Home /News /tamil-nadu /

பல கோடி ரூபாய் மதிப்பிலான வேணுகோபால் சுவாமி கோவில் சிலைகள் அமெரிக்கா சென்றது எப்படி?

பல கோடி ரூபாய் மதிப்பிலான வேணுகோபால் சுவாமி கோவில் சிலைகள் அமெரிக்கா சென்றது எப்படி?

மீட்கப்பட்ட சிலைகள்

மீட்கப்பட்ட சிலைகள்

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டதில் கடந்த 15-06-1959 அன்று "பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் ஆஃப் பாண்டிச்சேரி", காணாமல் போன கோயில் சிலைகளை புகைப்படம் எடுத்து இருப்பதாக தகவல் கிடைத்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் வேணுகோபால் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் விலை மதிப்பு மிக்க மூன்று உலோக சிலைகள் 50 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனது. இந்த கோவில் 1975 ஆம் ஆண்டு இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வந்தது.

பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் நாகராஜன் என்பவர் வேணுகோபால் சுவாமி கோவிலில் இருந்த மூன்று உலோக சிலைகள் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பாக திருடப்பட்டுள்ளதாகவும், அவற்றிற்கு பதிலாக போலியாக உருவாக்கப்பட்ட சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் உண்மையான சிலைகளை மீட்டு சிலைகளை கடத்தியவர்கள் யார்? என கண்டறிய வேண்டும் என புகார் அளித்திருந்தார்.

வழக்கு பதிவு செய்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால், விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. காரணம், காணாமல் போன உலோக சிலைகளான விஷ்ணு, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சிலைகளின் புகைப்படங்கள் கோவில் நிர்வாகத்திடமோ அல்லது கோவில் பதிவேடுகள் மற்றும் ஆவணங்களிலோ இல்லை என்பதால் இந்த வழக்கின் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது.

இந்த நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி இந்த வழக்கு விசாரணையை துரிதப்படுத்த உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டதில் கடந்த 15-06-1959 அன்று "பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் ஆஃப் பாண்டிச்சேரி", காணாமல் போன கோயில் சிலைகளை புகைப்படம் எடுத்து இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் "பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் ஆஃப் பாண்டிச்சேரி"க்கு நேரில் சென்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அங்கு வைக்கப்பட்டிருந்த சிலைகளின் புகைப்படங்களில் வேணுகோபால் சுவாமி கோவிலில் இருந்து காணாமல் போன மூன்று சிலைகளின் புகைப்படங்கள் இருப்பதை கண்டறிந்தனர்.

இந்த புகைப்படங்களை மையமாக வைத்து உலகத்தின் பல்வேறு நாடுகளில் உள்ள அருங்காட்சியங்களில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் அமெரிக்க நாட்டின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் உள்ள - "லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஆர்ட் அருங்காட்சியகத்தில்" 50 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மூன்று சிலைகளும் இருப்பது தெரிய வந்தது.

பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் "லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஆர்ட் அருங்காட்சியத்தில்" இருக்கும் சிலைகள் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள வேணுகோபால் கோவிலில் இருந்து காணாமல் போன விஷ்ணு ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சிலைகள் என்பதை உறுதி செய்துள்ளனர்.

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த உலோக சிலைகளின் இன்றைய மதிப்பு பலநூறு கோடியை தாண்டும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஆர்ட் அருங்காட்சியகத்தில் இருந்து 3 சிலைகளையும் மீட்டு வர துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 50 ஆண்டுகளுக்கு முன் இந்த 3 சிலைகளையும் கடத்தி சென்றது யார்? போலி சிலைகளை உருவாக்கியது யார்? என்பது குறித்து சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published by:Raj Kumar
First published:

Tags: HRNC, Stolen idols recovered, Thiruvarur

அடுத்த செய்தி