சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இலங்கைப் போரில் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு நினைவேந்தல் நடத்த முயன்ற திருமுருகன் காந்தி, வன்னியரசு உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2009 இலங்கைப் போரில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நினைவேந்தல் பேரணி மே 17 இயக்கம் சார்பில் பெசன்ட் நகர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. குழந்தைகள் முதல் பெரியோர் வரை சுமார் 500க்கும் மேற்பட்டோர் நினைவேந்தலில் பங்கேற்றனர்.
போரில் கொல்லப்பட்ட பாலசந்திரன், இசைப்பிரியா படங்களை ஏந்தி நடைபெற்ற பேரணியில், "இலங்கையில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும். போர் குற்றத்திற்கான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். தனி ஈழமே ஒரே தீர்வு" உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமுருகன் காந்தி, "இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு ஆண்டுதோறும் அனைத்து ஜனநாயக அமைப்புகளும் நினைவேந்தல் நடத்தி வருகின்றன. இறந்தவர்களுக்கு நீர்நிலை அருகே மரியாதை செலுத்துவது வழக்கம். அதேபோல் கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தி வந்திருக்கிறோம். கடந்த ஆண்டுகளில் மிக அமைதியாக நினைவேந்தல் நடந்திருக்கிறது.

நினைவேந்தல் நிகழ்வு
கடந்த அதிமுக ஆட்சியில் தடைசெய்யப்பட்டது. அதை மீறி நடத்தி இருக்கிறோம். இந்த ஆண்டு நினைவேந்தல் நடத்த அனுமதி கேட்டபோது, பெசண்ட் நகர் பகுதியில் இடம் கொடுப்பதாக காவல் துறை தெரிவித்தது. அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று காலை திடீரென அனுமதி கிடையாது என்று அரசு அறிவித்திருக்கிறது.
இது அதிர்ச்சியளிக்கிறது. நினைவேந்தல் நடத்துவது அடிப்படை உரிமை. அதை தடுக்க எந்த அரசுக்கும் அதிகாரம் கிடையாது. இது ஒரு பண்பாட்டு நிகழ்வு. அரசியல் நிகழ்வு அல்ல.
அதிமுக அரசு எடுத்த அதே நிலைப்பாட்டை திமுக எடுத்திருப்பது ஜனநாயக படுகொலை. திமுக இத்தகைய தடையை கொண்டு வரும் என எதிர்பார்க்கவில்லை. இது மனித உரிமை மீறல். தமிழகத்தில் அந்த மக்களுக்கு நினைவேந்தல் நடத்த முடியவில்லை என்றால், வேறு எங்கு நடத்துவது.
இந்த நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துவதில் அரசிற்கு என்ன சிக்கல்? என்ன நெருக்கடி எதிர்கொள்ளப் போகிறார்கள்? இதை ஏன் தடுக்கிறீர்கள்? இதை தமிழக அரசே நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறோம். ஏன் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது என முதல்வர் விளக்கம் கொடுக்க வேண்டும்.
மாநில அரசை வரி குறைக்கச் சொல்வதா? அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காட்டம்!
அதிமுக ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக செயல்பட்டதால் தான், திமுகவை மக்கள் ஆட்சிக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். மத்திய அரசு சொல்வதை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு செயல்படுகிறதா? ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பான நிலைப்பாட்டை தமிழ்நாட்டு முதல்வர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
விநாயகர் சிலையை கடலில் கரைக்க அவ்வளவு பாதுக்காப்பு, ஏற்பாடுகள் அரசு செய்யும் போது, நினைவேந்தலுக்கு ஏன் அரசு அனுமதி மறுக்கிறது’ என்று கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னிஅரசு, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி என நினைவேந்தலில் பங்கேற்ற 500 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.