அரசு மருத்துவமனையில் கலைஞர் உணவகம்.. கோவில்பட்டி நகராட்சி கூட்டத்தில் முடிவு - அதிமுக எதிர்ப்பு
அரசு மருத்துவமனையில் கலைஞர் உணவகம்.. கோவில்பட்டி நகராட்சி கூட்டத்தில் முடிவு - அதிமுக எதிர்ப்பு
கலைஞர் உணவகம் - அதிமுக எதிர்ப்பு
Thoothukudi District : கோவில்பட்டி நகராட்சியில் நடைபெற்ற முதல் கூட்டத்தில் அரசு மருத்துவமனையில் கலைஞர் உணவகம் அமைக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனையில் அம்மா உணவகத்தின் கிளை செயல்பட்ட நிலையில் தற்பொழுது கலைஞர் உணவகம் கொண்டு வந்தால் அம்மா உணவகத்தின் நிலை என்னவாகும் என்று கூறி அதிமுக உறுப்பினர் கவியரசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியின் முதல் கூட்டம் நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் வரிவிதிப்பு மேல் முறையீட்டு குழு உறுப்பினர், ஒப்பந்த குழு உறுப்பினர் மற்றும் நியமன குழு உறுப்பினர்களுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து நகராட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானத்தில் ஒன்றாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கலைஞர் உணவகம் அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு அதிமுக உறுப்பினர் கவியரசன் எதிர்ப்பு தெரிவித்தார். ஏற்கனவே கடந்த அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் அம்மா உணவகத்தின் கிளை தொடங்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வந்ததாகவும், அதன் நிலை என்ன என்று கூறி அதன் திறப்பு விழா புகைப்படத்தினை காண்பித்து பேசினார்.
இதற்கு பதில் அளித்த நகராட்சி ஆணையர் ராஜராம், அது தற்காலிகமாக மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருபவர்களுக்காக தொடங்கப்பட்டதாகவும், அரசு விதிமுறையின் படி நகராட்சியில் ஒரு அம்மா உணவகம் மட்டும் தான் செயல்பட முடியும், அது ஏற்கனவே பார்க் சாலையில் செயல்பட்டு வருவதாகவும், எனவே தான் அரசு மருத்துவமனையில் கலைஞர் உணவகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் : மகேஷ்வரன் , கோவில்பட்டி
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.