தூத்துக்குடி : ரூ.6 லட்சம் கொள்ளையடித்த கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகளை வைத்து பிடித்த போலீசார்

சிசிடிவி வீடியோ

டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கி 6 லட்சம் கொள்ளையடித்த கும்பல் சிசிடிவி காட்சியினால் போலீசாரிடம் சிக்கி கொண்டனர். இதில் 2 பேரை போலீசார் கைது செய்து 3 பைக் மற்றும் ஒரு காரை பறிமுதல் செய்தனர். 

  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அண்ணாநகர் காலனி பகுதியை சேர்ந்தவர் முத்துச்சாமி மகன் முருகன். இவர் குளத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அரசு மதுபானக்கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி அன்று மது விற்ற ரூபாய் 6,13,220- பணத்தை கீழ வைப்பாற்றில் உள்ள வங்கியில் செலுத்துவதற்காக முருகன் தனது இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்று கொண்டிருந்தார். அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் முருகனை பின் தொடர்ந்து இருச்சக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்மநபர்கள் முருகனிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் குளத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர்  பிரகாஷ் மேற்பார்வையில் குளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு)  முருகன் தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளையடித்து சென்றவர்களை கைது செய்ய உத்தரவிட்டார்.

அதன்பேரில் தனிப்டையினர் தீவிர விசாரணை நடத்தி, சிசிடிவி  பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன் மூலம் பாரத், முத்துஇருள்  மணிகண்டன் என்ற சுருட்டைமணி ஆகியோர் டாஸ்மாக் ஊழியரான முருகனிடம் கொள்ளையில்  ஈடுபட்டது தெரியவந்தது.

இதில் முத்துஇருள் மதுரை மாவட்டம் சமயநல்லூர் காவல் நிலைய கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாரத் மற்றும் மணிகண்டன் என்ற சுருட்டைமணி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்களும், ஒரு காரையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் விசாரணையில் குளத்தூரில் முருகன் மேலாளராக இருக்கும் டாஸ்மாக் பாரில் மது அருந்தியுள்ளனர். கையில் கொண்டு வந்த பணத்தினை முழுவதும் மது அருந்தி செலவு செய்துள்ளனர். இதையெடுத்து தூத்துக்குடிக்கு கிளம்ப பைக்கினை எடுக்க முயன்ற போது தான் பைக்கில் பெட்ரோல் இல்லை என்பது தெரியவந்தது. இதையெடுத்து என்ன செய்வது என்று யோசித்த 3 பேரும் வழிப்பறியில் ஈடுபட முடிவு செய்தனர்.

இதையடுத்து அந்த பகுதியில் அப்போது டாஸ்மாக் மேலாளர் முருகன் சென்றுள்ளார். அவரை வழிமறித்து தாக்கி அவரிடம் இருந்த பணத்தினை பறித்துக்கொண்டு தப்பி தூத்துக்குடிக்கு சென்றுள்ளனர். பின்னர் அதில் இருந்து ரூ 5000 எடுத்து மது அருந்தியுள்ளனர். மறுநாள் தூத்துக்குடியில் பிரபல ஜவுளிக்கடைக்கு சென்று 30,000 ரூபாய்க்கு 3 பேரும் துணி எடுத்துள்ளனர். மேலும் பழைய கார் ஒன்றியனை விலைக்கு வாங்கியுள்ளனர். பின்னர் மீதி பணத்தினை சமமாக பிரித்து கொண்டு பிரிந்து சென்று விட்டனர்.

மதுரைக்கு சென்ற முத்துஇருள், பரத்த இருவரும் ஆளுக்கொரு பைக் ஒன்றினை வாங்கியுள்ளனர். இதற்கிடையில் முத்துஇருள் கஞ்சா வழக்கில் சிறைக்கு சென்று விட மற்ற இருவர்கள் தனிப்படையிடம் மாட்டிக்கொண்டனர்.

இந்த கொள்ளை வழக்கு தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி கொண்டு இருக்கும் போது குளத்தூரில் ஒரு இடத்தில் பதிவாகி இருந்த சிசிடிவி  வீடியோ கிடைத்துள்ளது. அந்த வீடியோவில் இருந்த 3 பேர் பற்றி விசாரித்த போது 3 பேரும் வெளியூர் நபர்கள் என்பதும், பைக் மதுரை எண் கொண்டதும் தெரியவந்துள்ளது.

இதையெடுத்து போலீசார் பைக் எண்ணை கொண்டு விசாரணை தொடங்கியுள்ளனர். அந்த 7 பேர் பெயரில் மாறி 8வது தாக மணிகண்டனிடம் விற்பனை செய்யப்பட்டது, ஆனால் அவர் பெயர் மாற்றமால் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையெடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்து அவர் கொடுத்த தகவலின் படி பாரத்தினை கைது செய்துள்ளனர். திரைப்பட பாணியில் திருடர்களை கைது செய்த காவல்துறையினரை பொது மக்கள் பாராட்டியுள்ளனர்.

மேலும் படிக்க... கொரோனாவால் மூடப்பட்ட பெரிய கோவில்... தலையாட்டி பொம்மை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

இவ்வழக்கில் விவேகமாகவும், விரைந்தும் செயல்பட்டு, எதிரிகளை கண்டு பிடித்து 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு காரை பறிமுதல் செய்த தனிப்படையினரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: