சசிகலா விலகல்... பாஜகவிற்கு மறைமுகமாக ஆதரவு தரவேண்டும் என்று எடுத்த முடிவா? - திருமாவளவன்

சசிகலா விலகல்... பாஜகவிற்கு மறைமுகமாக ஆதரவு தரவேண்டும் என்று எடுத்த முடிவா? - திருமாவளவன்

திருமாவளவன்

தமிழகத்தில் சனாதன சக்திகளை காலூன்ற விடக்கூடாது... திருமாவளவன் கருத்து

  • Share this:
    சசிகலா, அரசியலிலிருந்து விலகுவதாக வெளியிட்டிருக்கும் அறிக்கை அமைதியான வாழ்க்கை வேண்டும் என்று எடுத்த முடிவா? அல்லது மறைமுகமாக பாஜகவிற்கு ஆதரவு தரவேண்டும் என்று எடுத்த முடிவா என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்து ஒப்பந்தத்தில் கையெழுத்தான பிறகு செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் தொல் திருமாவளவன், ''திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகத்தில் 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தமிழகத்தில் சூழ்ந்திருக்கும் சனாதன பேராபத்திலிருந்து தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டிய யுத்த களமாக இந்த தேர்தல் அமைந்திருக்கிறது.

    தமிழ்நாட்டையும் பாண்டிச்சேரியும் குறிவைத்து பாரதிய ஜனதா கட்சி மற்றும் சங்பரிவார் அமைப்புகள் பல்வேறு சதி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை அவர்களால் காலூன்ற முடியாமல் வேர் ஊன்ற முடியாத நிலை கடந்த 10 ஆண்டுகளாக நிலவி வருகிறது.

    எந்த காலத்திலும் பாஜக வெற்றி பெற முடியாது என்ற நிலையில், வட கிழக்கு மாகாணங்களில் பல்வேறு சூழ்ச்சிகளை அரங்கேற்றி ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்தனர். ஆனால், தமிழ்நாட்டில் அவர்களால் எதையும் செய்ய இயலவில்லை. உத்தரபிரதேசம் மத்திய பிரதேசம் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர முடிந்தவர்களால் தமிழகத்தில் எந்த மாற்றத்தையும் அவர்களால் செய்ய முடியவில்லை.

    கருணாநிதி ஜெயலலிதா இல்லாத சூழ்நிலையில் சமூகநீதி மன்னனான தமிழகத்தில் சமூகநீதியை ஒழித்துவிட வேண்டும் சாதி வெறியும், மத வெறியை தூண்ட வேண்டும் என்று திட்டம் போட்டு செயல் பட்டு வருகிறது பாரதிய ஜனதா கட்சி. பாண்டிச்சேரியில் தேர்தல் தேதி அறிவிக்கும் ஒரு சில நாட்களுக்கு முன்னர் அநாகரிக, அருவருக்கத்தக்க அரசியலை அரங்கேற்றி ஆட்சியைக் கவிழ்த்தது.

    அதே போன்று தமிழகத்திலும் தில்லுமுல்லு வேலைகளை செய்து, திராவிட கட்சிகளை ஒழித்து சமூக நீதியை அழித்தொழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி செயல்பட்டு வருகிறார்கள். மக்கள் நல கூட்டணி யில் இருந்து பிரிந்த 2017 ஆம் ஆண்டு முதல் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகள் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் பயணித்து வருகிறது.

    சனாதன சக்திகளை காலூன்ற விடக்கூடாது என்ற அடிப்படையில், திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி பயணித்து வருகிறது. இந்நிலையில் திமுகவுடன் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் 6 தொகுதிகளில் தேர்தலில் போட்டியிடுவது என முடிவெடுத்துள்ளோம்.

    Must Read: திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு: ஒப்பந்தம் கையெழுத்து

     

    நிர்வாகிகள், 6 தொகுதிகளுக்கு ஒப்புக் கொள்ள வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், தமிழகத்தில் உள்ள சூழலைக் கருத்தில் கொண்டு எதிர்கால அரசியலை கருத்தில் கொண்டும் திமுகவுடன் தொடர்வது முதன்மையானது, மதச்சார்பற்ற சக்திகளின் வாக்குகள் எக்காரணத்திற்காகவும் சிதறி விடக்கூடாது. அப்படி வருவதற்கு வழி தந்துவிடக் கூடாது என்றும் சனாதன சக்திகளை துரத்தியடிக்க வேண்டும் என்ற கொள்கை உறுதியுடனும் விடுதலை சிறுத்தைகள் திமுகவுடன் தொகுதி உடன்பாட்டில் ஏற்படுத்தி இருக்கிறோம்.

    மதச்சார்பற்ற சக்திகளின் வாக்குகள் சிதறினால் பாரதிய ஜனதாவின் சதித் திட்டங்களுக்கு துணைபோவதாக அமைந்துவிடும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி எண்ணுகிறது. உடனிருக்கும் கூட்டணி கட்சிகளை வலுவிழக்க செய்வதில் பாஜக தரப்பினர் கைதேர்ந்தவர்கள். அந்த வகையில் பாண்டிச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் வலுவிழக்கச் செய்து வருகிறார்கள் தமிழகத்திலும் அதிமுகவை வலுவிழக்கச் செய்ய திட்டம் போட்டு வருகிறார்கள்.

    திமுக தலைமையிலான கூட்டணியை வலுப்படுத்த செய்வதும், இந்தக் கூட்டணி வெற்றி பெற செய்வதும் தமிழகத்தின் இப்போதைய தேவையாக இருக்கிறது என்பதால் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆறு தொகுதியிலும் தனி சின்னத்தில் போட்டியிடும்.

    தமிழ்நாட்டில் அண்ணா மற்றும் கலைஞர் கட்டிக் காப்பாற்றிய சமூகநீதியை சனாதன சக்திகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கிறது. தமிழ்நாட்டை குறி வைத்துள்ள சனாதன சக்திகளை விரட்டியடிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தேர்தல் பிரச்சாரம் இருக்கும்.

    Must Read: சசிகலாவின் துரோகிகள் வெளியில் இல்லை.. எங்கள் குடும்பத்தில்தான் இருக்கிறார்கள் - திவாகரன்

     

    சசிகலா, அரசியலிலிருந்து விலகுவதாக வெளியிட்டிருக்கும் அறிக்கை மிகவும் கவனிக்கத்தக்கது. அமைதியான வாழ்க்கை வேண்டும் என்று எடுத்த முடிவா? அல்லது மறைமுகமாக பாஜகவிற்கு ஆதரவு தரவேண்டும் என்று எடுத்த முடிவா, அல்லது அமமுக - அதிமுக இணைப்பதற்காக இந்த முடிவா? என்று எண்ணத் தோன்றுகிறது.

    அதிமுக வலிமை பெறுகிறது என்றால், அது பாஜக வலிமை பெறுகிறது என்று பொருள். அதிமுக-பாஜக -பாமக ஆகிய மூன்று கட்சிகளும் தங்களுடைய நலன்களை கருதி, சமூக நீதியை குழிதோண்டிப் புதைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இது மிகவும் கவலை அளிக்கிறது. இவை எல்லாவற்றையும் தாண்டி திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்.” இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
    Published by:Suresh V
    First published: