வாகன ஓட்டிகளின் பசியை போக்கும் சிந்தலக்கரை கிராமத்து இளைஞர்கள்... குவியும் பாராட்டுகள்

லாரி ஓட்டுநருக்கு உணவு வழங்கும் இளைஞர்கள்

தினமும் பால் எடுப்பதற்காக தூத்துக்குடியில் இருந்து மதுரை வாடிப்பட்டிக்கு செல்வதாகவும், இப்பகுதியில் ஹோட்டல் எதுவும் இல்லை என்பதால் பசியதால் செல்வது வழக்கம்.

  • Share this:
தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளின் வயிற்று பசியை போக்கும் கிராமத்து இளைஞர்களின் செயலுக்கு குவியும் பாராட்டுகள்.

கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்படும் மக்களுக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வரும் வேளையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள எட்டயபுரம் சிந்தலக்கரை கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு உணவு பொட்டலங்கள், குடிநீர் வழங்கி வாகன ஓட்டிகளில் வயிற்று பசியை போக்கி வருகின்றனர் கிராமத்து இளைஞர்கள்.

கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் போரிடுவது தான் மிகப்பெரிய சவால் என்பதனை உலகிற்கு நிரூபித்துக்காட்டியுள்ளது கொரோனா. ஒரு மனிதனின் உடலுக்கு முககவசமும், உயிர் வளர்க்க உணவு அவசியம் என்பதனை உணர்த்தியுள்ளது கொரோனா. முழு ஊரடங்கு காரணமாக பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் உணவு இல்லமால் தவிக்கும் நிலையும் உள்ளது.

மனிதாபிமானம் கொண்ட மனிதர்களால் அந்த உணவு பசி நீக்கப்படுகிறது. இந்த கொரோனா காலத்தில் மனிதாபிமானம் கொண்ட நல்ல உள்ளங்கள் வெளி உலகிற்கு அடையாளம் காட்டப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளின் பசியை போக்கும் முயற்சியில் களம் இறங்கியுள்ளனர் கோவில்பட்டி அருகேயுள்ள சிந்தலக்கரையை சேர்ந்த கிராமத்து இளைஞர்கள்.

ஊரடங்கு காரணமாக நெடுஞ்சாலையில் உள்ள ஹோட்டல்கள் பெரும்பாலும் மூடப்பட்டுள்ளதால் சாலையில் அத்தியாவசிய பொருள்களை கொண்டு செல்வதற்காக பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள எட்டயபுரம் சிந்தலக்கரை கிராமத்தில் அங்குள்ள இளைஞர்கள் ஒருங்கிணைந்து தினமும் மதிய வேளையில் உணவு தயாரித்து 300 வாகன ஓட்டிகளுக்கு உணவு மற்றும் குடிநீர் பாட்டில்கள் வழங்கி வருகின்றனர்.

சிந்தலக்கரை கிராமத்து இளைஞர்கள்


தினமும் தயிர்,லெமன், புளியோதரை, சாம்பர், தக்காளி சாதம் இவற்றில் 2 சாதங்களை தயாரித்து உணவு பொட்டலங்களாக வாகன ஓட்டிகளுக்கு வழங்கி வருகின்றனர். தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தினமும் மதுரை காய்கறி மார்க்கெட்டிற்கு செல்லும் வாகனங்கள், தூத்துக்குடி துறைமுகத்திற்கு செல்லும் வாகனங்கள்,  பால் கொண்டு செல்லும் வாகனங்கள், மருத்துவமனைகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள், மற்றும் அதில் பயணிப்பவர்களுக்கும் உணவு வழங்கி வருகின்றனர். சாலையில் இருபுறங்களிலும் முககவசம், கையுறை அணிந்து இளைஞர்கள் நின்று கொண்டு தங்களது கைகளில் உணவு பொட்டலங்களை வைத்து கொண்டு வாகன ஓட்டிகளிடம் காண்பிக்கின்றனர்.

உணவு தேவைப்படும் வாகன ஓட்டிகள் முகமகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர். இளைஞர்களின் முயற்சிகளை பார்த்த பெரியவர்கள், ஹோட்டல் நடத்துபவர்கள், விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் என பல தரப்பினரும் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர். முதலில் தினமும் 100 உணவு பொட்டலங்கள் வழங்கிய இளைஞர்கள் தற்பொழுது 300 உணவு பொட்டலங்கள் வழங்கி வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய சிந்தலக்கரை கிராமத்தைச் சேர்ந்த ஜெயகண்ணன்,” கொரோனா முதல் அலை ஊரடங்கின் போது இந்த தேசிய நெடுஞ்சாலையில் உணவகங்கள் இல்லாத காரணத்தினால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டதை நாங்கள் பார்த்துக்கிறோம். தற்பொழுது 2வது அலை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படக்கூடாது என்பதற்காக உதவி செய்ய வேண்டும் என முடிவு செய்து, கிராம இளைஞர்களுடன் இணைந்து தினமும் 2 சாதம் தயார் செய்து குடிநீர் பாட்டிலுடன் வாகன ஓட்டிகளுக்கு வழங்கி வருகிறோம்,

முதலில் 100 உணவு பொட்டலங்கள் வழங்கினோம், தற்பொழுது 300 பொட்டலங்கள் வழங்கி வருகிறோம், தினமும் 500 உணவு பொட்டலங்கள் வழங்க முயற்சி மேற்கொண்டு உள்ளோம், எங்களின் சேவையை பார்த்து கிராம மக்கள், விளாத்திகுளம் தொகுதி எம்..எல்.ஏ.மார்க்கண்டேயன் என பலதரப்பினரும் உதவி வருகின்றனர். பல கிலோ மீட்டர் பயணித்து வரும் வாகன ஓட்டிகள், மருத்துவமனைகளுக்கு செல்பவர்கள் நாங்கள் வழங்கும் உணவு பொட்டலங்களை வாங்கி கொண்டு மகிழ்ச்சியுடன் எங்களை வாழ்த்தி செல்கின்றனர்” என்றார்

இந்த சாலையில் தினமும் மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு தினமும் வாகனத்தில் காய்கறி ஏற்று சொல்கிறோம், இந்த சாலையில் எங்கும் ஹோட்டல் இல்லாத நிலையில் சிந்தலக்கரையில் இளைஞர்கள் உணவு, குடிதண்ணீர் வழங்குவது மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தங்களது வயிற்று பேசியை இளைஞர்கள் போக்கியுள்ளதாக கூறுகிறார் வாகன ஓட்டி மீனாட்சி சுந்தரம்

தினமும் பால் எடுப்பதற்காக தூத்துக்குடியில் இருந்து மதுரை வாடிப்பட்டிக்கு செல்வதாகவும், இப்பகுதியில் ஹோட்டல் எதுவும் இல்லை என்பதால் பசியதால் செல்வது வழக்கம். ஆனால் தற்பொழுது இளைஞர்கள் உணவு, குடிநீர் பாட்டில் தருவதால் அதனை வாங்கி ஒரு இடத்தில் நிறுத்தி சாப்பிட்டு சொல்வதாகவும், இளைஞர்கள் மற்றும் கிராம மக்களுக்கு நன்றி என்கிறார் வாகன ஓட்டி பாலகிருஷ்ணன்

கொரோனா என்ற அரக்கன் ஒரு புறம் இருந்தாலும் சிந்தலக்கரை கிராமத்தினரைப் போன்ற நல் உள்ளம் கொண்ட இளைஞர்களின் சேவையினால் என்றைக்கு மனிதாபிமானம் இருந்து கொண்டு தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ramprasath H
First published: