இன்றைக்கு கடைசிநாள் என்பதால் மின்கட்டணம் செலுத்த வந்தேன், ஆனால் முடியாது என்று கூறிவிட்டார்கள், கேட்டால் உயர் அதிகாரிகளை பார்க்க சொல்வதாகவும், ஒரு வேளை நாளைக்கு கட்டினால் அபாரத தொகையுடம் கட்டினால் அதிக வருமானம் கிடைக்ககும் என்பதற்காக இப்படி செய்கிறார்கள் போல, தனக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜமீன்தேவர் குளத்தினை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் மனோகரன் என்பவர் கூறுகையில், தங்களுக்கு கலிங்கப்பட்டி மின்சாரவாரியம் என்றால் அங்கு 2 பஸ்கள் மாறி செல்ல வேண்டிய நிலை இருப்பதால் அருகில் இருக்ககூடிய கோவில்பட்டி மின்சாரவாரியத்தில் 6 ஆண்டுகளாக தங்களது வங்கிக்கான மின்கட்டணத்தினை செலுத்தி வருவதாகவும், ஆனால் இன்றைக்கு வாங்க மறுத்து விட்டதாகவும், காரணம் கேட்டால் ரசீது பேப்பர் அதிகமாக காலியாகி விடுவதால் வெளியூர் நபர்களுக்கு வாங்க கூடாது என்று அதிகாரிகள் கூறியதாக கூறுகின்றனர். தமிழக அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்.
இப்பிரச்சினை குறித்து கோவில்பட்டி மின்சார வாரிய செயற்பொறியாளர் சாகர்பானுவிடம் கேட்ட போது இப்பிரச்சினை தொடர்பாக தனக்கு புகார் வந்ததாகவும், விசாரணை நடத்தி சம்பந்தபட்ட அலுவலர் மீது நடவடிக்கை இருப்பதாகவும், அனைவரிடமும் மின்கட்டணத்தினை வாங்க சொல்லி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் | திமுக வந்தாலே மின்வெட்டுதான்.. தலைமை மாறினாலும் நிலைமை மாறவில்லை - டிடிவி தினகரன் விமர்சனம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kovilpatti, TNEB