முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Sadhguru: வெற்றியின் ரகசியம் இதுதான் - சத்குரு விளக்கம்!

Sadhguru: வெற்றியின் ரகசியம் இதுதான் - சத்குரு விளக்கம்!

சத்குரு

சத்குரு

Sadhguru | வாழ்க்கையில் தோற்பவர்களும் நன்குபடித்த, புத்திசாலியான, திறமையான மனிதர்கள்தான். ஆனால் அவர்கள் வாழ்க்கையின் சில தருணங்களில் சில விஷயங்களை சரியாக கிரகித்துக்கொள்ளத் தவறிவிட்டார்கள் |

  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

உண்மையாகவே வெற்றிகரமாக இருப்பதற்கு என்ன தேவைப்படுகிறது என்பதையும், நம் மனதில் எதை வெற்றி என்று நாம் நினைக்கிறோமோ அது உண்மையில் குறுகிய எல்லைக்குட்பட்டதாக இருக்கக்கூடும் என்பதையும் சத்குரு விளக்குகிறார்.

 சத்குரு:

உலகத்தைப் பொருத்தவரை, வெற்றி என்றால் நீங்கள் இன்னொருவரை விட சற்றே வேகமாக ஓடுகிறீர்கள் என்று அர்த்தம். எனக்கு அதுவல்ல வெற்றி. "என்னை நான் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள முடிகிறதா? நான் யாராக இருக்கிறேனோ அதன் ஆற்றலை என்னால் அதன் முழு சாத்தியத்திற்கு அறிந்துணர முடிகிறதா?" - இதுதான் எனக்கு வெற்றி. அது நிகழ வேண்டும் என்றால், உங்களுக்கு தெளிந்த கிரகிப்பும் துடிப்பான புத்திசாலித்தனமும் தேவை.

"என் புத்திசாலித்தனத்தை நான் எப்படி வளர்த்துக்கொள்வது?" அதைப் பற்றி கவலைப்படாதீர்கள். மக்கள் தங்கள் மனதை விரிவாக்கப் பார்க்கிறார்கள். அது உங்களுக்கு சமுதாய அளவில் மட்டும்தான் வெற்றியைத் தரும், உண்மையான வெற்றியைத் தராது. இப்போது மிக முக்கியமானது உங்கள் கிரகிப்பை மேம்படுத்துவதுதான்.

வாழ்க்கையை உங்களால் அது எப்படி இருக்கிறதோ, அப்படியே பார்க்க முடிந்தால், பார்வையில் சிதைக்காமல் இருந்தால், அதை சரியாக நடத்துவதற்குத் தேவையான புத்திசாலித்தனம் உங்களிடம் இருக்கும். அப்போது உங்களால் வாழ்க்கையினூடே ஆனந்தமாக விளையாடிச்செல்ல முடியும். நிச்சயம் நன்றாகவும் விளையாடமுடியும். உங்களால் நன்றாக விளையாட முடிந்தால், நீங்கள் வெற்றிகரமானவர் என்று மக்கள் சொல்வார்கள்.

நீங்கள் என்ன பார்க்கிறீர்கள்?

ஒருமுறை துப்பறிவாளர் ஷெர்லாக் ஹோம்ஸ், தனது நண்பர் வாட்சனுடன் மலையேறிச் சென்று, அங்கு கூடாரம் போட்டு முகாமிட்டனர். இருட்டியபின் அவர்கள் தூங்கினார்கள். நள்ளிரவில் ஷெர்லாக் ஹோம்ஸ் வாட்சனை முழங்கையில் இடித்து எழுப்பினார், வாட்சன் கண்திறந்தார். ஷெர்லாக் ஹோம்ஸ் அவரிடம், "நீங்கள் என்ன பார்க்கிறீர்கள்?" என்று கேட்டார்.

வாட்சன் மேலே பார்த்து, "நான் தெளிந்த வானத்தையும் நிறைய நட்சத்திரங்களையும் பார்க்கிறேன்" என்றார்.

அதற்கு ஷெர்லாக் ஹோம்ஸ், "இது உங்களுக்கு உணர்த்துவது என்ன?" என்று கேட்டார்.

அதற்கு வாட்சன், "நாளை மழையில்லாத இன்னுமொரு அழகிய நாளாக இருக்கப்போகிறது. இது உங்களுக்கு உணர்த்துவது என்ன?" என்று கேட்டார்.

அதற்கு ஷெர்லாக் ஹோம்ஸ், "நமது கூடாரத்தை யாரோ திருடிவிட்டார்கள் என்று உணர்த்துகிறது" என்றார்.

