திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது. சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தாண்டு கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிகர விழாவான இன்று அதிகாலை 3.00 மணியளவில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் பரணி தீபம் ஏற்றப்பட்டது. ஏகன் அனேகனாகி மீண்டும் ஏகனாக மாறும் தத்துவத்தை விளக்குவது பரணி தீபமாகும்
தொடர்ந்து மாலை 5 மணியளவில் அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன் பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, ஆலய கொடிமரத்தின் முன்பு எழுந்தருளினார். பின்னர் பஞ்சமூர்த்திகளும் தீப மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சில நொடிகள் காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர், கோயில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். அப்போது, கொடிமரத்தின் அருகில் உள்ள அகண்டத்தில் தீபம் ஏற்றப்பட்டது.
பின்னர் அனேகன் ஜோதி வடிவமாக மாறும் தத்துவத்தை விளக்கும் வகையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. 2 ஆயிரத்து 668 அடி உயரம் கொண்ட மலை மீது 5 அடி உயரம் கொண்ட கொப்பறையில், பக்தர்கள் காணிக்கையாக அளித்த 3 ஆயிரத்து 500 கிலோ நெய் நிரப்பப்பட்டு, ஆயிரம் மீட்டர் காடா துணியை திரியாக அமைத்து, பார்வதராஜ குலத்தினர் சார்பில் மகா தீபம் ஏற்றப்பட்டது. சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு வந்து, அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர்.
இன்று ஏற்றப்பட்ட தீபம், தொடர்ந்து 11 நாட்கள் எறிந்து கொண்டே இருக்கும். மகா தீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து, 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் பக்தர்கள் வலம் வந்தனர். மகா தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்காங்கே சிசிடிவி கேமிரா, பேஸ் டேக்கர் கருவி பொருத்தி கண்காணிக்கப்படுகிறது. தீப திருவிழாவிற்காக 2 ஆயிரத்து 600 சிறப்பு பேருந்துகளும், 22 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.