விளாத்திகுளம் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக கடையில் பூட்டை உடைத்து பணம் திருடுதல், கத்தியை காட்டி வழிப்பறி முயற்சி என அலப்பறை கொடுத்து போலீசாருக்கு போக்கு காட்டி வந்த பலே திருடனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காய்கறி மார்க்கெட் பகுதியில் உள்ள சன்னதி தெருவில் பலசரக்கு கடை நடத்தி வருபவர் ஸ்டாலின் பெஞ்சமின்(வயது 43). இவர் கடந்த 17-ந்தேதி இரவு வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் காலையில் கடைக்கு வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடையில் இருந்த ரூ.25 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. இதையடுத்து ஸ்டாலின் பெஞ்சமின் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது சைக்கிளில் வந்த முதியவர் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து பணத்தினை திருடி சென்றது தெரியவந்தது.
திருட்டுக்கு பயன்படுத்திய சைக்கிள்
சைக்கிள் திருடனின் அட்ராசிட்டி
இதையடுத்து போலீசார் சிசிடிவி காட்சியின் அடிப்படையில் முதியவரை தேடி வந்தனர். அது மட்டுமின்றி நகரில் சில கடைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது, அந்த முதியவர் ஹாயாக சைக்கிளில் வலம் வருவது தெரியவந்தது. இந்நிலையில் நேற்று விளாத்திகுளம் அருகே சித்தவநாயக்கன்பட்டி நுழைவு வாயில் அருகே விளாத்திகுளம் மீரான்பாளையம் தெருவைச் சேர்ந்த ஆனந்தராமன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருக்கும் போது, கடையில் திருடிய முதியவர் ஆனந்தராமனை கத்தியை காட்டி வழிமறித்து பணம் பறிக்க முயன்றுள்ளார். ஆனந்தராமன் சத்தம் போடவே அந்த முதியவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து ஆனந்தராமன் விளாத்திகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நாளுக்கு நாள் முதியவரின் அட்ராசிட்டி அதிகரித்து வந்ததால், போலீசார் முதியவரை பிடிக்க தனிப்படை அமைத்து தேட தொடங்கினார். இந்த சூழ்நிலையில் விளாத்திகுளம் - எட்டயபுரம் சாலையில் உள்ள ஹோட்டல் முன்பு முதியவர் இருப்பதை பார்த்த போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் விருதுநகர் மாவட்டம் திருத்தாங்கல் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 71) என்பது தெரியவந்தது. மேலும் ஸ்டாலின் பெஞ்சமின் கடையில் பணம் திருடியது, ஆனந்தராமனை கத்தியை காட்டியது மிரட்டியதும் தான் என்று ராஜேந்திரன் ஒத்துக்கொண்டார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது ராஜேந்திரன் மீது தூத்தக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் 44 வழக்குகள் இருப்பதும், இதில் 29 திருட்டு வழங்குகள் என்பதும் தெரியவந்து. அது மட்டுமின்றி எங்கு சென்றாலும் சைக்கிளில் சென்று திருடுவது தான் இவரது ஸ்டைல் என்பதும் தெரியவந்தது.
சைக்கிளில் சென்று நோட்டம்
பகல் நேரங்களில் சைக்கிளில் சென்று கடைகளை நோட்டமிடுவது, இரவு நேரத்தில் திருடுவதை பழக்கமாக கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகளில் மது அருந்தி விட்டு தனியாக செல்பவர்கள் மற்றும் ஆள்நாடமாட்டம் இல்லாத பகுதியில் வருபவர்களை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது. இதையெடுத்து போலீசார் ராஜேந்திரனை கைது செய்து அவரிடமிருந்து ரூ 25 ஆயிரம் பணத்தினை பறிமுதல் செய்தனர்.
கடந்த ஒரு வாரகாலமாக போலீசாருக்கு போக்கு காட்டி வந்த பலே திருடன் சைக்கிள் ராஜேந்திரனை கைது செய்துள்ள தனிப்படை போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், விளாத்திகுளம் டி.எஸ்.பி.பிரகாஷ் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.