• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • திருப்புமுனை: பரபரப்பை ஏற்படுத்திய இலவச கலர் டிவி அறிவிப்பு.. தேர்தல் நாயகனாக மாறிய திட்டங்கள்..

திருப்புமுனை: பரபரப்பை ஏற்படுத்திய இலவச கலர் டிவி அறிவிப்பு.. தேர்தல் நாயகனாக மாறிய திட்டங்கள்..

Youtube Video

தேர்தல் அறிக்கை என்பது வெற்றிக்கான பலம் பொருந்திய ஆயுதம் என தமிழகத்துக்கு மட்டுமன்றி நாட்டுக்கே உணர்த்திய தருணம் குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம்.

 • Share this:
  காஞ்சிபுரத்துக்குப் போனால் காலாட்டிக்கொண்டே சாப்பிடலாம் என்பது அக்காலம்தொட்டே நம்மூர்களில் பயன்படுத்தப்படும் பழமொழி. அதுபோல் தமிழ்நாட்டுக்குப் போனால்போதும் எல்லாமே இலவசம் என வடமாநிலங்களில் நகைச்சுவையாக பேசிக் கொள்கின்றனர். அதற்கேற்றாற்போல் அரிசி, முதல் ஆடு, மாடு வரையும் சைக்கிள் முதல் லேப்டாப் வரையும் தமிழகத்தில் இலவசங்கள் ஏராளம் ஏராளம். இது போதாதென, இலவச கிரைண்டர், மிக்சி, ஃபேன், பெண்களுக்கு இருசக்கர வாகனம், தாலிக்குத் தங்கம், 2 ஏக்கர் நிலம் என இலவசங்களின் பட்டியல் மைல்தூரம் நீளும். இதற்கெல்லாம் தொடக்கப் புள்ளியாய் அமைந்தது 2006 சட்டப்பேரவைத் தேர்தல்.

  1996-இல் வரையிலான முதல் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகளால் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் ஜெயலலிதாவின் சிக்கினார். அது வழக்குகளாக மாறி நிழலாய் தொடர்ந்ததாலும் அவை கற்றுத் தந்த படிப்பினைகளாலும் 2001 முதல் 2006 வரையிலான ஆட்சிக்காலத்தில் அதுபோன்ற சிக்கல்கள் ஏதும் நிகழாமல் பார்த்துக் கொண்டார் ஜெயலலிதா.

  மேலும் நிர்வாகத்திறனும் முன்பை விட மேம்பட்டிருந்தது. 2004ம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி பேரழிவின்போது போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதுமட்டுமன்றி, 2001-ல் அமல்படுத்தப்பட்ட மழை நீர் சேமிப்புத் திட்டம் இன்றளவும் நினைவுகூரப்படுகிறது. மேலும் சென்னை நகரில் வெள்ள நிவாரணமும் ஏராளமானோருக்கு வழங்கப்பட்டது. இதனால் 2006 பேரவைத் தேர்தலில் சென்னையில் 14 தொகுதிகளில் ஏழினை வென்று திமுக கோட்டையாக விளங்கிய மாநகரை ஜெயலலிதா கைப்பற்றினார். ஆட்சிக்காலத்தின் நிறைவில் ஆளுங்கட்சிக்கு எதிராக வழக்கமாக காணப்படும் ஆண்ட்டி இன்கம்பன்சி எனும் எதிர்ப்பு மனநிலை பெரிதாகக் காணப்படவில்லை.

  இதை நன்கு உணர்ந்திருந்த திமுக தலைவர் கருணாநிதி, வலுவான கூட்டணி அமைத்ததுடன், மிக சக்தி வாய்ந்த தேர்தல் அறிக்கையை தயார் செய்தார். அதில், எவரும் எதிர்பார்க்காத அறிவிப்பான இலவச கலர் டிவி திட்டம் இடம்பெற்றிருந்தது. அவர் அதை அறிவித்த பிறகு தமிழகம் மட்டுமின்றி, இதர மாநிலங்களிலும் அதை பற்றியே பேச்சாக இருந்தது. அது போதாதென இரண்டு ரூபாய்க்கு கிலோ அரிசி திட்டத்தை அறிவித்தபோது புருவங்கள் உயர்ந்தன. 2006 தேர்தல் முடிவுகள் வெளியானபோது கலர் டிவி அறிவிப்பு நன்கு வேலை செய்திருந்தது . திமுக கூட்டணி 163 இடங்களில் வென்றிருந்தது. எனினும் 132 இடங்களில் போட்டியிட்ட திமுக 96 இடங்களில் மட்டுமே வெற்றி கண்டிருந்தது.

  அதே நேரத்தில் அதிமுக 61 தொகுதிகளை வென்றிருந்தது. அதிமுக-வை விட திமுக 35 இடங்களில் மட்டுமே கூடுதலாக வென்றிருந்தது. திமுக அறிவித்த இலவச திட்டங்களும், விஜயகாந்த் 70-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக-வின் வாக்கு வங்கிக்கு பாதிப்பை ஏற்படுத்தியதும் திமுக அணிக்கு சாதகமாக அமைந்தன. என்றபோதிலும், திமுக அறிவித்த இலவசங்கள்தான் திமுக வெற்றி வாய்ப்புக்கு வழிவகுத்ததாக அரசியல் விமர்சகர்கள் கூறினர்.

  மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஒரு படி மேலே போய் 2006 தேர்தலின் கதாநாயகன் தேர்தல் அறிக்கைதான் என சிலாகித்தார். 2006-இல் கருணாநிதி தொடங்கி வைத்த இலவசங்கள் மற்றும் சலுகைகளின்தொடர்ச்சியாக இலவச பேன், மிக்சி கிரைண்டர், லேப்டாப் மற்றும் இலவச அரிசி திட்டங்களை பின்னாளில் ஜெயலலிதா அறிவித்தார்.

  கேரளா போன்ற மாநிலங்களும் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போன்ற திட்டங்களை அறிவிக்க தமிழகத்தில் தோன்றிய தேர்தல் அறிக்கை கலாசாரமே காரணம். உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களும் இலவச லேப்-டாப் திட்டத்தை அமல்படுத்தியுள்ளன. இவ்வாறாக 2006ம் ஆண்டில் கருணாநிதி வெளியிட்ட தேர்தல் அறிக்கையானது தமிழகத்துக்கு மட்டுமின்றி நாட்டிற்கே முன்னோடியாக விளங்கியது. தேர்தல் அறிக்கைகளுக்கு 2006 தேர்தல் திருப்புமுனை தருணம் என்றால் மிகையாகாது.

  மேலும் படிப்பு..  திருப்புமுனை : அதிமுக ஆட்சியை பின்னாளில் பறித்த முன்னாள் வெற்றி அஸ்திரம்

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vaijayanthi S
  First published: