Thoothukudi Sterlite Plant | ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது... ஆக்ஸிஜன் தயாரிக்கும் பணி உடனடியாக தொடங்கும் என நிர்வாகம் அறிவிப்பு...

ஸ்டெர்லைட் ஆலை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி செயவதற்காக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், நோயாளிகளுக்கு மருத்துவ ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளது. சேலம் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் ஆக்ஸிஜன் படுக்கைகள் நிரம்பி வழிவதால் புதிதாக சிகிச்சைக்கு வருவோருக்கு இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக அங்குள்ள நோயாளிகளும் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரக்கப்படுகின்றனர். இதனால், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தீவிர சிகிச்சை தேவைப்படுவோருக்கு ஆம்புலன்ஸில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் படுக்கைகள் நிரம்பி வழிவதால், புதிதாக பாதிப்புக்குள்ளாகும் நபர்கள் சென்னை கிங்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மேலும், கூடுதலாக தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    நெல்லையில் மகாராஜ நகரில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் ஆக்ஸிஜன் வசதியுடன் 100 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் போதிய அளவு மருத்துவ ஆக்ஸிஜன் கையிருப்பு உள்ளதாகவும் ஆட்சியர் விஷ்ணு தெரிவித்திருக்கிறார்.

    இதற்கிடையே, நெல்லை அரசு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் பெண்மணி உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தியாகராஜ நகரை சேர்ந்த சந்திரிகா மூச்சுத்திணறலால் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அப்போது கொரோனா வார்டில் படுக்கைகள் இல்லாததால் அவருக்கு சிகிச்சையளிபதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், சந்திரிகா ஒரு மணி நேரம் சிகிச்சையின்றி ஆம்புலன்ஸிலேயே காத்திருந்த நிலையில், உயிரிழந்தார் .

    தமிழகத்திலும் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்து வரும் நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதை கண்காணிப்பதற்காக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வல்லுநர் குழு நேரில் ஆய்வு மேற்கொண்டது. அப்போது ஆலையின் உறுதி தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியரும், வல்லுநரின் குழுவின் தலைவருமான செந்தில் ராஜ், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆக்ஸிஜன் உற்பத்திக்கு தேவையான அளவு மட்டுமே மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகிக்கப்படுவதாக விளக்கமளித்தார்.

    மேலும் படிக்க... பெருகும் கொரோனா.. வலுக்கும் சவால்.. பலனளிக்குமா புதிய கட்டுப்பாடுகள்?

    இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் தண்ணீருக்கான இணைப்பும் வழங்கப்படுகிறது, . இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள ஆலை நிர்வாகம், மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்கான பணியை உடனடியாக தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: