ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாமா என்பது தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடந்து வருகின்றது. அந்த கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்துராசன் ஆலையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சிபிஎம் தரப்பிலும் இதேபோன்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்துராசன் அனைத்து கட்சி கூட்டத்தில் பேசுகையில், “தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை தமிழக அரசின் அனுமதியில்லாமல் பிற மாநிலங்களுக்கு மத்திய அரசு தரக்கூடாது.
வேதாந்தா நிறுவனத்திற்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவது கவலைக்குரியது. ஆக்சிஜன் பற்றாக்குறையை பயன்படுத்தி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனம் முயல்கிறது. இதனை அரசு அனுமதிக்கக் கூடாது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அரசே எடுத்து நடத்த வேண்டும். ஆலை முழுவதும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அரசு ஆக்சிஜன் தயாரிக்க எந்தவித ஆட்சேபனையும் இல்லை” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், “ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே முழுமைகாக கையகப்படுத்த வேண்டும். அவ்வாறு கையகப்படுத்தி ஆக்சிஜனை உற்பத்தி செய்யலாம்.
ஆக்சிஜன் உற்பத்தி தவிர்த்து வேறு எந்த நடவடிக்கைகளிலும் ஸ்டெர்லைட் ஆலை இயங்க தமிழக அரசு அனுமதிக்க கூடாது. மக்களின் ஒத்துழைப்புடன் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுடன் கலந்து பேசி சுமூகமான அடிப்படையில் தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், ஸ்டெல்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காகத் திறக்க அனுமதிக்கலாம் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CPI, CPM, Oxygen, Sterlite plant, Thoothukudi, Thoothukudi Sterlite