Also Read :உடலுறவு என்பது பாவமா... புனிதமா..? விளக்கும் சத்குரு

வாழ்க்கையை உள்ளபடி பார்த்தால் மட்டுமே வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நீங்கள் வெற்றிகரமாக நடையிட முடியும். இல்லாவிட்டால் அது தடுமாற்றமான செயல்முறையாக இருக்கும். வெற்றி என்றால் நீங்கள் மற்றவர்களைவிட வேகமாக நடக்கிறீர்கள் என்று அர்த்தமல்ல. நீங்கள் பிறரை விட வேகமாக நடந்தாலும் உங்கள் கிரகிப்பு சரியாக இல்லை என்றால், நீங்கள் மற்றவர்களைவிட அதிக பதற்றத்திலும் படபடப்பிலும் இருப்பீர்கள், ஏனென்றால் நீங்கள் ஒவ்வொரு படியிலும் தடுமாறுவீர்கள்.

நீங்கள் வாழ்க்கையில் வெற்றிகரமாக எதைச் செய்ய விரும்பினாலும், உங்கள் கல்வித்தகுதி முக்கியமில்லை. வெற்றி என்பது உங்களைச் சுற்றியுள்ள நிஜங்கள் பற்றிய உங்கள் தெளிவான கிரகிப்பை சார்ந்ததாக இருக்கிறது. இன்று மிகவும் தெளிவாக நீங்கள் பார்த்தால், நீங்கள் பணம் சம்பாதிக்க லாட்டரி சீட்டு விற்பனை செய்யலாம்.

நாளை நீங்கள் தெளிவாகப் பார்த்தால், தள்ளுபடியில் ஏதோவொன்றை வாங்கி விற்கலாம். ஐம்பது வருடங்களுக்குப் பிறகு நீங்கள் மிகத் தெளிவாகப் பார்த்தால், முற்றிலும் மாறுபட்ட ஏதோவொன்றை நீங்கள் செய்யலாம்.

தவறான நேரத்தில் தவறான விஷயம்

தோற்பவர்களும் நன்குபடித்த, புத்திசாலியான, திறமையான மனிதர்கள்தான். ஆனால் அவர்கள் வாழ்க்கையின் சில தருணங்களில் சில விஷயங்களை சரியாக கிரகித்துக்கொள்ளத் தவறிவிட்டார்கள். நீங்கள் தவறான நேரத்தில் தவறான தொழிலில் ஈடுபட்டிருக்கலாம். தவறான விஷயத்தை தவறான நபரைச் செய்யச்சொல்லி ஒப்படைத்திருக்கலாம். தோல்வி என்பது இவ்வளவுதான், வெற்றியும் இவ்வளவுதான்.

Also Read : கடவுளுக்கு யார் பெயர் சூட்டினார்கள்? சத்குரு பதில்

வெற்றியாளர்களாக வளர்ந்திருப்பவர்கள் ஏதோவொன்றில் அசாத்தியமான திறமைகள் படைத்தவர்களாக இல்லாதிருக்கலாம், ஆனால் அவர்கள் தங்கள் கிரகிப்பை தெளிவாக வைத்துக் கொண்டார்கள். நீங்கள் பேசுவதை அவர்கள் தெளிவாக கிரகிக்கிறார்கள், அதிலேயே அவர்கள் துள்ளியமாக அதில் எது உண்மை எது உண்மையில்லை என்று எடைபோட்டுவிடுகிறார்கள்.

அதனால் வெற்றியை நாடாதீர்கள், திறமையை மட்டும் தேடுங்கள் - உங்களை ஒரு உயர்ந்த நிலைக்கு மேம்படுத்துவது எப்படி என்று பாருங்கள். நீங்கள் மிகவும் திறமைகரமாக இருந்தால், உங்களை எவ்விடத்தில் அமர்த்தினாலும் நீங்கள் எப்போதுமே வெற்றி காண்பீர்கள். உங்கள் திறமைகள் அபாரமாக இருந்தால், உங்கள் திறமையில் ஒருவிதமாக நீங்கள் வளர்ந்தால், வெற்றி என்பது உங்கள் வாழ்க்கையில் ஒரு இலக்காக இருக்காது, நீங்கள் எங்கு சென்றாலும் உங்களைப் பின்தொடர்ந்து வருவதாக இருக்கும்.

ஒரு மனிதர் அற்புதமான ஆற்றல்நிலைக்கும் மகத்தான திறமைநிலைக்கும் வளர்ந்தால், உலகம் முழுவதும் அவரைத் தேடிவரும்.

First published:

Tags: Sadhguru, Success