அண்ணாமலையார் மலையில் தடையை மீறி டிரெக்கிங் செய்தவர் மூச்சுத்திணறி உயிரிழப்பு

அண்ணாமலையார் மலை

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில், உரிய அனுமதியின்றி டிரெக்கிங் பயிற்சியில் ஈடுபட்ட 15 பேர்களில், வங்கி அதிகாரி ஒருவர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக தனியார் மலையேற்ற பயிற்சி நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்

 • Share this:
  பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கி வருகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில். இங்குள்ள அண்ணாமலையார் மலை 2668 அடி உயரம் கொண்டது. அடர்ந்த பகுதியாக அறியப்படும் இந்த மலையில், பல்வேறு ஆசிரமங்கள் மற்றும் குகைகள் இருந்து வருகின்றன. பல்வேறு நாடுகளில் இருந்து ஆன்மிக நம்பிக்கையுடன் வரும் பக்தர்கள், அண்ணாமலையார் மலை மீது ஏறி தியானம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். எனினும் மலையில் ஏறுபவர்கள் வழி தெரியாமல் சிக்கிக் கொள்வதால், மாவட்ட நிர்வாகம் அண்ணாமலையார் மலை மீது ஏறுவதற்கு தடை விதித்துள்ளது.

  இந்தநிலையில், தனியார் மலையேற்ற பயிற்சி மற்றும் ஸ்கேட்டிங் அகாடமி வைத்துள்ள விஜய் ஆனந்த் என்பவரது தலைமையில், சனிக்கிழமை காலை அன்று, உரிய அனுமதியின்றி 15 பேர் கொண்ட குழுவினர் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த குழுவில், பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் தலைமை காசாளராக பணிபுரிந்த 42 வயதான ஆனந்தராஜ், அவரது 12 வயது மகன் கார்த்திக் மற்றும் புனித், குமரன், தமிழ்பிரியன், பிரவீன், சவுரியா உள்ளிட்ட 15 பேர் இடம்பெற்றிருந்தனர்.

  அப்போது ஆயிரம் அடி தூரம் மலையேறிய நிலையில், ஆனந்தராஜ் தவறி விழுந்து அவரது தலையின் பின்பக்கத்தில் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. எனினும் அதனை பொருட்படுத்தாமல் மீண்டும் இரண்டாயிரம் அடி உயரத்தில், மலை உச்சிக்கு அருகே சென்றபோது, அதிக மூச்சுத்திணறல் ஏற்பட்டதில், ஆனந்தராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்த அப்பகுதி இளைஞர்கள் மற்றும் வனத்துறையினர், நான்கு மணி நேரப் போராட்டத்துக்கு பின்பு, ஆனந்தராஜின் உடலை மீட்டு கீழே கொண்டுவந்தனர்.

  அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனந்தராஜின் மகன் கார்த்திக் உள்ளிட்ட அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், உரிய அனுமதியின்றி மலையேற்றப் பயிற்சிக்கு அழைத்துச் சென்ற தனியார் அகாடமி பயிற்சியாளர் விஜய் ஆனந்தை திருவண்ணாமலை நகர காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.

  மேலும் படிக்க...நில அளவீட்டுப் பணியை 30 நாட்களில் முடிக்கவில்லை எனில் கட்டணத்தை திருப்பி வழங்க வேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு  அண்ணாமலையார் மலைக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்படாமல், இதுபோன்ற மலையேற்றப் பயிற்சிகள் குறையாது என்று கூறுகின்றனர் திருவண்ணாமலை நகர மக்கள்.
  Published by:Vaijayanthi S
  First published: