தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே செல்போன் டவர் பொருள்களை திருடி சென்ற 4 பேரை எட்டயபுரம் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 3, லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள், 2 பைக் மற்றும் 1 லோடு ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரம்- விளாத்திகுளம் சாலையில் கழுகசாலபுரம் கிராமத்தினை சேர்ந்த அழகிரிசாமி என்பவருக்கு சொந்தமான இடத்தில் கடந்த 2008ம் ஆண்டு முதல் மாதந்திர வாடகையில் தனியார் நிறுவனத்தின் (ஏர்டெல்) செல்போன் டவர் செயல்பட்டு வந்துள்ளது.
இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போன் டவர் செயல்பாடு நிறுத்தப்பட்டு ஜிடிஎல் என்ற நிறுவனத்திடம் விற்கப்பட்டதாக தெரிகிறது. செயல்பாடு நிறுத்தப்பட்ட அந்த செல்போன் டவரில் இருந்த பேட்டரி மற்றும் ஜெனரேட்டரில் உள்ள பாகங்கள், கேபிள் வயர்கள் அடிக்கடி திருடு போய் வந்துள்ளது. இதனை தொடர்ந்து ஜிடிஎல் நிறுவனத்தினை சேர்ந்த ஊழியர் ஜாகீர் உசேன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று செல்போன் டவரில் சந்தேகப்படும் வகையில் சிலர் மேலே ஏறி பொருள்களை கழட்டி வாகனம் மூலம் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த நிலத்தின் உரிமையாளர் அழகிரிசாமி மகன் ஜெயராமன், அங்கிருந்தவர்களிடம் யார்? நீங்கள் ஏன் பொருள்களை கழட்டி எடுத்து சொல்கிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவர்கள் முன்னுக்கு பின்னாக பதில் கூறியதால் ஜெயராமன், ஜாகீர் உசேனுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
Must Read : ஆக்கிரமிப்பு என கூறி அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை டிராக்டர் மூலம் அகற்றிய அதிகாரிகள்... விவசாயிகள் கண்ணீர்
அதற்குள்ளாக அந்த கும்பல் செல்போன் டவரில் இருந்த கழட்டிய பொருள்களை தாங்கள் கொண்டு வந்த லோடு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு தப்பியோடி உள்ளனர். இதையெடுத்து ஜிடிஎல் நிறுவனத்தினை சேர்ந்த ஊழியர் ஜாகீர் உசேன் எட்டயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் விளாத்திகுளம் டி.எஸ்.பி. பிரகாஷ் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.
போலீசார் சிந்தலக்கரை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பைக்கில் வந்த ஒருவர் போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயற்சி செய்துள்ளார். போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்திய போது, ஜமீன் இலந்தைகுளத்தினை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்ததும் மேலும் கழுகாசலபுரத்தில் உள்ள செல்போன் டவரில் பொருள்களை திருடிய கும்பலில் ஒருவர் என்பதும் தெரியவந்தது.
இதையெடுத்து போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தினர். மணிகண்டன் கொடுத்த தகவலின் படி திருட்டி ஈடுபட்ட மீனாட்சிபுரத்தினை சேர்ந்த சசிக்குமார், பாறைப்பட்டி கிராமத்தினை சேர்ந்த சின்னத்துரை, சங்கரேஸ்வரன் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் செல்போன் டவரில் திருடப்பட்ட 3 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள், 2 பைக்குகள் மற்றும் 1 லோடு ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதில் கைது செய்யப்பட்டுள்ள சின்னத்துரை மற்றும் சசிக்குமார் இருவரும் தான் இந்த திருட்டுக்கு மூளையாக செயல்பட்டு வந்துள்ளனர். சின்னத்துரை மீது ஏற்கனவே சென்னை ஆவடி பகுதியில் செல்போன் டவரில் பொருள்கள் திருடியது உள்ளிட்ட 2 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சசிக்குமார் தனியார் செல்போன் டவர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தததும் தெரிய வந்துள்ளது. 4 பேர் மட்டும் திருட்டில் ஈடுபட்டார்களா அல்லது வேறு யாரூக்கும் தொடர்பு இருக்கிறாத என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை விளாத்திகுளம் டி.எஸ்.பி. பிரகாஷ் பாராட்டியுள்ளார்.
செயல்படமால் இருக்கும் செல்போன் டவர்களை குறித்து இந்த கும்பல் திருடுவதற்கு திட்டமிட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்ததாகவும், இன்னும் சில தினங்கள் கண்டுகொள்ளமால் இருந்தால் டவர் முழுவதையும் முற்றிலுமாக கொண்டு சென்று இருப்பார்கள் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.