நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை அருணகிரிநாதர் கோயிலில் அவரது சகோதரர் சத்தியநாராயணா சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டார். ரஜினியின் பிறந்த நாள் மற்றும் அவர் தொடங்க உள்ள கட்சி தேர்தலில் வெற்றிபெற யாகம் நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினி ரசிகர் மன்றத்தில் சிறப்பாக பணியாற்றிவர்களுக்கு கட்சியில் உயர் பதவிகள் வழங்கப்படும் என உறுதி அளித்தார். கட்சி பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், கட்சியைப் பதிவு செய்வதற்கு, தேர்தல் ஆணையம் இன்னும் அனுமதி தரவில்லை. அனுமதி கிடைத்ததும், கட்சி பதிவு செய்யப்படும். பல்வேறு கட்சியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் கட்சியில் இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசியவர், திமுக., அதிமுக ஆட்சிகளை மாற்றிவிட்டு, மக்கள் நல்லாட்சியைக் கொண்டுவர வேண்டும். என்றும், திராவிட இயக்கங்களுக்கு இது கடைசி காலம் என்றார். மேலும், லஞ்சம் ஒழிய வேண்டும். தமிழகத்தில் கல்வியை வளர்க்க வேண்டும் என்று கூறினார். மேலும், ரஜினி குறித்து விமர்சனங்கள் செய்யும் அரசியல் கட்சியினருக்கு ஜனவரி மாதம் ரஜினிகாந்த் தக்க பதிலடி கொடுப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.