முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு ரூ.1000 கோடி நிதி : தமிழ்நாட்டின் உரிமையை காக்க திருமாவளவன் வலியுறுத்தல்

மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு ரூ.1000 கோடி நிதி : தமிழ்நாட்டின் உரிமையை காக்க திருமாவளவன் வலியுறுத்தல்

தொல். திருமாவளவன்

தொல். திருமாவளவன்

Mekedatu Dam : மேகதாதுவில் 66 டிஎம்சி தண்ணீரைத் தேக்குவதற்கு சுமார் 9000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அணை ஒன்றைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு முடிவெடுத்து, இந்த ஆண்டு பட்ஜெட்டில் அதற்கென 1000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ள நிலையில், அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் உரிமை காக்க உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக  தொல் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகத்தில் ஆட்சி செய்யும் பாஜக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்காக 1000 கோடி ரூபாயை ஒதுக்கியிருப்பதோடு அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் கூட்டியிருக்கிறது. கர்நாடக அரசின் இந்த சட்டவிரோதப் போக்குக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சரும் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்நிலையில் காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட உடனடியாகத் தமிழ்நாடு அரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும், இங்கும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் எனவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.

காவிரி நடுவர்மன்றமும், உச்சநீதிமன்றமும் காவிரியின் குறுக்கே எந்தவொரு அணையும் கட்டப்படக்கூடாது. அவ்வாறு கட்டுவதாக இருந்தால் தமிழ்நாட்டின் ஒப்புதலை கர்நாடக அரசு பெறவேண்டும் எனத் தெளிவாகக் கூறியுள்ளன. உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதித்து கருத்தொற்றுமை ஏற்பட்டால் அன்றி எந்த ஒரு மாநிலமும் காவிரியின் குறுக்கே அணையைக் கட்ட முடியாது.

அப்படியிருக்கும் போது மேகதாதுவில் 66 டிஎம்சி தண்ணீரைத் தேக்குவதற்கு சுமார் 9000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அணை ஒன்றைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு முடிவெடுத்து இந்த ஆண்டு பட்ஜெட்டில் அதற்கென 1000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. ஒன்றிய அரசின் நீர்வளத்துறை அமைச்சர் கடந்த மார்ச் 5 ஆம் நாளன்று பெங்களூருவில் பேசும்போது “இந்த ஆண்டு முதல் புதிய மேகதாது திட்டம் தொடங்கும்” என அறிவித்திருப்பது மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இது மோடி அரசின் அப்பட்டமான தமிழர் விரோத நிலைபாட்டையே காட்டுகிறது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் காவிரி மேலாண்மை ஆணையத்தையும் கர்நாடக அரசு மதிக்காததில் வியப்பேதும் இல்லை. ஆனால், காவிரிப் பிரச்சனையில் நடுநிலை வகிக்கவேண்டிய ஒன்றிய அரசு கர்நாடகாவுக்கு ஆதரவளிப்பது சட்டத்துக்குப் புறம்பானதாகும். காவிரிப் பிரச்சனையில் அதிமுக அரசு திறமை வாய்ந்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடாமல் போனதால்தான் காவிரி நடுவர் மன்றம் நமக்கு ஒதுக்கிய தண்ணீரில் 14.75 டிஎம்சி-ஐ நாம் இழக்க நேரிட்டது.

Read More : உக்ரைனில் இருந்து நாடு திரும்பும் மாணவர்களின் மருத்துவ படிப்பு : பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்பதில் முனைப்பாக இருக்கும் திமுக தலைமையிலான இந்த அரசு அப்படி மெத்தனமாக இருந்துவிடாது என நம்புகிறோம். உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்துகிறோம்.

Must Read : ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்தார் - ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர் வாக்குமூலம்

காவிரிப் பிரச்சனையில் தமிழ்நாட்டின் ஒருமித்த உணர்வை வெளிப்படுத்தும் விதமாக இங்கும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்” இவ்வாறு திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

First published:

Tags: Karnataka, Mekedatu dam, Thirumavalavan, Viduthalai Chiruthaigal Katchi