Home /News /tamil-nadu /

500 மீட்டருக்கு 8 வேகத்தடைகள்... விபரீத சாலையால் அச்சத்தில் கோவில்பட்டி மக்கள்

500 மீட்டருக்கு 8 வேகத்தடைகள்... விபரீத சாலையால் அச்சத்தில் கோவில்பட்டி மக்கள்

 விபரீத சாலையால் அச்சத்தில் கோவில்பட்டி பொதுமக்கள்

விபரீத சாலையால் அச்சத்தில் கோவில்பட்டி பொதுமக்கள்

500 மீட்டருக்கு 8 வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதிலும் மந்திதோப்பு சாலை மிகவும் குறுகிய சாலையாக உள்ளது. அதனை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக இருக்கும் நிலையில் அதனை நிறைவேற்றமால் அப்பகுதியில் அதிக வேகத்தடைகளை அமைத்து அப்பகுதி விபத்து பகுதியாக மாறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
'அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு" என்பார்கள் அந்த பழமொழிக்கு ஏற்ப கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் மெயின்சாலைகளில் அதிகளவு அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகள் காரணமாக பள்ளி மாணவர்கள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக தினந்தோறும் பாதிக்கப்பட்டு வருவது மட்டுமின்றி போக்குவரத்து நெருக்கடியும், விபத்துக்களும் அதிகாரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 2வது மிகப்பெரிய நகரம் கோவில்பட்டி, தீப்பெட்டி, கடலைமிட்டாய், நூற்பாலை, ஆயுத்த ஆடைகள் தயாரிப்பு என பல்வேறு தொழில்களும், அதனை சார்ந்த தொழிலாளர்கள் என அதிகளவில் கொண்ட நகரம். ஒவ்வொரு நாளும் வளர்ச்சியடைந்து வரும் கோவில்பட்டி நகரில் மக்கள் தொகை அதிகரிப்பது போல வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அது மட்டுமின்றி போக்கவரத்து நெருக்கடியும், விபத்துக்களும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்கவும், விபத்துக்களை தடுக்கவும் எவ்வித நடவடிக்கை எடுக்கமால் விபத்துக்களை மேலும் அதிகரிக்கும் வகையில் வேகத்தடைகளை நகராட்சி நிர்வாகம் முக்கிய மெயின் சாலைகளில் அமைத்து வருவதாக பொது மக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.



பொதுவாக அதிக விபத்துக்கள் ஏற்படும் பகுதி, பள்ளி,கல்லூரி பகுதிகளில் வேகத்தடை அமைப்பது வழக்கம். ஆனால் கோவில்பட்டி நகரில் தெருக்களில் இருந்து மெயின்சாலை இணைக்கும் பகுதி முழுவதும் வேகத்தடை அமைத்துள்ளனர். குறிப்பாக பசுவந்தனை சாலை, மந்திதோப்பு ரோடு, பழினியாண்டவர்சாலை என முக்கிய சாலை பகுதிகளில் அளவுக்கு அதிகமான வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.



குறிப்பாக 500 மீட்டருக்கு 8 வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் பல்வேறு கிராமங்களில் இருந்து நகருக்குள் வாகனங்களில் வரக்கூடிய மக்கள் பல்வேறு இன்னல்களுக்குள்ளாகி வருகின்றனர். அதிலும் மந்திதோப்பு சாலை மிகவும் குறுகிய சாலையாக உள்ளது. அதனை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக இருக்கும் நிலையில் அதனை நிறைவேற்றமால் அப்பகுதியில் அதிக வேகத்தடைகளை அமைத்து அப்பகுதி விபத்து பகுதியாக மாறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அளவுக்கு அதிகமான வேகத்தடைகள் ஒரு புறம் என்றால் வேகத்தடைகள் அமைக்கப்படும் போது கடைபிடிக்க வேண்டிய எந்த விதிமுறைகளும் பின்பற்றபடமால் அமைத்துள்ளனர். வேகத்தடை இருப்பதற்கான குறியீடுகள் இல்லை என்பதால் பல வாகன ஓட்டிகள் வேகத்தடை தெரியாமல் வேகமாக சென்று விபத்துக்குள்ளாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சில இடங்களில் அமைக்கப்பட்ட வேகத்தடைகளில் வெள்ள கோடுகள் எதுவும் அமைக்கப்படவில்லை என்பதால் சாலையும், வேகத்தடையும் ஒன்றாக இருக்கும் நிலை உள்ளது.



தேவையில்லமால் அதிக வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் கடுமையாக பாதிக்கப்படுவது மட்டுமின்றி பள்ளி மாணவர்கள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். மேலும் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 15நிமிடத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு அதிகளவில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளினால் 30 நிமிடங்கள் பிடிப்பதாக கூறுகின்றனர். இதனால் பலருக்கும் சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு தெருவுக்கு 2 வேகத்தடைக்கு பதிலாக 5 முதல் 7 வேகத்தடைகளை நகராட்சி நிர்வாகம் அமைத்துள்ளதால் வாகனங்கள் அதிகளவில் பாதிப்பும், விபத்துக்களும் ஏற்படுவதாகவும், பள்ளி மாணவர்கள், கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படும் நிலை இருப்பது மட்டுமின்றி, சரியான நேரத்திற்குள் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் சரியான நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருவதாகவம், மெயின் சாலையுடன் இணைக்கும் தெருக்களில் வேகத்தடைகள் அமைக்கமால், மெயின்சாலைகளில் அமைத்துள்ளதாகவும், போக்குவரத்து நெருக்கடி, விபத்துக்களை தடுக்க சாலைகளை விரிவாக்கம், செய்தால் தனியாங்கி போக்குவரத்து சிக்னல் அமைப்பது என ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கமால் வேகத்தடை என்ற பெயரில் விபத்துக்களை ஏற்படுத்தி வருவது வருத்தமளிக்கிறது என்கின்றனர் பொது மக்கள்.



தேவையான இடங்களில் மட்டும் வேகத்தடைகள் அமைக்க வேண்டும், தேவையில்லாத இடங்களில் உள்ள வேகத்தடைகளை அகற்ற வேண்டும், மந்திதோப்பு பகுதியில் சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியும் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

இதையும் படியுங்கள் | 'ரசீது பேப்பர் காலியாகிவிடும்'... மின்சாரவாரிய அலுவலகத்தில் மின்கட்டணம் வாங்க மறுப்பு - கிராம மக்கள் கடுமையாக பாதிப்பு

இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது சில ஏரியாக்களில் உள்ள கவுன்சிலர் தங்கள் மக்களின் கோரிக்கை என்று கொடுத்ததால் வேகத்தடைகள் அமைக்கப்பட்டதாகவும், இது குறித்து ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.



வேகத்தடைகள் அமைப்பதற்கு என்று தமிழக அரசு வழிமுறைகள் மற்றும் விதிகளை நடைமுறைப்படுத்தியுள்ள நிலையில் எதையும் பின்பற்றமால் விதிமுறைகளை மீறி வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பொது மக்கள் தான் அதிகளவில் பாதிக்கப்படும் நிலை இருப்பதால் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Kovilpatti

அடுத்த செய்தி