சலூன் கடைகளில் நிரம்பி வழியும் கூட்டம்; ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்ற அச்சத்தில் மொட்டை அடித்து செல்லும் மக்கள்!

சலூன் கடை

இன்னும் 15 தினங்களுக்கு சலூன்கள் செயல்படாது என்பதால் பொது மக்கள் முடிதிருத்தம் செய்வதில் முனைப்பு காட்டினர்.

  • Share this:
தமிழகத்தில் நாளை முதல் 24ம்தேதி வரை 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நாளை முதல் சலூன் கடைகள் செயல்படாது என்பதால் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் சலூன் கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆர்வமுடன் முடித்திருத்தம் செய்து வருகின்றனர். ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்ற அச்சத்தில் பலர் மொட்டையும் அடித்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல மாநிலங்கள் ஊரடங்கினை அமல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நாளை முதல் வரும் 24ந்தேதி முழு ஊரடங்கு என்று தமிழக அரசு அறிவித்துள்ளது, காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் மட்டும் காலை 6மணி முதல் 12மணி செயல்பட அனுமதித்துள்ளது.

முழு ஊரடங்கில் சலூன் கடைகள் அனைத்தும் செயல்பட அரசு தடை விதித்துள்ளது. சமீபத்தில் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் மட்டும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஊராட்சி பகுதிகளில் சலூன்கடைகள் இயங்கி வந்த நிலையில் நாளை முதல் 24ந்தேதி வரை சலூன்கள், அழகு நிலையங்கள் செயல்பட தமிழக அரசு தடை விதித்துள்ளது.

நாளை முதல் சலூன்கள் செயல்படாது என்பதால் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் உள்ள சலூன் கடைகளில் இன்று அதிகளவில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. குறிப்பாக சிறுவர்களுக்கு முடி வெட்டுவதில் பெற்றோர்கள் ஆர்வம் காட்டினர். இன்னும் 15 தினங்களுக்கு சலூன்கள் செயல்படாது என்பதால் பொது மக்கள் முடிதிருத்தம் செய்வதில் முனைப்பு காட்டினர். இதனால் சலூன் கடைகளில் வழக்கத்தினை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

பல மணி நேரம் காத்திருந்து மக்கள் முடி வெட்டி சென்றனர். 24ந்தேதிக்கு மேல் ஊரடங்கு நீட்டிப்பு செய்யலாம் என்ற அச்சத்தில் பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு மொட்டையும் அடித்து சென்றனர்.

செய்தியாளர் - மகேஷ்வரன்
Published by:Esakki Raja
First published: