மங்காத்தா கொள்ளை.... வசமாக சிக்கிய போலீஸ்

Youtube Video

 • Share this:
  திருவள்ளூர் மாவட்டத்தில், 300 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் என்ற வகையில் சிக்கிய காவலர்களும், கொள்ளையர்களும் நண்பர்களாகி பேஸ்புக்கில் திட்டமிட்டு கொள்ளையடித்ததாக வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது.

  திருவள்ளூரில் நகரைச் சேர்ந்தவர் மகேந்திரன்; இவர் நகைக் கடை நடத்தி வருகிறார். ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், பேரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறு கடைகளுக்கு நகைகளை மொத்த விலையில் விற்பனை செய்து வந்தார். டிசம்பர் 11ம் தேதி மகேந்திரன் மகன் ஆசிஸ், கடை ஊழியர் ராஜ்குமாருடன் ஆட்டோவில் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சரவணா தங்க மாளிகை கடைக்கு நகைகளை எடுத்துச் சென்று விற்றார்

  பின்னர் ஸ்ரீபெரும்புதூருக்கு சென்றபோது மாம்பாக்கம் அருகே, இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள், ஆட்டோவை வழிமறித்துள்ளனர். கத்தியைக் காட்டி மிரட்டி மகேந்திரனின் மகன் வைத்திருந்த 300 சவரன் நகைகளைப் பறித்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். புகாரளித்த மகேந்திரன் உடனடியாக திருடு போன நகைகளின் படங்களை நகைக் கடை உரிமையாளர்களின் வாட்ஸ் ஆப் குழுவில் பகிர்ந்து தகவல் அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். போலீசார் விசாரணையில், 89 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது எவ்வித துப்பும் கிடைக்கவில்லை.

  இந்த நிலையில் 24 வயதான ரஞ்சித் ராஜ் என்பவர் தஞ்சையில் ஒரு நகைக் கடையில் சில நகைகளை விற்கப் போனார் நகைகளைப் பார்த்து உஷாரான உரிமையாளர், உடனடியாக மகேந்திரனைத் தொடர்பு கொண்டு அவரது நகைகள் தான் என்பதை உறுதி செய்து கொண்டார். பின்னர் இந்த நகைகளுக்கான பணம் தற்போது தன்னிடம் இல்லை எனவும் நாளை வரும்படியும் கூறியுள்ளார்; தொடர்ந்து போலீசாருக்கும் தகவல் அளித்தார். அதை நம்பிய ரஞ்சித் ராஜ் மறுநாள் கடைக்கு சென்றபோது போலீசாரிடம் சிக்கிக் கொண்டார்.

  ரஞ்சித்தின் தகவலின் பேரில் சென்னை அடுத்த வண்டலூரைச் சேர்ந்த 20 வயதான ராகுல், அவரது அண்ணன் சுமிர்ராஜ் ஆகியோரைப் போலீசார் கைது செய்தனர். ராகுல் அளித்த தகவலின் அடிப்படையில், காவலர்களான தமிழரசன், கதிரவன் இருவரையும் போலீசார் பிடித்தனர். காவலர்கள் வாக்குமூலத்தின் அடிப்படையில், சந்தோஷ் மற்றும் சரவணன் ஆகியோர் சிக்கினர். இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளைத் திட்டம் உருவானது, அரங்கேறியது என அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்தன.

  காவலர் தமிழரசன், திருக்கழுக்குன்ற காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளருக்கு ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். காவலர் கதிரவன், மானாமதி காவல்நிலையத்தில் இரண்டாம் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்தார். காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைச் சத்திரத்தைச் சேர்ந்த 23 வயதான சந்தோஷ், நகைகளைப் பறிகொடுத்த மகேந்திரன் கடையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு வேலை செய்திருந்தார். பின்னர் அங்கிருந்து வெளியேறி சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்பாலால் என்பவரின் நகைக்கடையில் பணிபுரிந்து வந்தார்.

