• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தண்ணீர்ப் பஞ்சத்தைத் தீர்க்கும் கல்வாழை - மழைநீர் சேமிப்பில் அசத்தும் மதுரை இளைஞர்..!

தண்ணீர்ப் பஞ்சத்தைத் தீர்க்கும் கல்வாழை - மழைநீர் சேமிப்பில் அசத்தும் மதுரை இளைஞர்..!

’ரெயின்மேன்’ சக்திவேல்

’ரெயின்மேன்’ சக்திவேல்

போலி பிரசாரங்களுக்கு மக்கள் ஏமாறாமல் முறையாக காலத்துக்கும் நிற்கும் வகையில் நீர் மேலாண்மை திட்டங்களை உங்களது வீடுகளில் செயல்படுத்துங்கள்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தண்ணீருக்குப் பஞ்சம் ஏற்பட்டு காசு கொடுத்து லாரி தண்ணீர் புக்கிங் செய்யும் போதுதான் மழையின் அருமையும் நீர் மேலாண்மை பற்றியும் நாம் யோசிக்கிறோம். கோடை வந்தால் மட்டுமே தண்ணீரைப் பற்றியும் அதன் சேமிப்பு முக்கியத்துவம் குறித்தும் பலர் பிரசாரம் செய்கிறோம்.

ஆனால், நம்மில் எத்தனை பேர் தண்ணீர் சிக்கனத்தை நம் ஒவ்வொருவரின் வீட்டிலும் பின்பற்றுகிறோம்? இந்தக் கேள்விக்கான விடையாகவே தனது தேடலைத் தொடங்கி இன்று ‘ரெயின்மேன்’ ஆக தமிழகம் முழுவது மழைநீர் சேமிப்பு, நீர் மறுசுழற்சி, நீர் மேலாண்மை ஆகியவற்றைக் குறித்த விழிப்புணர்வு அளித்து வருகிறார் சக்திவேல்.

’ரெயின்மேன்’ சக்திவேல்


மதுரையைச் சேர்ந்த ‘ரெயின்மேன்’ சக்திவேல் தென் தமிழகத்தின் முதல் மழை இல்லத்தைத் தொடங்கியவர் ஆவார். மழைநீர் சேமிப்பு மட்டுமல்லாது நீர் மேலாண்மை குறித்து வெறும் பிரசாரங்களுடன் நின்றுவிடாமல் செயல்முறைப்படுத்தியும் வருகிறார் சக்தி. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ’மாதிரி மழை இல்லம்’ ஒன்றை மதுரையில் அமைத்தார். மழைநீரை எவ்வாறெல்லாம் சேமிக்கலாம் என்பதற்கான ஒரு பசுமை இல்லத்தையும் அங்கு வடிவமைத்தார்.

மழைநீர் சேமிப்புக் குழாய்கள்


இந்த மழை இல்லத்தில், மழைநீர் தேங்கும் இடங்களிலெல்லாம் சேமிக்கும் விதமாக பில்டர்கள் கொண்ட தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து வெளியேறும் கழிவுநீரை ஒரு தொட்டியில் சேமித்து அதில் கல்வாழை போன்ற செடிகளை நடுகிறார்கள். இதன்மூலம் கழிவுநீரிலுள்ள நச்சுத்தன்மை நீங்கி சுத்திகரிக்கப்படுகிறது. இதை வீட்டுத்தோட்டங்களுக்குப் பயன்படுத்தலாம். நம் வீட்டுக்குத் தேவையான காய்கறி, கீரைகளை இயற்கை முறையில் நமக்கு நாமே உற்பத்தி செய்யும் வகையில் மாடித் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதுதான் ‘பசுமை இல்லம்’ அமைக்கும் முறை.

விவசாய நிலத்தில் மழைநீர் சேமிப்பு


கல்லூரிக் காலத்தில் நீர் மேலாண்மை மீது ஏற்பட்ட ஆர்வத்தால் தொடர்ந்து அதில் பல பயிற்சிகள் பெற்று இன்று தமிழகம் முழுவதும் பல வீடுகளை பசுமை இல்லங்களாக மாற்றியுள்ளார் சக்திவேல். தனது பயணம் குறித்து நம்மிடம் பேசிய ‘ரெய்ன்மேன்’ சக்திவேல், “வைகை நதியைப் பாதுகாக்க வேண்டும் என்ற முயற்சியில்தான் முதலில் எனது பயணத்தைத் தொடங்கினேன். ஆனால், ஊருக்கு உதாரணமாக முதலில் நாம் மாற வேண்டுமென மழைநீர் சேமிப்பு, நீர் மறுசுழற்சி போன்ற அனைத்துத் திட்டங்களையும் எனது வீட்டில் செயல்படுத்தினேன்.

முதலில் இதிலெல்லாம் நேரத்தை வீணடிக்காதே என வீட்டில் எதிர்ப்பு எழுந்தது. ஆனால், தொடர்ந்து எனது வீட்டில் ஆரம்பித்த விழிப்புணர்வை எனது தெருவில் செயல்படுத்தினேன். ’கம்யூனிட்டி பேக்கேஜ்’ என்னும் திட்டம் மூலம் ஒரு தெருவுக்கே சேர்த்து நீர் மேலாண்மை முறைகள் செயல்படுத்தினேன். இன்று தமிழகம் முழுவதும் பல வீடுகளுக்கு இந்த சேவையை செயல்படுத்தி வருகிறோம்.

மியாவாக்கி முறையில் வளர்க்கப்பட காடு.


பள்ளி, கல்லூரி, பெரும் அடிக்குமாடி குடியிருப்புகள், பொது இடங்கள், பூங்காக்கள் மாதிரியான இடங்களில் ‘மியாவாக்கி’ காடுகள் அமைக்கும் திட்டம் மூலம் மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செயல்பட்டு வருகிறோம். மக்கள் மத்தியிலும் இத்திட்டங்களுக்குப் பெரும் ஆதரவு கிடைக்கிறது. வெறும் 250 ரூபாயில் மழைநீர் தொட்டி அமைத்துவிடலாம் என்ற போலி பிரசாரங்களுக்கு மக்கள் ஏமாறாமல் முறையாக காலத்துக்கும் நிற்கும் வகையில் நீர் மேலாண்மை திட்டங்களை உங்களது வீடுகளில் செயல்படுத்துங்கள்.

ஒருமுறை செயல்படுத்தினால் போதாது ஆண்டுதோறும் இத்திட்டங்களுக்குத் தேவையான பராமரிப்பு முறைகளையும் பின்பற்றினால் தண்ணீர்ப் பஞ்சமே இல்லாத தன்னிறைவான மாநிலமாக நாம் உருவாகலாம்” என நம்பிக்கையுடன் முடித்தார் சக்திவேல்.

-ராகினி ஆத்ம வெண்டி

மேலும் பார்க்க: கடும் வறட்சியைச் சமாளிக்க செறிவூட்டும் கிணறுகள்! களத்தில் இறங்கிய கிராமத்துப் பெண்கள்


பாரம்பரிய முறைகளால் தண்ணீர் பஞ்சத்தைத் துரத்திய வடகிழக்கிந்திய மக்கள்..!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rahini M
First published: