தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் திறனுடைய 5 பிரிவுகள் செயல்படுகிறது. இதன் மூலம் 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் முதல் பிரிவு இரண்டாவது பிரிவு மற்றும் மூன்றாவது பிரிவுகள் மின் உற்பத்தியை தொடங்கி 40 ஆண்டுகளுக்கும் மேலாகிறது.
நான்காவது மற்றும் ஐந்தாவது பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டு 30 ஆண்டுகளாக மின் உற்பத்தியை செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்தி பிரிவுகளில் கொதிகலன்களில் ஏற்படும் பழுது காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்படுவதும் பழுது சரி செய்யபட்டு மீண்டும் மின் உற்பத்தி செய்யப்படுவதும் தொடர்கதையாக உள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் உச்சமடைந்துள்ளதால் மின் தேவை 17 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு அதிகரித்துள்ளது. இதனால் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் முழு உற்பத்தி திறனுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக கடந்த 30 நாட்களுக்கும் மேலால மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் கையிருப்பு உள்ள நிலக்கரியை கொண்டு ஆலையின் பிரிவுகள் இயக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஒரு பிரிவு மின் உற்பத்தி செய்வதற்காக 7 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது.
தினந்தோறும் 5 பிரிவுகளிலும் மின் உற்பத்தி முழு அளவில் செய்ய வேண்டுமென்றால் 35 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும், ஆலையை இயக்கும் போது பர்னஸ் ஆயில் கொண்டு இயக்கம் தொடங்கப்பட்டு பின்னர் நிலக்கரி மூலம் மின் உற்பத்தி நடைபெறுகிறது.
இது குறித்து தூத்துக்குடி அனல்மின் நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தற்போது 80 ஆயிரம் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளதாகவும், தற்போதைய நிலையில் மின் தேவை அதிகரித்து உள்ளதை கருத்தில் கொண்டு 5 பிரிவுகளிலும் மின் உற்பத்தி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
Read More : 2வது நாளாக தொடரும் மின்வெட்டு.. கரூர் மக்கள் கடும் அவதி!
ஆனால் தமிழக மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தில் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நேற்று (21.04.22) காலை 10 மணி நிலவரப்படி 2 மற்றும் 4 வது பிரிவுகளில் 333 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்துள்ளது. 420 மெகவாட் உற்பத்தி செய்யப்பட வேண்டும்.
Must Read : முதல்வர் மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம்!
இதனை தொடர்ந்து பிற்பகலில் இருந்து 1,3,4, மற்றும் 5 வது பிரிவுகளில் 844 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 1050 மெகாவாட் உற்பத்தியாக வேண்டும் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2வது பிரிவில் கொதிகலனில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.