  சந்தோஷும் காவலர் தமிழரசனும் பள்ளிப் பருவத்தில் இருந்தே நண்பர்களாக இருந்து வருகின்றனர். காவலர்கள் தமிழரசனும், கதிரவனும் நடிகர் அஜீத்குமாரின் ரசிகர்கள். கைதிகளை நீதிமன்றத்திற்கும் சிறைக்கும் அழைத்துச் செல்லும் பணியில் இருவரும் இருந்தபோது அவர்களுக்கு கொள்ளையன் ராகுல் அறிமுகமானார். போக்குவரத்தின் போது காவலர்கள் நடிகர் அஜீத்குமாரின் அருமை பெருமைகளை பேசி சிலாகித்துக் கொண்டிருந்த போது நானும் தல ரசிகன் தான் பாஸ் என, ராகுலும் அவர்களுடன் இணைந்து கொண்டார்.

  தலயின் பெருமைகளைப் பேசுவதில் விருப்பம் கொண்டதால் மூவரும் நண்பர்கள் ஆனார்கள். ராகுல் ஜாமினில் வெளியே வந்த பின்னர், அவருடனான காவலர்களின் தொடர்பு தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் காவலர் வேலையில் கிடைத்த சம்பளம் போதாது எனக் கருதிய தமிழரசனும், கதிரவனும் குறுகிய காலத்தில் பணக்காரர்களாக திட்டமிட்டனர். அவர்களது ஆசையைத் தெரிந்து கொண்ட சந்தோஷ், மகேந்திரன் கடையில் இருந்து பல சவரன் நகைகள் பாதுகாப்பின்றி ஆட்டோவில் செல்வதாகக் கூறியுள்ளார்.

  இதையடுத்து மூவரும் மகேந்திரன் கடை நகைகளைக் கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டினர். அப்போதுதான் காவலர் கதிரவனுக்கு கொள்ளையன் ராகுல் நினைவு வந்தது. ராகுலின் தொடர்பெண் இல்லாததால் பேஸ்புக் மூலம் அவரைத் தேடி தொடர்பு கொண்டனர் காவலர்கள். தி்ட்டத்திற்கு ஒப்புக் கொண்ட ராகுல், செங்குன்றத்தைச் சேர்ந்த ரஞ்சித்ராஜை தனது கொள்ளைக் கூட்டணியில் சேர்த்தார். டிசம்பர் 11ம் தேதி அன்று மகேந்திரனின் மகன் ஆசிஸ் புறப்பட்ட நேரத்தை சந்தோஷ் தெரிவிக்க, கொள்ளையர்கள் ரஞ்சித்தும் ராகுலும், ஆட்டோவை வழிமறித்து 300 சவரன் நகைகளைக் கொள்ளையடித்தனர்.

  கொள்ளையடித்த நகைகளில் ஒரு பகுதியை பங்கு போட்டுக் கொண்டனர்; மீதமுள்ள பகுதியை உருக்கி தங்கக் கட்டியாக மாற்றுவதற்கு ரஞ்சித் ராஜ் திட்டமிட்டார். சென்னையில் மாற்றினால் தெரிந்து விடும் என்பதால் தஞ்சைக்கு சென்று விற்க முயன்றபோதுதான் போலீசாரிடம் சிக்கியுள்ளார். இவர்களிடம் இருந்து 100 சவரன் நகைகளைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ராகுல் மீது வழிப்பறி, கொள்ளை வழக்குகள் இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

  இந்த வழக்கில் காவலர்கள் தமிழரசன், கதிரவன், முதல் குற்றவாளியான சந்தோஷ், ரஞ்சித் ராஜ், ராகுல், சுமிர்ராஜ், சரவணன் என இதுவரை 7 பேர் கைதாகியுள்ளனர். மேலும் வியாசர்பாடியைச் சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதி தேர்வாகியுள்ள மாரி உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் சிக்கினால்தான் மீதியுள்ள நகைகளின் கதி என்ன என்பது தெரியவரும் என்கின்றனர் போலீசார். நகைகள் கொள்ளையில் போலீசாரே ஈடுபட்டதை அடுத்து, தமிழக டிஜிபி காவலர்களுக்கு ஒரு அறிக்கையை விடுத்துள்ளார்

  அதில், குற்றச் செயலில் ஈடுபடும் குற்றவாளிகள் தப்பி விடலாம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக காவலர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதால் எவ்வித பலனும் அடையப் போவதில்லை என்றும் எச்சரித்துள்ளார். குற்றச் செயல்களில் ஈடுபடும் காவலர்கள், தங்களது மற்றும் தங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தையே இழப்பதோடு மட்டுமின்றி வாழ்நாள் முழுவதும் களங்கத்தைச் சுமக்க வேண்டி வரும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
  Published by:Vijay R
  First published: