சமூக வளைதளங்கள் வளர்ச்சி ஒரு புறம் தவறாக பயன்படுத்தப்பட்டாலும், மறு புறம் பலரும் அதனை தங்களது திறமைகளை நிரூபிக்கும் களமாக பயன்படுத்தி சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் கோவில்பட்டி அருகே வானிலை தகவல் தொடர்பாக யூ டியூப் தொடங்கி சாதனை படைத்து வருகிறார் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் முத்துச்செல்வம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சென்னையம்பட்டியைச் சேர்ந்த சின்னமாரியப்பன் - உமாதேவி தம்பதியின் மகன் முத்துச்செல்வம்(19). தேனி அருகே கோட்டூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் படித்து வருகிறார். முத்துச்செல்வத்தின் குடும்பம் விவசாய பின்னணியை கொண்டது. அவரது பெற்றோர் விவசாயம் செய்து வருகின்றனர்.
சிறுவயதில் அதிக மழை, அதிக வறட்சி என இயற்கை இடர்பாடுகளால் தனது பெற்றோர் சரிவர விவசாயத்தில் வருவாய் பெறமுடியமால் நஷ்டமடைந்து வருவதை கண்கூடாக பார்த்த முத்துச்செல்வம், இயற்கை இடர்பாடுகளை தவிர்க்க துல்லியமாக வானிலை தகவல்கள் விவசாயிகளுக்கு கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற எண்ண துளிர்விட்டுள்ளது. தனது பெற்றோர் மட்டுமல்ல சுற்றியுள்ள பகுதியில் ஏராளமான மானாவாரி விவசாயிகள் இருப்பதால் அனைவரும் பயன் பெறும் வகையில் அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்பது முத்துச்செல்வத்தின் எண்ணமாக இருந்துள்ளது.
அதற்கு வாய்ப்பாக கொரோனா காலம் அமைந்துள்ளது. அப்போது வீட்டில் அதிக நேரம் இருந்த போது, ஆன் லைன் வகுப்பிற்காக பெற்றோர் வாங்கி கொடுத்த செல்போன் மூலமாக வானிலை தகவல் எவ்வாறு வெளியிடப்படுகிறது. அதற்கான தகவல்கள் எங்கு கிடைக்கிறது. அதனை கணித்து துல்லியமாக சொல்வது எப்படி என்பதனை தேடி முத்துச்செல்வம் பயணிக்க தொடங்கி அதனை அறிய தொடங்கியுள்ளார்.
இதில், ஐரோப்பிய நாட்டின் செயற்கைக்கோள் உலக முழுவதும் உள்ள வானிலையை ஆய்வு செய்து, தரவுகள் அளித்துக்கொண்டே இருப்பதை தெரிந்து கொண்டு, அதனுடன் இசிஎம்மில் இருந்து வரும் தரவுகளைக் கொண்டு ஆய்வு செய்து, தமிழகத்தில் எந்த இடத்தில் தாழ்வுநிலை உருவாகும் அல்லது புயல்உருவாகும் என்பதை 15 நாட்களுக்கு முன்னதாக தெரிவிக்கலாம் என்பதனை கண்டறிந்து பேஸ்புக், வாட்ஸ் அப் மூலமாக முத்துச்செல்வம் வானிலை தகவல்களை தெரிவிக்க தொடங்கியுள்ளார்.
முத்துச்செல்வம் தகவல்கள் சரியாக இருப்பதாக அவரை பின்தொடர்ந்த பலரும் பாராட்டியது மட்டுமின்றி ஊக்கம் அளித்த காரணத்தினால், இவர் கடந்த 2020-ம்ஆண்டு மே 15-ம் தேதி வானிலை குறித்த தகவல்களை மக்களுக்கு வழங்கும் வகையில் வெதர்மேன் என்ற யூ டியூப் சேனலைத் தொடங்கியுள்ளார். புயல், காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும்பருவ நிலை மாற்றங்கள் குறித்து அவ்வப்போது பதிவிட்டு வந்தார்.
இவரது தரவுகள் சரியாக இருக்கவே, தற்போது இவரை ஒரு லட்சம் பேருக்கும் மேல் பின் தொடர்கின்றனர். யூ டியூப் நிறுவனம் இவருக்கு விருது வழங்கியுள்ளது. வானிலை பற்றி நொடிக்கு நொடி விவசாயிகளுக்கு முழுமையான தகவல்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக புதிய செயலி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் மாணவர் முத்துச்செல்வம்.
