விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில், ‘மது விற்பனை செய்யும் 'டாஸ்மாக்' கடைகளோடு சேர்த்து மது அருந்தும் கூடங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டிருப்பதை ரத்து செய்வதாகவும், அவ்வாறு உரிமம் வழங்க டாஸ்மாக் நிறுவனத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும், எனவே ஆறு மாதங்களுக்குள் மது அருந்தும் கூடங்கள் அனைத்தையும் மூட வேண்டும் என்றும்
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சரவணன் வழங்கியுள்ளத் தீர்ப்பைப் பாராட்டி வரவேற்கிறோம். தமிழ்நாடு அரசு மதுவிலக்குக் கொள்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
தமிழ்நாட்டில் 1937 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட மதுவிலக்குச் சட்டம்தான் இன்னும் நடைமுறையிலிருக்கிறது. அந்த சட்டத்தின் பிரிவு 4 (a)-இன் படி பொது இடத்தில் ஒருவர் குடிபோதையில் காணப்பட்டால் அவருக்கு மூன்று மாதம் சிறைத்தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கலாம். டாஸ்மாக் கடைகளோடு மது அருந்தும் கூடங்களை சேர்த்து நடத்தும் போது அங்கே மது அருந்துபவர் அருந்திய பின்னர் பொது இடங்களின் வழியாகத்தானே வீட்டுக்குச் செல்ல முடியும் ” ? என்று நீதிபதி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
‘மது அருந்துவதற்கு ஆதரவாகப் பண்டைய தமிழ் இலக்கியங்கள் பேசியிருந்தாலும் திருக்குறள் காலத்திலிருந்தே மது அருந்த கூடாது என்பதைப் பற்றியும் இலக்கியங்கள் வலியுறுத்தியதற்குச் சான்றுகள் உள்ளன’ எனவும் நீதிபதி சுட்டிக்காட்டியிருக்கிறார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யாமல் மது அருந்தும் கூடங்களை மூடுவதற்கு தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை 6 மாதங்களில் மூட உத்தரவு
‘மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 47 ல் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. ‘மதுவிலக்கைத் தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டும்; மது, போதைப்பொருள் விற்பனை மூலம் வசூலிக்கப்படும் வரி என்பது மிகவும் பிற்போக்கானது. அப்படி வரி வசூலிக்க எந்தவொரு நியாயமும் இல்லை. எனவே, அத்தகைய வரிகள் முற்றாக ஒழிக்கப்படவேண்டும்” என 1955 ஆம் ஆண்டு ‘மதுவிலக்கு விசாரணைக் குழு’ பரிந்துரைத்துள்ளது.
1963 ஆம் ஆண்டு இந்திய ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி தேக் சந்த் குழுவும் அவ்வாறே பரிந்துரை செய்திருக்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்தால் ‘மதுவிலக்கை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என தி.மு.க தலைவர் கருணாநிதி 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அறிவித்ததையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் நினைவூட்டுகிறோம். எனவே, தமிழ்நாட்டில் படிப்படியாக முழுமையாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.