யூடியூப் பார்த்து வங்கிகளில் கொள்ளையடிக்க திட்டமிட்ட 5 பேர் கைது..

Youtube Video

கோவில்பட்டி மற்றும் விருதுநகர் வங்கிகளில் கொள்ளையடிக்க திட்டமிட்ட பொதுத்துறை வங்கி உதவி மேலாளர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 • Share this:
  கோவில்பட்டியில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கிளையை மர்ம நபர் ஒருவர் அடிக்கடி நோட்டமிட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த நபர் சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த வெள்ளைப்பாண்டி என்பதை கண்டறிந்த போலீசார், அவரது தொலைபேசி எண்ணை சைபர் கிரைம் போலீசார் மூலம் கண்காணித்தனர். வெள்ளைப்பாண்டியின் செல்ஃபோன் அழைப்புகள் மற்றும் வாட்ஸ் அப் உரையாடல்களை கண்காணித்த போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாயின.

  கோவில்பட்டியில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் விருதுநகர் மாவட்டம் நள்ளியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளில் கொள்ளையடிக்க ஒரு கும்பல் திட்டமிட்டு வருவது தெரியவந்தது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வந்த வாஷிங்டன் என்பவர் இதில் மூளையாகச் செயல்பட்டதை போலீசார் கண்டறிந்தனர்.

  ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம்பாக்கத்தினை சேர்ந்த ஆண்டனி, கீழக்கரையை சேர்ந்த குமார், கமுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி, சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த வெள்ளைப்பாண்டி ஆகியோர் இந்த கொள்ளைத் திட்டத்தில் கூட்டாளிகளாக இணைந்துள்ளனர். வங்கி உதவி மேலாளராக பணியாற்றி வந்த வாஷிங்டன் கடந்த சில வாரங்களுக்கு முன் 98 லட்ச ரூபாய் கையாடல் செய்த விவகாரத்தில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

  இந்நிலையில் வங்கியை கொள்ளையடிக்க திட்டமிட்ட வாஷிங்டனுக்கு கோவில்பட்டி வங்கி குறித்து வெள்ளைச்சாமி தகவல் அளித்துள்ளார். அதற்கு உள்ளூர் நபர் ஒருவரின் உதவி தேவை என்பதால் வெள்ளைச்சாமியின் நண்பரான வெள்ளைப்பாண்டியை தேர்ந்தெடுத்து, அவருக்கு முன்பணமாக ஒரு லட்ச ரூபாய் கொடுத்துள்ளனர்.  விருதுநகர் மாவட்டம் நள்ளியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து அறிந்திருந்த வாஷிங்டன், அந்த வங்கிக்கும் குறி வைத்தார். கடந்த மே மாதம் முதல் யூடியூபில் பல்வேறு வீடியோக்களை பார்த்து எப்படி கொள்ளையடிப்பது என்று இந்த குழுவினர் திட்டம் தீட்டியுள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும் படிக்க... தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்த மு.க. ஸ்டாலின்

  வங்கியில் பணம் எங்கு இருக்கும்? எவ்வாறு வங்கிக்குள் நுழைவது? என்பது போன்ற தகவல்களை வாஷிங்டன் தனது கூட்டாளிகளுக்கு சொல்லிக் கொடுத்துள்ளார். அவர்கள் செயலில் இறங்கும் முன்பே போலீசாரின் கண்காணிப்பால் 5 பேரும் கூண்டோடு சிக்கியுள்ளனர். இவர்கள் ஏற்கனவே கொள்ளை சம்பவங்களை நிகழ்த்தியுள்ளார்களா? இந்த கும்பலுடன் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
  Published by:Vaijayanthi S
  First published: