Home /News /tamil-nadu /

ஆளுநர் விருந்தில் பங்கேற்கப்போவதில்லை- கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடர்ந்து திருமாவளவன் அறிவிப்பு

ஆளுநர் விருந்தில் பங்கேற்கப்போவதில்லை- கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடர்ந்து திருமாவளவன் அறிவிப்பு

திருமாவளவன்

திருமாவளவன்

ஆளுநர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்தில் பங்கேற்க இயலாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நாளை தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்ளும்படி முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, அவரது மனைவி லட்சுமி ரவி பெயரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஆளுநரின் இந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் கலந்துகொள்ளும்படி ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்பதில்லை என முடிவு செய்துள்ளது.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் குரலையும் தமிழக மக்களின் கோரிக்கைகளையும் முற்றாக நிராகரிப்பதோடு, அரசுக்கு மேலானதொரு அதிகார மையமாக செயல்பட தொடர்ச்சியாக ஆளுநர் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் தமிழக சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் எதிர்ப்பு மசோதா உள்ளிட்டவற்றை குடியசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் தமிழக சட்டமன்றத்தின் மாண்பை சிறுமைப்படுத்தும் நடவடிக்கைகள், துணைவேந்தர் நியமன பிரச்சனை, இந்தியாவின் பன்மைத்துவத்தை நிராகரிக்கும் உரை போன்ற நடவடிக்கைகளால் தமிழக மக்களின் உணர்வுகள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் சிபிஐஎம் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட யாரும் பங்கேற்க மாட்டார்கள்’ என்று தெரிவித்துள்ளது.

    இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இவ்வழைப்பிதழ் மாற்றத்தக்கதல்ல, ஆனால் நிராகரிக்கத்தக்கது. தமிழக சட்டமன்ற தீர்மானங்களை நிறுத்திவைத்து, தமிழக மக்களின் உரிமையை அவமதிக்கும் ஆளுநரின் தேநீர் அழைப்பை நிராகரிக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

    ஆளுநரின் தேநீர் விருந்து-நிராகரிக்கத்தக்கது: சு.வெங்கடேசன்

    இந்தநிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பியுமான திருமாவளவனும் ஆளுநர் விருந்தில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘சித்திரை 01- தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடும் ஆளுநர் அரசியல் கட்சித் தலைவர்களுக்குத் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். எனக்கும் அழைப்பு விடுத்துள்ள ஆளுநர் அவர்களுக்கு நன்றி. எனினும், அந்நிகழ்வில் நான் பங்கேற்க இயலாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    இருப்பினும், எந்த காரணத்துக்காக ஆளுநர் விருந்தில் பங்கேற்கவில்லை என்ற காரணத்தை திருமாவளன் குறிப்பிடவில்லை.
    Published by:Karthick S
    First published:

    Tags: Thirumavalavan

    அடுத்த செய்தி