தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் கால் வலி என்று சிகிச்சைக்கு சென்ற மூதாட்டிக்கு வலது காலுக்கு பதிலாக இடது காலில் ஆப்ரேசன் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இலுப்பையூரணி ஊராட்சிக்குட்பட்ட மறவர்காலனி பகுதியை சேர்ந்த மணிமுருக குமார் என்பவரது மனைவி குருவம்மாள் (67). மணிமுருககுமார் இறந்து விட குருவம்மாள் தனியாக வசித்து வருகிறார். 2 மகன்கள் இருந்த போதிலும், குருவம்மாளை யாரும் கவனிப்பதில்லை என்று கூறப்படுகிறது.
லிங்கம்பட்டி பகுதியில் உள்ள கல்குவாரியில் வேலை பார்த்து அதில் கிடைக்கும் வருமானத்தில் தனது வாழ்வினை நடத்தி வருகிறார் குருவம்மாள். தனது வலது காலில் அடிக்கடி வலி ஏற்பட்டதால் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்துள்ளார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர் சீனிவாசகன் என்பவர் காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த மாதம் 22ம் தேதி குருவம்மாள் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அவருக்கு இந்த மாதம் 4ம் தேதி மருத்துவர் சீனிவாசகன் தலைமையில் காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சை முடிந்த போதிலும் அரை மயக்கத்தில் இருந்த மூதாட்டி குருவம்மாளை பெண்கள் பொது பிரிவுக்கு மாற்றியுள்ளனர். மயக்கம் தெளித்த பின்னர் குருவம்மாள் தனது காலை பார்த்த போது, இடது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனை தொடர்ந்து அங்குள்ள ஊழியர்களிடம் இது பற்றி கேட்ட போது அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி இருந்துள்ளனர். வலது காலுக்கு பதில், இடது காலில் ஆப்ரேசன் செய்து விட்டார்கள் என்று அழுது புலம்பியுள்ளார் குருவம்மாள்.
இது குறித்து அறுவை சிகிச்சை மருத்துவருக்கு ஊழியர்கள் சொல்ல, அவர் நேரில் வந்து பார்த்து ஒன்றும் பிரச்சினை இல்லை, இந்த காலில் கட்டி இருந்ததாகவும், அதனால் அறுவை சிகிச்சை செய்ததாகவும் கூறியுள்ளார்.
தனது காலில் எந்த கட்டியும் இல்லை என்றும், வலது கால் வலி என்று வந்த தனக்கு இடது காலில் அறுவை சிகிச்சை செய்ததால் தற்பொழுது 2 கால்களில் கடுமையாக வலி ஏற்பட்டு அவதிப்பட்டு வருவதாக மூதாட்டி குருவம்மாள் வேதனையுடன் கூறுகிறார்.
வலது காலில் அறுவை சிகிச்சை செய்து விடுவதாக மருத்துவர்கள் கூறியதாகவும், ஆனால் குருவம்மாள் மறுத்து விட்டதாகவும், ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்த கால் மட்டும் சரி செய்து கொடுங்கள் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
Also read... தமிழ்நாட்டில் வடமாநிலத்தவரால் சட்டம் – ஒழுங்கு சீரழிவு: உள்நுழைவு அனுமதிச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த சீமான் வேண்டுகோள்
இது பற்றி சம்பந்தபட்ட மருத்துவர் சீனிவாசகனிடம் கேட்ட போது இடது காலில் கொழுப்பு கட்டி இருந்ததாகவும், ஆகையால் தான் அதனை அறுவை சிகிச்சை செய்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளதாகவும், இதில் எந்த பிரச்சினையும் இல்லை, மற்றொரு காலிலும் அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தன்மீது பொழுது போகாமல் சிலர் இது போன்ற தகவலை கூறி வருவதாக தெரிவித்துள்ளார்.
இப்பிரச்சினை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட போது இதுபற்றி விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். தனக்கு சிகிச்சை அளித்தது தொடர்பாக ஆவணங்களை மூதாட்டி கேட்ட போது அதனை மருத்துவமனை ஊழியர்கள் தர மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.