தமிழக ஆளுநரை திரும்பப் பெறுமாறு குடியரசுத் தலைவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார்.
குடியரசுத் தலைவருக்கு இன்று திருமாவளவன் எம்.பி எழுதியுள்ள கடிதத்தில், அரசியல் அமைப்புச் சட்ட சீர்குலைவுக்கு ஆளுநர் வழிகோலுவதாகவும் உடனடியாக அவரை திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, ”அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு எண்- 155ன் கீழ் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் தாங்கள் ஆளுநரை நியமிக்கிறீர்கள்.
அரசியலமைப்புச் சட்ட உறுப்பு எண்-163, ஆளுநரானவர் மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும் என்று தெளிவாக வரையறுத்துள்ளது. ஆனால், தற்போதுள்ள தமிழக ஆளுநர் மேதகு பன்வாரிலால் புரோஹித் அவர்கள், இந்த அரசியலமைப்புச் சட்டக் கடமையை நிறைவேற்றாமல் இருப்பது மட்டுமின்றி மாநில அரசின் செயல்பாடுகளுக்கு பல்வேறு தடைகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இட ஒதுக்கீடு வழங்குவதற்காக தமிழக சட்டப்பேரவையில் தற்போது உள்ள தமிழக அரசு ஒருமனதாக சட்டம் ஒன்றை நிறைவேற்றியது. இந்திய உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 2020ல் வழங்கிய தீர்ப்பிலும், சென்னை உயர் நீதிமன்றம் ஜூன் 2020ல் வழங்கிய தீர்ப்பிலும் ’இட ஒதுக்கீட்டுக்கு உள்ளே உள் ஒதுக்கீடு செய்வதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது’ என்று தெளிவுபடுத்தியுள்ளன. எனவே, தற்போது தமிழக அரசு நிறைவேற்றியுள்ள சட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதாகும். ஆனால், தமிழக ஆளுநர் அந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்காமல் தேவையற்ற கால தாமதத்தைச் செய்து கொண்டிருக்கிறார்.
நீட் தேர்வு முடிவுகள் ஏற்கனவே வெளியாகிவிட்டன. மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு தவிப்புடன் காத்திருக்கிறார்கள். மாநில அரசும் அதற்கான கலந்தாய்வு செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டது. ஆனால், ஆளுநரின் முரண்பட்ட அணுகுமுறை மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை நடவடிக்கை அனைத்தையும் சீர்குலைத்திருக்கிறது. தமிழக ஆளுநர் தமிழக அரசுக்குத் தடை போடுவது மட்டுமின்றி, அரசியல் அமைப்புச் சட்டச் சிக்கலையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். இது ஜனநாயகத்துக்குப் பெறும் அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது.
எனவே, இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு, தமிழக ஆளுநரை உடனடியாக திரும்பப்பெற்று அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்குமாறு தங்களை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.”
இவ்வாறு அக்கடிதத்தில் தொல் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Governor Banwarilal purohit, President Ramnath Govind, Thol. Thirumavalavan