இது குறித்து மாணவர் முத்துச்செல்வம் கூறும் போது, வானிலை குறித்து அறியாமல் பயிரிட்டு, அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் தனது குடும்பத்தில் இருந்து தெரிந்து கொண்டதாகவும், வானிலை குறித்து துல்லிய தகவல்களை விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற ஆவல் வந்ததாகவும், ஐரோப்பிய நாட்டின் செயற்கைக்கோள் தரவுகளை வைத்து ஆய்வு செய்து கணித்து விவசாயிகளுக்கு உதவும் வகையில் முத்துச்செல்வம் வெதர்மேன்’ என்ற யூ டியூப் சேனலைத் தொடங்கி வானிலை தகவல்களை வழங்கி வருவதாக கூறினார்.
2020-ம் ஆண்டு தென்மேற்குவங்கக் கடல்பகுதியில் ‘நிவர்’ புயல் உருவானது. இந்த புயல் புதுச்சேரியில் கரையைக் கடக்கும் என, சென்னை வானிலை மையம் அறிவித்தது. ஆனால், நான் இந்த புயல் செங்கல்பட்டு மாவட்டம் தெற்கு பகுதியான மாமல்லபுரம் முதல் கல்பாக்கம் இடையே கரையைக் கடக்கும் எனக் கூறியிருந்தேன். அதுபோல்தான், கரையைக் கடந்தது. வானிலை குறித்த அறிவிப்புகளை 15 நாட்களுக்கு முன்னதாக தெரிவிப்பதால் விவசாயிகள் பயனடைவார்கள். உழுவது முதல் அறுவடை செய்வது வரை விவசாயிகள் பணிகள் மேற்கொள்வதற்கு தன்னுடைய யூ டியூப் பயனுள்ளதாக இருக்கிறது.
Read More : போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்க தயார் - அமைச்சர் சிவசங்கர்
தற்போது விவசாயிகளுக்காக ஒரு செயலியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். தமிழக அரசு உதவி செய்தால் இதை விட சிறப்பான விஷயங்களைச் செய்யலாம். தான் பள்ளியில் படிக்கும் போது, வானிலை ஆய்வு மைய இயக்குநராக பணியாற்றிய ரமணனின் வானிலை பற்றிய தகவல்கள் கூறுவதை அடிக்கடி தொலைக்காட்சியில் பார்ப்பேன். அதுபோல் தானும் வானிலை குறித்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணம் தனக்குள் இருக்கிறது என்கிறார்.
முத்துச்செல்வத்தின் தாய் உமாதேவி கூறுகையில், முதலில் தனது மகன் செல்போனை அடிக்கடி பயன்படுத்தி கொண்டு இருப்பதை கண்டு சத்தம் போட்டுள்ளதாகவும், ஆனால் வானிலை குறித்து விவசாயிகளுக்கு பயனுள்ள தகவல்கள் தருவதை பார்த்து, அவருக்கும் ஊக்கம் கொடுப்பது மட்டுமின்றி, தேவையான உதவிகளை செய்து வருவதாகவும், தனது மகன் அடுத்த கட்ட நோக்கி பயணிக்க, அரசு தான் உதவி செய்ய வேண்டும், விவசாயிகளுக்காக தனது மகன் எடுத்துள்ள முயற்சி பெருமையாக இருப்பதாக கூறுகிறார்.
Must Read : டெல்டா மாவட்டத்தில் விவசாயத்தைப் பாதிக்கும் ஆலையை தமிழக அரசு அமைக்காது - முதல்வர் மு.க.ஸ்டாலின்
அப்பகுதியை சேர்ந்த பெண் விவசாயி மாரித்தாய் கூறுகையில், முத்துச்செல்வம் யூ டியூப் மூலமாக, அவரிடம் இருந்தும் வானிலை தகவல்கள் பெறமுடிவதாகவும், அது சரியாக இருப்பது மட்டுமின்றி தங்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாகவும், அவர் கூறும் தகவல்களை வைத்து விவசாய பணியில் ஈடுபட்டு வருவதால் நஷ்டம் குறைந்து லாபம் கிடைக்க தொடங்கியுள்ளதாகவும், விதை விதைப்பது, களை எடுப்பது, உரம் இடுவது, அறுவடை என அனைத்துமே அவரது வானிலை தகவல்களை கொண்டு பணிகளை தொடங்கி வருவதால் தங்களுக்கு நல்ல பயனுள்ளதாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சிறுவயதில் ஏற்பட்ட அனுபவங்கள் இன்றைக்கு முத்துச்செல்வத்திற்கு நம்பிக்கையாக ஊன்றி சாதனை படைக்க வைத்துள்ளது மட்டுமின்றி, விவசாய பெருமக்கள் பயன்பெறும் வகையில் புதிய செயலியை உருவாக்க முயன்று வரும் அவரது முயற்சி வெற்றி பெற அரசு உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்பது அனைவரின் விருப்பம் ஆகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Farmers, Kovilpatti, Rain Forecast, Weather News in Tamil