திருவாரூர் மாவட்டத்தில் புரவி புயல் தாக்கத்தின் காரணமாக நான்கு தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் செல்லக்கூடிய அனைத்து பிரதான ஆறுகளிலும் முழு கொள்ளளவில் வெள்ள நீர் சென்று கொண்டிருக்கிறது.
மழை வெள்ள நீரில் ஆறுகளில் காட்டாமணி செடிகள் மரக்கட்டைகள் மூங்கில் கம்புகள் போன்றவை அடித்து வரப்பட்டு ஆங்காங்கே தடுப்பு மற்றும் இயக்கு அணைகளில் சிக்கிக் கொண்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் எண்கண் பகுதியில் அமைந்துள்ள தடுப்பு மற்றும் இயக்கு அணையில் ஏராளமான காட்டாமணி செடிகளும் மரக்கட்டைகளும் இயக்கு அணையின் மதகுகளில் சிக்கிக்கொண்டு வெள்ள நீர் வெளியேற முடியாமல் இருந்தது.
Also read: தேவேந்திர குல வேளாளர் குறித்த முதலமைச்சரின் அறிவிப்பைக் கண்டித்து அவரது உருவ பொம்மை எரிப்பு.. அதிமுக சாலை மறியல்
இதனால் இயக்கு அணைக்கு ஆபத்து ஏற்படவோ வெள்ள நீர் ஊருக்குள் புகுந்துவிடும் அபாயமோ நிலவிய காரணத்தால் அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் தீயணைப்பு துறையினருக்குத் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் அனுசுயா தலைமையில் திருவாரூர் மற்றும் குடவாசல் பகுதிகளைச் சேர்ந்த தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து ஆற்றில் இறங்கி இயக்கு அணை மதகுகளில் சிக்கிக் கொண்டிருந்த காட்டாமணி செடிகளையும் மரக்கட்டைகளையும் அகற்றினர். தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டதால் வெள்ள அபாயம் நீங்கியது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்