ஜெயலலிதா மறைவுக்குப் பின் முதல்வரான எடப்பாடி பழனிசாமி மக்களிடம் செல்வாக்கு இல்லாத நிலையில் முதல்வராக எத்தனை நாட்கள் நீடிக்க முடியும் என கேள்விகள் எழுப்பப்பட்டன. அதேநேரத்தில் போயஸ் கார்டன் கெடுபிடிகள் இல்லாததால் பிரிந்து சென்ற பலர் மீண்டும் கட்சிக்கு திரும்பத் தொடங்கினர். இதனிடேயே ஓபிஎஸ்ஸும், ஈபிஎஸ்ஸும் 195 நாட்களுக்குப் பின்னர் 21-8-2017-ல் கைகோர்த்தனர். அதைத் தொடர்ந்து துணை முதல்வரானார் ஓபிஎஸ். ஆனால் சசிகலாவின் தீவிர ஆதரவாளர்களாக இருந்த பழனியப்பன், செந்தில்பாலாஜி, வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 19 எம்எல்ஏ-க்கள் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்துவரும் ஆதரவை திரும்பப் பெறுவதாக கடிதம் அளித்தனர்.
அதைத் தொடர்ந்து பேரவை உறுப்பினர்கள் விதியை மீறியதாகக் கூறி அவர்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். ஜக்கையன் மட்டும் சபாநாயகர் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்ததால் பதவி தப்பியது. அதைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தை 18 எம்எல்ஏக்கள் நாடியபோது பதவிநீக்கம் செல்லும் என தீர்ப்பளித்ததுடன் இடைத்தேர்தல் நடத்துவதற்கான தடையும் நீக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து அந்த 18 தொகுதிகளுக்கும், மேலும் திருவாரூர், ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், 2019 மக்களவைத் தேர்தலுடன் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அப்போது சட்டப்பேரவையில் மொத்த பலம் 212 ஆகவும், அதிமுக-வின் பலம் 114 ஆகவும் இருந்ததால் ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி இருந்து வந்தார். ஆனால் காலியாக இருந்த 22 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தால் பேரவை முழு பலம் அதாவது 234 உறுப்பினர்களை பெறும். அந்த சூழலில் ஆட்சியைத் தக்க வைக்க 117 சீட்கள் தேவைப்படும் என்பதால் குறைந்தது 3 தொகுதிகளிலாவது இடைத்தேர்தலில் அதிமுக வென்றாக வேண்டியிருந்தது.
அதிமுகவு-க்கு வாழ்வா சாவா என்ற போராட்டம் என்றே அதை சொல்லலாம். சென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் இரட்டை இலை சின்னத்துக்கு எதிராக பெற்ற வெற்றியும் அதிமுக-வுக்கு முன்பிருந்தது போல் மக்கள் ஆதரவு இருக்குமா என சந்தேக ரேகைகளை படரவிட்டிருந்தது. டிடிவி தினகரன் வாக்குகளை பிரிக்கக்கூடும் என எதிர்க்கட்சிகள் கருதின. மறுமுனையில் திமுக-வுக்கு வேறு வடிவத்தில் சவால் காத்திருந்தது. கருணாநிதி எனும் ஆளுமை இல்லாத, தலைவராக பொறுப்பேற்ற பின் ஸ்டாலின் முழுக்க முழுக்க முன்னின்று எதிர்கொள்ளும் தேர்தல் என்பதால் அவருக்கும் நிரூபித்தாக வேண்டிய நெருக்கடி இருந்தது.
அதனால் பிரசார களத்தில் அனல் பறந்ததும். மதவாத கட்சியுடன் கூட்டு என ஸ்டாலின் பிரசாரம் செய்ய, வாரிசு அரசியல் என விமர்சித்து அதிமுக பிரசாரத்தை முன்னெடுத்தது. தமிழக வரலாற்றில் இல்லாத வகையில் 22 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் என்பதால் மினி சட்டமன்ற தேர்தலாக கருதப்பட்டது. இரண்டு ஆண்டு காலமாக ஆட்சிப் பொறுப்பில் இருந்த அதிமுக பல்வேறு நலத்திட்டங்களை செய்திருந்தாலும் 8 ஆண்டுகளாக ஆளுங்கட்சியாக இருந்ததால் எதிர்ப்புக்கும் குறைவு இல்லை.
தமிழகம் முழுவதும் ஸ்டாலினும், முதல்வர் எடப்பாடி பழனிசாயும் சுற்றி சுழன்று தேர்தல் பணியாற்றினர். தேர்தல் முடிவுகள் வந்தபோது மக்களவைத் தேர்தலிலும் சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக பல இடங்களி்ல் முன்னிலை வகித்தது. திமுக கூட்டணி 39-ல் 38 மக்களவைத் தொகுதிகளில் வென்றிருந்து. மேலும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 14 இடங்களில் அமோக வெற்றி பெற்றிருந்தது. எனினும் தார்மீக அடிப்படையில் அதிமுக வென்றிருந்தது.
ஆட்சியில் தொடர 3 பேரவை தொகுதிகள் தேவை என்ற நிலையில் 9 இடங்களை அதிமுக வாங்கி PASS ஆகியிருந்தது. கருணாஸ் உள்ளிட்ட 5 எம்எல்ஏ-க்கள் தினகரன் ஆதரவாக மாறக்கூடும் என்ற நிலையில் இது அதிமுக-வுக்கு தெம்பூட்டியது. 39 மக்களவைத் தொகுதிகளில் அமமுக டெபாசிட்டை இழந்ததால் உற்சாகம் பிறந்தது. மக்களவை தேர்தல், பேரவை இடைத்தேர்தல் இவை இரண்டிலும் திமுக அதிக இடங்களை வென்றிருந்தாலும் அந்த 9 பேரவைத் தொகுதிகளில் பெற்ற வெற்றி, அதிமுக ஆட்சியையும் எடப்பாடி பழனிசாமி - ஓபிஎஸ் கரங்களையும் வலுப்படுத்துவதாக அமைந்தது. அதனால் இந்த மினி பேரவைத் தேர்தல் வெற்றி எடப்பாடி தலைமையிலான அதிமுகவுக்கு திருப்புமுனை தருணம் என்றால் மிகையல்ல.